For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி

ஜூன் மாதம் பிறக்கப் போகிறது. கிரகங்களின் கூட்டணி இடம்மாறுகிறது. புதிய கூட்டணியின் அடிப்படையில் இந்த மாதம் மேஷம் ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலே போதும் புதிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

Google Oneindia Tamil News

மதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.

மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது, எந்த ராசிக்காரர்களுக்கு கிரகம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.


மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமான மாதம். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இந்த மாதம் ராசியில் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் புதன், சூரியன், மூன்றாம் வீட்டில் ராகு செவ்வாய் எட்டில் குரு ஒன்பதில் சனி, கேது என உள்ளது. மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். ராகு செவ்வாய் கூட்டணியால் குழப்பங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் கூட்டணி இடம் மாறுவதால் குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். நான்கு கிரகங்கள் மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களை வச்சு செய்யப்போகிறார்கள். சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். பிசினஸ் ரொம்ப மந்தமா போகும். வாங்கிப் போட்ட பொருட்கள் எல்லாம் விற்காம தேங்கி நிற்கும். உங்களின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே பண விசயங்களில் ரிஸ்க் எடுங்க. மாத கடைசியில புதிய வேலை கிடைக்கும். காரணம் கிரகங்கள் கூட்டணி பிரிகிறது. செவ்வாய் கடகத்திற்கு நகர்கிறார். புதனும் கடகத்திற்கு மாறுவதால் நன்மை நடைபெறும். குரு பார்வை 2ஆம் வீட்டின் மேல் விழுகிறது. சுக்கிரன் ரிஷபத்திற்கு வரும் போது காதல், திருமணம் கைகூடி வரும். ஜூன் மாதம் பேசி முடிவு செய்ய வேண்டாம். சுப செலவுகள் ஏற்படும். உறவுகள் வழியில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க யோசித்து முடிவெடுங்க.

ரிஷபம்

ரிஷபம்

இந்த மாதம் ராசிக்கு 12ல் சுக்கிரன் சுக்கிரன், ராசியில் புதன், சூரியன், இரண்டாம் வீட்டில் ராகு செவ்வாய் ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. மாத ஆரம்பத்தில் சுப விரையங்கள் ஏற்படும். ராசியில் உள்ள புதன் உங்க தன ஸ்தானத்திற்கு நகர்வதால் பணவரவு அதிகரிக்கும் எப்போதோ கடன் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்திருந்த பணம் இந்த மாதம் உங்களைத் தேடி வரும். நாக்கில் சனியா என்று கேட்பார்கள். காரணம் பேசுவதெல்லாம் வம்பு வழக்கில் முடியும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை. வீட்டிலோ, வெளியிடங்களிலோ வாக்குவாதத்தை தவிருங்கள். வாக்கு வாதம் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த மாதம் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். செவ்வாய் ராகு குடும்ப உறவுகளை பாதிக்கும் தொல்லைகள் ஏற்படும். பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை தேவை. புரிந்து செயல்படுங்கள் நன்மையே நடைபெறும்.

23ஆம் தேதிக்கும் மேல் லேசாக நல்லது நடைபெறுவது போல இருந்தாலும் சனி கேது விடாது. தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம், ரொம்ப பாதுகாப்பு தேவை. அஷ்டமத்து சனியால் பொருள் தொலையும். இந்த மாதம் கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் ஜூன் மாதத்தில் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். 4ஆம் தேதி 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். 16ஆம் தேதி வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் ராசிக்குள் வந்து அமர்கிறார். புதன் இரண்டாம் தேதி முதல் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஏற்கனவே ராசியில் ராகு செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஆறாம் வீட்டில் குரு களத்திர ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத கடைசியில் புதன் செவ்வாய் என கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்வது சாதகமான அம்சம். பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மன சோர்வு உடல் சோர்வை தரும் ஆனாலும் வழக்கம் போல வேலையை செய்யுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். கோவிலுக்கு போங்க. குல தெய்வத்தை கும்பிட்டால் நல்ல விசயங்கள் தானாக நடைபெறும். காதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம், பொறுமை அவசியம். இல்லாவிட்டால் காதல் கசக்குதய்யா என்று பாடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மிதுனத்தில் ராகு செவ்வாய் இருப்பதால் குழப்பம் அதிகம் ஏற்படும் மருத்துவ செலவு வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதிக்கும் வகையில் வேலை அமையும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.

கடகம்

கடகம்

ஜூன் மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதம். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வீடு அமையும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். மன திருப்தியான வேலை அமையும். நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடும் பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கைகூடி வரும். பயணத்தில் கவனம் தேவை. எதிரிகள் விசயத்தில் கவனம் தேவையற்ற வம்பு வழக்குகளில் பகைத்துக்கொள்ள வேண்டாம். மனைவியோடு கருத்து மாறுபாடு வேண்டாம். மனைவி சொல்லே மந்திரம் என்று இருங்கள் இந்த மாதத்தை பிரச்சினை இன்றி ஓட்டி விடலாம். குல தெய்வத்தை வழிபட்டால் பதவி உயர்வை தரும். பூர்வீக சொத்துக்கள் கை கூடி வரும். வீட்டில் பெரியவர்கள் ஆதரவாக இருந்தாலும் 16 ஆம் தேதிக்கு மேல் உறவினர்களிடம் கருத்து மாறுபாடுகள் ஏற்படும். சொத்து விசயங்களில் அமைதியாக இருக்கவும். 23ஆம் தேதி செவ்வாய் ராசியில் பெயர்ச்சி அடைவதால் மாற்றம் நடைபெறும். குருவின் பார்வை சுக்கிரன் மீது விழும் நேரத்தில் கிடைக்கும் இடமாற்றம் நன்மையில் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் எழுதும் அரசு தேர்வுகளால் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கவும் ஏற்ற மாதம் இது. மாத பிற்பகுதியில் இடம் மாறும் சூரியனால் வருமானம் அதிகரிக்கும், லாபம் கூடும். பொன்னான நேரம் கைகூடி வருகிறது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஏற்படும். அரசுத்துறையில் வளர்ச்சிகள் உண்டாகும். வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் வெளிநாட்டு வாய்ப்பு, திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும். கடல் கடந்த பயணங்கள் அமையும். அமெரிக்கா வாய்ப்புகள் அமையும் மூத்த சகோதரர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சனிபகவான் கேது உடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். வம்பு வழக்குகள் சமாதானத்தில் முடியும். மனைவி உடல் நலனில் அக்கறை தேவை. அனைத்து வகையிலும் உயர்ந்த மாதம்.

வெளி உணவுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு நல்ல முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வெளிநாடு யோகம் கைகூடி வரும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்களுக்கு நன்மை தரும் மாதம். 23ஆம் தேதிக்கு மேல் பொழுது போக்கு பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு கல்விக்காக பயணம் அமையும். செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் திடீர் இழப்பு ஏற்படும் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியில்லாத நிலை இருக்கிறது. இதற்குக் காரணம் அர்த்தாஷ்டம சனிதான். கவலை வேண்டாம். காலங்கள் மாறும் கவலைகளும் மாறும். சூரியனும் சனியும் பார்த்துக்கொள்வதால் செவ்வாய் சனி பார்வை இருப்பதால் சில உடல்நல தொந்தரவுகள் ஏற்படும். தடைகள் தாமதங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் முயற்சிகளில் இழுபறி ஏற்படும். குரு பார்வை இருந்தாலும் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வில்லங்கள் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் மட்டுமே நல்ல பலன்களை தருவார். வேகத்தோடு எழுந்தாலும் அயற்சியோடு அமரவேண்டியிருக்கும். செவ்வாய் சனி பார்வை இருப்பதால் சில உடல்நல தொந்தரவுகள் ஏற்படும். சுக்கிரன் 29ஆம் தேதி பத்தாம் வீட்டிற்கு வரும் போது வெளிநாடு செல்லும் யோகம் வரும். படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்வீர்கள். மனைவி உடனான பிரச்சினைகள் தீரும். கவலைகள் மாறும். அவசரப்பட வேண்டாம் கவனமாக காலடியை எடுத்து வையுங்கள். வயதானவர்கள் எச்சரிக்கை தேவை. ரிஸ்க் எடுக்காதீங்க ரஸ்க் ஆயிடுவீங்க. கடன் முயற்சிகளை ஒத்திப்போடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகரிக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறையும். வீடு கிரகப்பிரவேசம் நடைபெறும். வங்கி கடன் கிடைக்கும்.

உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாய், புதன் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு உதவிகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த வேலைகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உள்ளதால் வெற்றி மீது வெற்றி தேடி வரும். செய்யும் முயற்சிகள் கைகூடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது அதி அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வருமானம் அதிகரிக்கும். இது வெற்றி மீது வெற்றி தேடி வரும் காலம். சுக்கிரனால் வீட்டில் குடும்ப சுப நிகழ்ச்சிகள் இந்த மாதம் அதிகம் நடைபெறும் என்பதால் பெண்கள் ரொம்ப பிஸியாகவே இருப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் வீட்டு வேலைகள் சரியாக இருக்கும் நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம். சனி கேது உடன் பின்னோக்கி வருவதால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் கண்டு கொள்ளாமல் பயணம் செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஏழரை சனியால் போராட்டமே வாழ்க்கையாகிப் போனது. விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். பணம் செலவாகிக்கொண்டே இருக்கிறது. அதிர்ஷ்டமே இல்லை. வேலை செய்தாலும் வருமானம் கூட கிடைப்பதில்லை அதிர்ஷ்டம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. குடும்ப ஸ்தானத்தில் சனி கேது குடும்பத்தில் பிரச்சினை, பணவரவில் தடை ஏற்படும். பொறுமை, கடவுள் நம்பிக்கை தேவை. எட்டாம் வீட்டில் செவ்வாய் ராகு எல்லாத்தையும் தலைகீழாக நடத்துவார். மன நெருக்கடியை ஏற்படுத்துவார். மன உளைச்சலுடன் பிடிக்காத வேலையை வேறு வழியின்றி செய்து வருவீர்கள், சகிப்புத்தன்மை அவசியம். சந்திரன் நீசம் பெற்றிருப்பதால் கவனம் தேவை. ஜென்ம ராசியில் உள்ள குரு சுக்கிரனை பார்வையிடுகிறார். என்ன நினைச்சாலும் அதற்கு தலைகீழாக நடக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். வேலையில் சிக்கல்கள் ஏற்படும். சனி பெயர்ச்சி நடந்தால்தான் பிரச்சனை தீரும். குடும்பத்தில் நெருக்கடி, மனதில் நெருக்கடி ஏற்படும். சனி பெயர்ச்சிக்குப் பிறகுதான் நன்மைகள் நடக்கும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலையில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியவைக்கிற மாதம் இது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நெருப்பு, மின்சாரத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக மெதுவாக போங்க. 23ஆம் தேதி செவ்வாய் ராகுவை விட்டு விலகும் காலத்தில் நன்மை நடைபெறும், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ராசியில் ஜென்ம சனி, கேது உடன் இணைந்திருப்பது சரியில்லை. மனக்குழப்பம் ஏற்படும். வலிகளை சுமந்து கொண்டிருப்பீர்கள். கொடுத்த பணம் கூட பாக்கெட்டில் வராது. வெளியில் சொல்ல முடியாமல் மன குழப்பத்தில் இருப்பீர்கள். ராசியில் சனி கேது ஒரு மன உளைச்சலை தருவார். ஏழாம் வீட்டில் உள்ள ராகு, செவ்வாய் குடும்பத்தில் சண்டையை கொடுப்பார். வரன் அமைவது படு சிக்கலா இருக்கிறது. வேலை போய் விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பீர்கள். குடும்பத்தில் தகராறு குழப்பம், பணத்தில் நஷ்டம் என எத்தனையோ மன வலிகளோடு போராடி வருகிறீர்கள். எந்த கோளுமே உங்களுக்கு சாதகமே இல்லை. ஆறில் சூரியன் மன உளைச்சலை தருவார். நினைச்சது ஒன்னு நடக்கிறது ஒன்றாக இருக்கிறது. மனக்கவலை நிச்சயமாக மாறும். மன சக்தியை அளிப்பார். வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காதலிப்பவர்கள் கவனமாக பேசுங்கள். சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பிரச்சினையை ஏற்படுத்தி விடும். போராட்டமே வாழ்க்கையா இருக்கிறது வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை கேட்பது நல்லது. கடவுளை வணங்குங்கள் அவரோட ஆசிர்வாதம் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களே இந்த மாதம் சூரியனின் நகர்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. புதன் மிதுனத்திற்கு மாறுகிறார். செவ்வாய் ராகு உடன் இணைவதால் பெரிய தொந்தரவு எதுவும் இருக்காது என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சலை ஏற்படுத்துவார். மாணவர்களுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். மனம் விரும்பிய வாழ்க்கைத்துணை அமையும். திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். பெண்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. பணவரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். வேளைப்பளு அதிகரிக்கும். சுக்கிரன் ரிஷபத்திற்கு நகர்வதால் மன நிறைவு தரும். வண்டி வாகன வசதி, வீடு நிலம் வாங்கலாம். செவ்வாய் சனி பார்வை வெறுப்புணர்வை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். ரொம்ப கோபப்படாதீங்க. மனதில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட வேண்டாம். பொறுமையும், நிதானமும் அவசியம். ஏழரை சனி காலத்தில் வீண் செலவு, பொருள் விரையம் ஏற்படும். பாதிப்பு ஏற்படும் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. புது முயற்சிகளில் கவனம் தேவை.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் புதன் இடமாற்றம் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, லாப ஸ்தானத்தில் கேது சனி இருப்பதால் திட்டமிடாத செயல்கள் எதிர்பாராமல் நடக்கும். இதெல்லாம் எனக்கு ஏன் நடக்குது என்று யோசிப்பீர்கள். சுக்கிரன் 4ஆம் வீட்டிற்கு மாறுவதால் வாழ்க்கைத்துணையை மகிழ்ச்சி படுத்தும் வகையில் செயல்கள் செய்வீர்கள். பிசினஸ் தொந்தரவின்றி போகும். 10ல் குரு தனித்து நிற்பதால் பிரச்சினைகள் எளிதில் தீரும். இடையூறு எதுவும் நடைபெறாது. ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4ல் இருந்து 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மைதான். காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை சரியாக தேர்வு செய்வீர்கள். குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உஷ்ணம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவார். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் சாதகமாக இல்லை. சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் சூரியன் இடம் மாற்றத்தால் வேலையில் பிரமோசன் கிடைக்கும். குடும்ப உறவுகளில் மனக்கசப்பு ஏற்படும். மனைவி, குழந்தைகள் மீது அதிகாரத்தை காட்டுவதன் மூலம் பாதிப்பு ஏற்படும். புதன் திருமண தடைகளை ஏற்படுத்தும். 23ஆம் தேதிக்கு மேல் புதன், செவ்வாய் இணைந்து கடகத்தில் இணைவதால் கல்யாண யோகம் கைகூடி வரும், குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பெரியவர்களின் மூலம் வழிகாட்டுதல் அமையும். சனி செவ்வாய் பார்வையால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. திட்டமிடாத பயணங்கள் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும். பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம், ராசி நாதனை குரு பார்வையிடுவதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நிதானம் தேவை. குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். பவுர்ணமி நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள்.

English summary
June 2019 monthly horoscope love, career, health and money! Find out the full predictions for Mesham to Meenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X