For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு பரிகார தலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமையான இன்று குரு பரிகார தலமாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது.

காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார்.

"ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண் மீதினில்''. என்று இந்த ஆலயத்தின் பெருமையை உணர்த்துகிறது.

குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் "சுக்ரவார அம்பிகை" என்பதாகும்.

விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இதற்கு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.

கைலாசத்தில் பார்வதி தோழிகளோடு பந்தாடிய போது உயரப் போன பந்தை பிடிக்க கையை உயர்த்தி பந்தை எதிர்பார்த்து நிற்க வான வீதியில் சென்ற சூரியன் தன்னை நிற்க சொல்வதாக கருதி தேரை நிறுத்த அவன் தொழில் தடைபட்டு உலகம் அவதியுற்றது. உடன் அனைவரும் சிவ பெருமானிடம் முறையிட அவர் சாபம் காரணமாக பார்வதி பூலோகத்தில் அவதரித்து தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்டார்.

மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்,

உற்சவர்:தட்சிணாமூர்த்தி

அம்மன்/தாயார்: ஏலவார்குழலிதல

விருட்சம்: பூளை என்னும் செடி

தீர்த்தம்:பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.

புராண பெயர்:இரும்பூளை, திருவிரும்பூளை

ஊர்:ஆலங்குடி

மாவட்டம்: திருவாரூர்

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

சுந்தரரை காத்த இறைவன்

சுந்தரரை காத்த இறைவன்

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.

அம்மை தழும்புகள்

அம்மை தழும்புகள்

தட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் சுந்தரர் சிலை இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நாகதோஷம் நீங்க வழிபாடு

நாகதோஷம் நீங்க வழிபாடு

நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சிறப்பு விழாக்கள்

சிறப்பு விழாக்கள்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும் பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. தைப்பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியைக் கொண்டு 10 நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

மாசியில் சிறப்பு

மாசியில் சிறப்பு

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

நெய் தீபம்

நெய் தீபம்

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது. கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

English summary
Alangudi is the divine place, where Lord Guru can be propitiated in the form of Sri Dakshinamurthy. Alangudi is the holy abode of Jupiter and a divine place where one could propitiate Jupiter. Lord Shiva is manifested here in the form of Lord Guru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X