• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே கல்லால் ஆன குடவரை கோவில் கழுகுமலை முருகன் கோவில் - தரிசிக்கலாம் வாங்க

|

தூத்துக்குடி: எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குடவரைக்கோவிலைப் போலவே, கழுகுமலையிலும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரைக் கோவில் உள்ளது. இதன் காரணமாகவே இதனை தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கின்றனர். கழுகுமலையைப் பற்றிய வரலாற்று உண்மைகளை அறிந்திருந்ததால் தான் பி.ஜே.பி கூட்டணி முதன்முதலில் ஆட்சியமைத்தபோது மறைந்த வாஜ்பாய், இக்கோவிலை புனரமைப்பு செய்வதற்காக சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.

பழங்கால தமிழர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்கியவர்கள் என்பதற்கு உதாரணமாக சொல்வது பெரும்பாலும், தஞ்சை பெருவுடையார் கோவிலையும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் சிற்பங்களையும் தான். இந்த இரண்டு இடங்களும் சோழர்களும், பல்லவர்களும் ஆட்சி செலுத்திய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்று வரலாறு சொல்லும் உண்மையாகும்.

Kalugukalai Temple is a testimony to the art of Dravidian Architecture

ஆனால், அதைத் தாண்டி, தென் தமிழகத்திலும் அன்றைய காலத்தில் கட்டடக்கலையும் சிற்பக் கலையும் தழைத்தோங்கியது என்ற உண்மை இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தென் தமிழகத்தை அன்றைய காலத்தில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் காலத்திலும் சிற்பக்கலையும் கட்டடக்கலையும் சிறந்து விளங்கியது என்ற உண்மையை மத்திய மாநில அரசுகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தவறிவிட்டது என்பது தான் நிதர்சனம்.

அருணகிரிநாதர் பாடிய தலம்

அதற்கு ஒரு சான்றாக இன்றைக்கு இருப்பது தான் கழுகுமலையில் அமைந்திருக்கும் கற்கோவிலான வெட்டுவான் கோயிலும், கழுகாசலமூர்த்தி என்றழைக்கப்படும் கழுகுமலை முருகன் கோவிலும். இந்த கோவிலானது கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரும் இந்த தலத்தின் அருமையை உணர்ந்து பதிகமும் பாடியுள்ளார்.

கதலி கமுகுசூழ் வயற்குளே அளி

இசையை முரலமா வறத்தில் மீறிய

கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய பெருமாளே

என்று கழுகுமலை முருகனைப் பற்றி திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றி பாடியுள்ளார்.

ஒரே கல்லால் ஆன குடவரை கோவில்

Kalugukalai Temple is a testimony to the art of Dravidian Architecture

கழுகுமலையைப் பற்றிய பெருமையை கழுகுமலையின் சுற்றுவட்டார பகுதிகளான நாலாட்டின்புதூர், வானரமுட்டி சாயமலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன. கழுகுமலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழோடு விளங்கியது. அதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள மோனோலித்திக் முறை என்று சொல்லப்படும் ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட குடவரைக் கோவிலாகும். இதனை வெட்டுவான் கோவில் என்று இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டின் எல்லோரா

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குடவரைக்கோவிலைப் போலவே, கழுகுமலையிலும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரைக் கோவில் உள்ளது. இதன் காரணமாகவே இதனை தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கின்றனர். இக்கோவில் முழுக்க திராவிட கட்டடக்கலை முறையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்டுகொள்ளவில்லை

இந்த ஊரானது ஒருவேளை, சென்னையிலோ அல்லது மத்திய மண்டலத்திலோ இருந்திருந்தால், இன்றைக்கு உலகப்புகழ் பெற்றிருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிற்றூரில் அமைந்துள்ளதால் தான் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது.

வாஜ்பாய் ரூ.3 கோடி நிதியுதவி

கழுகுமலையைப் பற்றிய வரலாற்று உண்மைகளை அறிந்திருந்ததால் தான் பி.ஜே.பி கூட்டணி முதன்முதலில் ஆட்சியமைத்தபோது மறைந்த வாஜ்பாய், இக்கோவிலை புனரமைப்பு செய்வதற்காக சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் 911 இடங்களை பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு பெருமை

Kalugukalai Temple is a testimony to the art of Dravidian Architecture

அதுபோலவே, கழுகுமலையையும் பண்பாட்டு மரபுச் சின்னமாக அறிவித்தால், இக்கோவில் பிரபலமாவதோடு, தமிழகத்தின் பெருமையாக இருக்கும். அதனால் சுற்றுலா வளர்ச்சியடைந்து, இந்த ஊரைச் சுற்றிலும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பது இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும்.

விழி உயர்த்த வைக்கும் சிற்பங்கள்

மற்ற குடவரைக் கோவில்களைப் போலவே கழுகுமலை கோவிலிலும், சிற்பங்கள் அனைத்துமே, மலையைக் குடைந்து சிற்பங்களையும் கோவில்களையும் செதுக்கி உருவாக்கியுள்ளார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னிகைகள், பூதகணங்கள், என பல்வேறு சிற்பங்கள் மிக நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டு, காண்போரை விழி உயர்த்த செய்கின்றன.

1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கம்

இங்குள்ள சிற்பங்கள் அனைத்துமே கி.பி. 780 முதல் 800 ஆம் ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இங்கு இந்து சமய கற்சிற்பங்களோடு, சமணமத தீர்த்தங்கரர்களின் கற்சிற்பங்களும், சமணர் படுக்கைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் அனைத்துமே வட்டெழுத்து முறையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

Kalugukalai Temple is a testimony to the art of Dravidian Architecture

தமிழனின் சிற்பக்கலை திறன்

பொதுவாக அனைத்து கட்டிடங்களுமோ, முதலில் கட்டிடம் எழுப்பவேண்டிய இடத்தை நன்கு ஆராய்ந்து மண் பரிசோதனை செய்து அதன்பின்னர், கட்டிடத்தை பல்லாண்டுகாலம் தாங்கும் வகையில் அஸ்திவாரம் அமைத்து, அதன் மேலே கட்டிடத்தை எழுப்புவார்கள். அது தான் அடிப்படையாகும். ஆனால் தமிழன் அதிலும் வித்தியாசத்தை புகுத்தியிருக்கிறான் என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

கழுகாசலமூர்த்தி

கழுகுமலையின் அடிவாரத்தில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு குடவரைக்கோயில் உள்ளது. மூலவரான கழுகாசலமூர்த்தியின் கருவறையும் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, மூலவரான கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானை சமேதராக மேற்கு நோக்கி பார்த்தபடி அருள்புரிகிறார். முருகன் கோவில்களில் மேற்கு நோக்கிய அமைந்துள்ள மூன்று கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலின் தெப்பக்குளத்தில், பால் போன்ற நிறத்தில் குடிநீர் கிடைப்பதால், சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருமே இந்த நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலிருந்து கீழ் நோக்கி

இங்குள்ள கோவிலின் கட்டுமானம் அனைத்தும் தலைகீழ் தான். முதலில் மலையின் மீது கோபுரத்தையும், அதில் நுணுக்கமான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளனர். அடுத்த படியாக கருவறை, சிற்பங்கள், அடித்தளம் ஆகியவற்றை செதுக்கி உருவாக்கியுள்ளனர். இருந்தாலும் இங்குள்ள கோவில் முழுமை பெறாமல் பாதியில் கைவிடப்பட்டுள்ளது போல் உள்ளது. இதற்கு ஒரு கதையும் செவிவழியாக தொடர்ந்து வருகிறது.

தேவ சிற்பி

அதாவது, பாண்டிய நாட்டில் மிகவும் சிற்பக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் சிலைகளை செய்யும் அழகையும் கைவண்ணத்தையும் கண்ட அனைவரும், சிற்பியை தேவசிற்பியான மயன் தானோ என்று வியந்து போற்றி வந்தனர். அந்த சிற்பிக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒரு நாள் ஊர் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழா கூட்டத்தில் மகன் தொலைந்து போனான். சிற்பி மகனை எங்கெல்லாமோ தேடியலைந்து, அழுது புலம்பியும் மகன் கிடைக்கவில்லை.

உயிர்பெற்ற சிற்பங்கள்

இதனால் மனம் வெறுத்து, கழுகுமலைக்கு வந்து அங்கு சமண துறவிகளின் சிலைகளை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டான். இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் மலையின் கீழ்ப் பகுதியிலிருந்து கல் செதுக்கும் ஒலி கேட்டது. மேலே வந்தவர்கள், இந்த சிற்பியிடம் மலையின் கீழ் புறத்தில் ஒரு இளம் சிற்பி சிலைகளை செதுக்குறான். அது எவ்வளவு அழகாக நேர்த்தியாக செதுக்குகிறான் தெரியுமா? ஒவ்வொரு சிலையும் உயிர்பெற்று வருவது போலவே இருக்கிறது! என்று சிற்பியின் காதுபடவே இளம் சிற்பியை புகழ்ந்தனர்.

உளியால் துண்டான தலை

வருபவர்கள் அனைவரும் இளம் சிற்பியை புகழ்வதைப் பார்த்து சிற்பிக்கு இளம் சிற்பியின் மீது அளவுகடந்த வெறுப்பு உண்டானது. ஒரு நாள் ஆத்திரம் அளவு கடந்தபோது, சிற்பி தன் கையில் வைத்திருந்த உளியை இளம் சிற்பி இருக்கும் திசையை நோக்கி எறிந்தார். உடனே அந்த இளம் சிற்பியிடம் இருந்து அப்பா என்று ஒரு அலறல் ஒலி கேட்டது. சிற்பி ஓடிப்போய் பார்த்தால், அங்கே விழுந்து கிடந்தது சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய மகன் தலைவேறு உடல வேறாக விழுந்து கிடந்தான்.

அறைகுறையாக நின்ற கோவில்

அதைப்பார்த்து மனம் வெதும்பி நின்றதோடு தன்னுடைய மகன் செதுக்கிய சிற்பங்களை எல்லாம் பார்த்து மலைத்து நின்றான். பிறகு மனம் வெறுத்துப்போய் அங்கிருந்து கிளம்பி மனம் போன போக்கில் சென்றுவிட்டான். இதனால் தான் கழுகுமலையில் உள்ள கோவில் அறைகுறையாக பாதியில் நிற்கின்றன என்று பாட்டி காலத்து கதையை சொல்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Like the Kailasa temple located at Ellora, Maharashtra State the Indian rock-cut ancient Temple is carved out of a single rock. This is why Kalugumalai called the Ellora of Tamil Nadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more