For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருடாழ்வாருக்கு திருமணக்கோலம் காட்டிய காரமடை ரங்கநாதர்

பொதுவாக சிவன்தான் சுயம்புவாக கோவில்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் காரமடை ரங்கநாத பெருமாள் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் எண்ணற்ற வைணவத் தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் கோவை அருகே காரமடையில் எழுந்தருளி உள்ள ரங்கநாதர் கோயிலும் ஒன்று. பெருமாளின் வாகனமாக திகழும் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்ற பூலோகத்தில் காரமடையில் திருமணக்கோலம் காட்டியருளினார் பெருமாள். அவருக்கு காட்சி தந்த சுவாமி, காரமடையில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

அக்காலத்தில் இப்பகுதியில் காரைச் செடிகள் மிகுந்து காணப்பட்டது. மாதம் மும்மாரி பெய்ததால் இங்கு நீர்மடைகளும் நிறைந்து காணப்பட்டன. எனவே இப்பகுதி "காரைமடை' என்றே அழைக்கப்பட்டது. தற்போது மருவி காரமடை என்று அழைக்கப்படுகிறது.

திருமண கோலத்தில் அருளிய காரமடை ரங்கநாதரைப் பற்றி வெள்ளிக்கிழமையான இன்று தெரிந்து கொள்வோம்.

காரை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். பால் கறக்கும் போது ஒரு பசு மட்டும் தினமும் பால் சுரக்காமல் இருந்தது. மேய்ச்சலுக்கு சென்ற போது வனப்பகுதியில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. உடனே மயங்கி விழுந்து விட்டான் அந்த இடையன்.

முகத்தில் தழும்புடன் பெருமாள்

முகத்தில் தழும்புடன் பெருமாள்

தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. இந்த கோயில் கொங்கு மாவட்டத்தில் இரண்டாவது பழமையான கோயிலாகும். கரிகாலச்சோழன் மற்றும் கிருஷ்ண ராஜ உடையார் போன்றவர்கள் இந்த கோயிலுக்கு பொருளுதவி செய்துள்ளனர். திருமலை நாயகர் இந்தக் கோயிலின் மதில் சுவரையும் சில மண்டபங்களையும் கட்டியதாக கூறுவார்கள்.

ரங்கநாயகித்தாயார்

ரங்கநாயகித்தாயார்

ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் வெங்கடாஜலபதி மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகித்தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, "பெட்டத்தம்மன்' என்று அழைக்கிறார்கள். சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம்.

ரங்கநாயகி திருக்கல்யாணம்

ரங்கநாயகி திருக்கல்யாணம்

மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை எழுந்தருளச்செய்து கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து ராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.

உற்சவர் வழிபாடு

உற்சவர் வழிபாடு

இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய ரங்கநாதர், சிறிய மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கான உற்சவர், பெரிய சிலை வடிவில் இருக்கிறார். எனவே இவரை மூலஸ்தானத்தில் வைத்தால், மூலவரை தரிசிக்க முடியாது என்பதன் அடிப்படையில் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர். கோயில்களில் பெரும்பாலும் உற்சவமூர்த்தி, மூலவருக்கு அருகில்தான் காட்சி தருவார். விழாக்காலங்களில் மட்டும் இவர் வெளியில் சென்று புறப்பாடாகி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். ஆனால், இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வது கிடையாது. இவர் எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார்.

சடாரிக்கு பதில் ராமபாணம்

சடாரிக்கு பதில் ராமபாணம்

பெருமாள் கோயில்களில் பிரதானமாக கருதப்படுவது சடாரி சேவை. இந்த சடாரியில் திருமாலின் திருப்பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிப்பர். இங்கு மூலவர் சன்னதியில், சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராம பாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள். உற்சவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த ராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது மற்றொரு விசேஷம்.

வெள்ளைக்காரருக்கு அடி

வெள்ளைக்காரருக்கு அடி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இவ்வழியாக மேட்டுப்பாளையத்திற்கு ரயில்பாதை அமைக்கும் பணி நடந்தது.

வெள்ளைக்காரப் பொறியாளர் ஒருவர் பலர் சொல்லியும் கேட்காமல் கோயிலை இடித்துவிட்டு பாதை அமைக்கத் திட்டமிட்டார். அன்றைய வேலை முடிந்து அவர் தூங்கும்போது வெள்ளைக் குதிரையில் ஏறி கோபத்துடன் வந்த பெருமாள் அந்தப் பொறியாளரை இருமுறை சாட்டையால் அடித்துள்ளார். தமது தவறை உணர்ந்த பொறியாளர் பாதையை மாற்றி அமைத்தார். அத்துடன் பிரதி உபகாரமாக கோயிலுக்கு ஒரு வெள்ளைக் குதிரை வாகனமும் செய்து கொடுத்து வணங்கினாராம். இன்றும் அந்த வெள்ளைக் குதிரை வாகனத்தில்தான் உற்சவ மூர்த்தி வலம் வருகிறார்.

கவாள சேவை

கவாள சேவை

சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதமும் ரங்கநாதருக்கு திருவிழாதான். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பு வாய்ந்தது. மாசி பிரம்மோற்ஸவத்தின்போது மகம் நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு, "ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள். இதனை, கவாள சேவை என்கிறார்கள். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் தண்ணீர் சேவை, கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் பந்த சேவை என்னும் சேவைகளும் நடக்கிறது.

அமாவாசையில் பாலபிஷேகம்

அமாவாசையில் பாலபிஷேகம்

சுவாமி சன்னதி இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர், சுவாமியை பார்த்து காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயர் சிலை, பெரிய சதுரக்கல்லில் வித்தியாசமாக வடிக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சுயம்புவாக இருந்ததை கண்டறிந்தபோது இந்த வைபவங்கள் செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போதும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அமாவாசை தோறும் காலையில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது.

குடும்பத்தில் செல்வம் பெருகிடவும், ஐஸ்வர்யம் தழைத்திடவும், விளை நிலத்தில் பயிரிட்ட பொருட்கள் நல்ல மகசூல் தரவும், தக்க தருணத்தில் மழை வளம் தந்திடவும், இந்த ரங்கநாதனை வேண்டி வணங்கி, பாலபிஷேகம் செய்ய நிச்சயம் நிறைவேற்றி வைக்கும் அரங்கன் இந்த திருவரங்கன் என்று போற்றிப்பாடுகின்றனர்.

பழங்குடியினர் வழிபாடு

பழங்குடியினர் வழிபாடு

இந்தக் கோயிலின் சிலை ஆண்டாண்டு காலமாக வளர்கிறது என்ற நம்பிகையுண்டு. இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாட்டில் இரண்டே கோயில்தான் கீழ் சாதியினர் மற்றும் பழங்குடியினற்கு அதிக உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒன்று மதுரை அழகர் கோவில் மற்றொன்று காரமடை ரங்கநாதர் கோயில். தோட்டியர், இருளர் மற்றும் பழங்குடிமக்களே இந்த கோயிலின் முக்கிய பக்தர்கள்.

கருட தீர்த்தம்

கருட தீர்த்தம்

ராமனுஜர் கர்நாடகத்தில் உள்ள திருநாராயணபுரம் சென்ற பொழுது, இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார். இங்கு தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பிரம்ம தீர்த்தம், அஷ்ட தீர்த்தம்,கருட தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. பச்சை மாமலையை போன்றவனும் பவள வாய் கமலச் செங்கண்களைக் கொண்டவனுமான பெருமாளை எண்ணுந்தோறும் வாழ்வில் நலம் கூடும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கிமீ தூரத்தில் காரமடை உள்ளது. காரமடை பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.

English summary
Karamadai denoting the presence of lush Karai trees in this locality and the numerous small streams (madai) in this region. The main deity of the temple is His Holiness Lord Suyambu Aranganatha Perumal with the presence of Her Holiness Mother Aranganayagi to his right and the poetess of Thirupavai, Her holiness Thayaar Andal Nachiyar to His Left.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X