For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்கால் மாங்கனி திருவிழா 2020: கோவிலுக்குள் வலம் வந்த பிச்சாண்டவரை வழிபட்ட பக்தர்கள்

Google Oneindia Tamil News

காரைக்கால்: பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை இறைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக எளிமையான முறையில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிச்சாண்டவர் வீதியுலா நேற்று காலை 11.30 மணியளவில் கோவிலுக்குள் நடைபெற்றது. கோவிலுக்குள்ளேயே எளிமையான முறையில் வலம் வந்த பிச்சாண்டவர் மீது சம்பிரதாய முறைப்படி மாங்கனிகளை வீசி இறைத்து வழிபட்டனர்.

63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவிலுக்குள்ளேயே மாப்பிள்ளை அழைப்பு, திருமணம், அமுதுபடையல், பிச்சாண்டவர் வீதி உலா, சிவபெருமான் தரிசன காட்சி நடைபெற்றது. எளிமையான முறையில் வீதி உலா வந்த பிச்சாண்டவரை பக்தர்கள் நேரலையாக யுடுயூப் மூலம் கண்டு தரிசனம் செய்தனர்.

மாங்கனியுடன் பிச்சாண்டவர்

மாங்கனியுடன் பிச்சாண்டவர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிச்சாண்டவர் வீதியுலா நேற்று காலை 11.30 மணியளவில் கோவிலுக்குள் நடைபெற்றது.
சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு பிச்சாண்டவர் வீதியுலா மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் பிரகாரத்துக்குள்ளேயே நடைபெற்றது.

மாங்கனி வீசிய பக்தர்கள்

மாங்கனி வீசிய பக்தர்கள்

நிகழ்வில் பங்கேற்றோர் மாங்கனிகளை இறைவனுக்குப் படைத்தனர். மாங்கனிகளை வீசியெறிந்து பக்தர்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு சம்பிரதாய முறையில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி மாங்கனியை வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு இருபது பேர் வரை மட்டுமே விழாவில் பங்கேற்க முடிந்தது.

அமுது படையல்

அமுது படையல்

பிரகார உலாவின் நிறைவில் பிச்சாண்டவரை புனிதவதி அம்மையார் எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் தயிர்சாதம் வைத்து அமுது படையல் செய்யும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கோவில் அறங்காவலர்கள், சிவாச்சாரியார்கள்,காரைக்கால் சட்டசபை தொகுதி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறைவனுக்கு மாங்கனி படையல்

இறைவனுக்கு மாங்கனி படையல்

வழக்கமாக காரைக்கால் நகரப் பகுதியில் கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, லெமர் வீதி வழியாக மாலை வரை பவளக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடைபெறும். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் நின்று இறைவனுக்கு மாங்கனிகளைப் படைத்துச் செல்வர்.

பிள்ளை வரம் கிடைக்கும்

பிள்ளை வரம் கிடைக்கும்

வீதியுலாவின்போது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் அவற்றை எடுத்துத் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்வார்கள். இதனால் திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை போன்ற பல இன்னல்கள் நீங்கி தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காரைக்கால் அம்மையார் ஜோதி வடிவம்

காரைக்கால் அம்மையார் ஜோதி வடிவம்

நேற்று இரவு பரமதத்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது, இன்று அதிகாலை அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது.

இணையதளத்தில் ரசித்த பக்தர்கள்

இணையதளத்தில் ரசித்த பக்தர்கள்

இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி, எளிய வகையில் கோயிலுக்குள்ளேயே விழா நிகழ்வுகள் நடைபெற்றன. விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம், யூ டியூப், உள்ளூர் தொலைக்காட்சி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் பக்தர்கள் அதனைக் கண்டு ரசித்தனர்.

English summary
The Karaikal Mangani festival, one of the famous religious events in the Pudhucherry region Karaikal district held on simple manner on Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X