
ஜூலை மாத ராசி பலன் 2022: வேலையில் மாற்றமும் முன்னேற்றமும் யாருக்கு கிடைக்கும் ?
சென்னை: ஜூலை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையினால் மீன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் பொருளாதார நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
ஜூலை மாத ராசி பலன் 2022: குரு தரும் யோகம்..யாருக்கு சாதகமாக இருக்கும் தெரியுமா?
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொறுத்து மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மீனம்
உங்கள் ராசியில் ராசிநாதன் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். விரைய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் வக்ரமடைந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இரண்டாம் வீட்டில் செவ்வாய்,ராகு, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் புதன் சூரியன் என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதம் என்னென்ன விசயங்களில் சாதகமாக உள்ளது என்று பார்த்தால், குரு சாதகமாக உள்ளதால் சுப காரியங்கள் நடைபெறும். சனி மூலம் சில தடைகள் ஏற்பட்டாலும் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். திடீர் பண வரவு வரும். குடும்பத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

வேலையில் புது மாற்றம்
வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு செவ்வாய் குடும்ப உறுப்பினர்களிடைய சிறு சண்டை சச்சரவை ஏற்படுத்துவார். திருமணமான தம்பதியர் அமைதி காக்கவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மாத பிற்பகுதியில் சூரியன், புதன் ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையும் போது திருமண முயற்சி தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் கூடி வரும்
சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். காதலிப்பவர்களுக்கு இது கொண்டாட்டமான மாதம். குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வீர்கள். பெண்களுக்கு கணவரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். செய்யும் முதலீடுகளுக்கு மாத பிற்பகுதியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

பதவி அதிகாரம் தேடி வரும்
மாணவர்களுக்கு இது அற்புதமான மாதம். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். உயர்கல்வி யோகம் கைகூடி வருகிறது. செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மன குழப்பங்கள் நீங்கும். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் காரிய வெற்றி உண்டாகும். வெட்டி பேச்சு பேச வேண்டாம். மாத முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்களில் சில பாதிப்புகள் வரலாம். கண் எரிச்சல், தலைவலி கோளாறுகள் வந்து நீங்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை. காரம், புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும். பதவி அதிகாரம் வேலை வாய்ப்பில் வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு புதிய துவக்கத்திற்கான வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது.