For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து துன்பங்களில் இருந்து கவசமாக காக்கும் ஆபத்துதாரனர் - மூல நக்ஷத்திர பைரவர் வழிபாடு!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் தேய்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று மாலை 5.44 மணி வரை அஷ்டமி திதி உள்ள நிலையில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு சாஸ்திரங்கள் கூறுகிறது. சீர்காழி சட்டநாதர், சென்னை கபாலிஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைகாவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி, தருமபுரியில் தகடூர் பைரவர் போன்ற ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

பைரவ மூர்த்தி:

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

kaal bhairavasshtami to appease the lord of time

லயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

பைரவர் தோன்றிய வரலாறு:

சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி " என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால், " முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

ஈசன் சினம் தனிந்து, "வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு" என அருளினார். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

kaal bhairavasshtami to appease the lord of time

அஷ்டமியும் பைரவ வழிபாடும்:

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாக போற்றப்படுகின்றது. அஷ்டமி திதிதியில்தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

சனைச்சரனின் குரு பைரவர்:

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

kaal bhairavasshtami to appease the lord of time

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

ஜோதிடத்தில் காலபைரவர்:

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். கால பைரவ மூர்த்தி காலனை வென்றவர். மேலும் ஜோதிடத்தில் ஆயுள் காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால் பைரவரை வணங்குவோர்க்கு எம பயம் இருக்காது. மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துக்கள் மற்றும் நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

kaal bhairavasshtami to appease the lord of time

காலபுருஷ தத்துவம்:

ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பை பற்றி சொல்வது , இதன்படி மேஷம் முதல் வீடாகவும் , மீனம் 12 ம் வீடாகவும் அமையும் , சுய ஜாதக அமைப்பிற்கு பலன் காணும்பொழுது , இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்பு படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்.

காலபுருஷனும் கால பைரவரும்:

சிவ ஸ்வருபமான கால பைரவரை "மஹா கால' என்றும், 'காலாக்னீ ருத்ராய' என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்க்கு கட்டுபடாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

kaal bhairavasshtami to appease the lord of time

கால புருஷ சக்கரம்:

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களை கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் . இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றோரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும்.

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாக பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கினயறார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

kaal bhairavasshtami to appease the lord of time

மூலநக்ஷத்திரகாரர்கள் வணங்கவேண்டிய சீர்காழி சட்டைநாதர்:

திருக்கயிலாயத்தைத் தனது சிறப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் குரு மூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும், சங்கம மூர்த்தமாக பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தும் வருகிறார். இம்மூன்று மூர்த்தமாக தனித்தனியே பல தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், இத்தலத்தில் மூன்று மூர்த்தங்களும் ஒருங்கே விளங்க எழுந்தருளியுள்ளார்.

லிங்க மூர்த்தம் - இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீசுவரரே லிங்க மூர்த்தம். இறைவி பெயர் திருநிலை நாயகி. அம்மையின் ஆலயம் தனியே உள்ளது. குரு மூர்த்தம் - இங்கு மலை மீது எழுந்தருளியிருக்கும் தோணியப்பரே குருமூர்த்தம். சம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு இவரே. அம்மையின் பெயர் பெரியநாயகி. சங்கம மூர்த்தம் - இம் மூர்த்தம் சிவ மூர்த்த தலங்களுள் ஒன்றான பைரவ மூர்த்தம். இந்த ஆலயத்தில் பைரவர் எட்டு வடிவங்களில் தோன்றி, சுதந்திர பைரவர், சுயேச்சை பைரவர், லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பிச்சையா பைரவர், நிர்மாண பைரவர், பீஷ்ண பைரவர் எனப் பெயர் பூண்டுள்ளார்.

இந்த அஷ்ட பைரவர்களும் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் உள்ளனர். இந்த ஆலயத்தில் அருள்மிகு சட்டைநாத சுவாமியே பிரதானம். அவரது பெயரிலேயே இந்தக் கோயில் விளங்குகிறது.கீழே கோவில் கொண்டிருப்பவர் பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீசுவரர், இடையில் நடுத்தளத்தில் உள்ளவர் தோணியப்பர். மேலே, இரண்டாம் தளத்தில் உள்ளவரே சட்டைநாதர்.வாமன அவதாரகுள்ள வடிவில் இருந்த விஷ்ணு மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டார். மகாபலியும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார். உடனே விஷ்ணு ஓங்கிய நெடிய அவதாரம் எடுத்தார். முதல் அடியாக மண்ணுலகையும், இரண்டாவது அடியாக விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது மகாபலியின் தலைமீது காலை வைத்து அழுத்தி, அவனைப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.

இதன்பின் விஷ்ணுவுக்குக் கர்வம் தலைக்கேறியது. தானே உயர்ந்தவன் என்ற மமதை ஏற்பட்டது. தேவர்கள் அவரின் கர்வத்தை அடக்கச் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் வடுகநாதர்பைரவர் உருவெடுத்து விஷ்ணுவை மார்பில் அடித்து வீழ்த்தினர்.விஷ்ணு இறந்ததும் லட்சுமி சிவபெருமானிடம் ஓடோடிச் சென்றாள். தனக்கு மாங்கல்யப் பிச்சை தரும்படி கதறினாள். சிவபெருமான் விஷ்ணுவுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவரை உயிர் பெற்று எழச் செய்தார்.விஷ்ணு, சிவபெருமானிடம் தன் எலும்பையும் தோலையும், அணிந்து கொள்ள வேண்டுமென வேண்ட, இறைவனும் அவருடைய எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டை நாதர் ஆனார்.

பெண்கள் தலையில் இருக்கும் பூவைக் கையில் எடுத்துக் கொண்டும், ஆண்கள் மேலே சட்டை இல்லாமலும்தான் சட்டைநாதரைத் தரிசிக்க வேண்டும். வெளியே வந்தபின் பூவை மறுபடியும் தலையில் வைத்துக் கொள்ளலாம் என்பது இங்கு பழக்கமாக இருந்து வருகிறது.இரண்டு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் ஐந்தடி உயரத்தில் சட்டை நாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.வெள்ளி தோறும் சட்டை நாதர் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. நெய் வடையும் பாயசமும் இவரது பிரசாதங்கள்.சட்டை நாதரைத் தரிசித்தால் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

English summary
Kalashtami, which is also known as Kala Ashtami, is observed every month during Ashtami Tithi of Krishna Paksha. Devotees of Lord Bhairav keep fast and worship Him on all Kalashtami days in the year. The most significant Kalashtami, which is known as Kalabhairav Ashtami, falls in the month of Asveena according to North Indian, Purnima to Purnima, lunar month calendar while Kalabhairav Jayanti falls in the month of Kartik in South Indian, Amavasya to Amavasya, lunar month calendar. However both calendars observe Kalabhairav Jayanti on the same day. It is believed that Lord Shiva was appeared in form of Bhairav on the same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X