For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்தி நிறைந்த கார்த்திகை மாத ராசி பலன்

கார்த்திகை மாதம் ஆன்மீக அலைகள் நிறைந்த மாதம். கார்த்திகையில் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை

Google Oneindia Tamil News

ஜோதிடர் : மயூரா அகிலன்

சென்னை: கடந்த ஒரு மாத காலமாக துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற விருச்சிகம் ராசியில் தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் சூரியனுடன் குரு, புதன் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளனர். சனி செவ்வாய் பார்வை உள்ளது. சுக்கிரன் வக்கிர நிலையில் இருந்து விடுபடுகிறார். புதன் வக்கிரநிலையில் சஞ்சாரம் செய்கிறார். சந்திர மங்கள யோகத்தில் இந்த கார்த்திகை மாதம் தொடங்குகிறது.

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் விரதம் இருந்து மாலை போட்டு பக்தர்கள் பக்திமயமாக காட்சியளிப்பார்கள். கார்த்திகை மாதத்தில்தான் நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை.

கார்த்திகையில் தீப திருவிழா சிறப்பு. கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உகந்தது. இந்த விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை நீடிக்கும்.

ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலனை காண்போம்.

கார்த்திகையில் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - விருச்சிகம்

செவ்வாய் - கும்பம்

புதன் - விருச்சிகம்

குரு - விருச்சிகம்

சுக்கிரன் - துலாம்

சனி - தனுசு

ராகு, கேது - கடகம், மகரம்

சந்திரன் சஞ்சாரம் மற்றும் சந்திராஷ்டமம் ராசிகள்

கார்த்திகை 2 ஆம் தேதி மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார்,4 ஆம் தேதி மேஷம் 6ல் ரிஷபம், 8ல் மிதுனம் ராசிகளில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. 10ல் கடகம்,13ல் சிம்மம்,15ல் கன்னி,17ல் துலாம்,19ல் விருச்சிகம்,21ல் தனுசு,24ல் மகரம், 26ஆம் தேதி கும்பம், 29 ஆம் தேதி மீனம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது.

கார்த்திகை 2 முதல் 4 வரை சிம்மம்,4 முதல் 6 வரை கன்னி,6 முதல் 8 வரை துலாம்,8 முதல் 10 வரை விருச்சிகம்,10 முதல் 13 வரை தனுசு

13 முதல் 15 வரை மகரம்,15 முதல் 17 வரை கும்பம்,17 முதல் 19 வரை மீனம்,19 முதல் 21 வரை மேஷம், 21 முதல் 24 வரை ரிஷபம் 24 முதல் 26 வரை மிதுனம் 26 முதல் 29 வரை கடகம் 29 முதல் சிம்மம்.

கார்த்திகை மாதத்தில் வீடு கிரகப்பிரவேஷம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள்

மேஷம்

மேஷம்

சூரியன், புதன், குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கின்றனர். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் இருப்பதால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரித்து நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வது சிறப்பு. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் எல்லாம் சிறப்படையும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். கார்த்திகை 19 முதல் 21 வரை சந்திராஷ்டமம் வருவதால் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன், புதன், குரு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், அப்பாவின் தொழிலில் ஈடுபாடு உண்டாகும். செவ்வாய் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் நிலை சிறப்படையும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பதால் பெண்களால் தொல்லை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் அதோடு அசதி அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். கார்த்திகை 21 முதல் 24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம்

சூரியன்,புதன், குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்வாங்கும் நிலை ஏற்படும், பிள்ளைகளிடத்தில் எச்சரிக்கை தேவை. செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு பயணங்கள் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும், வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். கார்த்திகை 24 முதல் 26 வரை மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

கடகம்

கடகம்

சூரியன்,புதன், குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். சுக்கிரன் நான்காம் வீட்டில் இருப்பதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரக் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். கார்த்திகை 1,2 மற்றும் 26 முதல் 29 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன், குரு, புதன் உடன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வாகன யோகம் உண்டாகும், அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விருந்தினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உண்டாகும். கார்த்திகை 2 முதல் 4 வரை மற்றும் 29ஆம் தேதி முதல் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.

கன்னி

கன்னி

சூரியன், குரு, புதன் உடன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் உண்டாகும் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும். சுக்கிரன் ராசிக்கு இரண்டாம் வீட்டில் தன ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பொன்னகைகள் சேரும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியாகும், பழைய வீட்டை வாங்குவீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். கார்த்திகை 4 முதல் 6 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

துலாம்

துலாம்

சூரியன், குரு, புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தலைமைப் பதவி தேடி வரும். செய்யும் வேலைகளில் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் இருந்து பங்கு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார் வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும், பக்கத்து ஊருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். கார்த்திகை 6 முதல் 8 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன்,குரு, புதன் ஆகியோர் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பதவி உயர்வு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பதால் புது வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியடையும். சுக்கிரன் விரைய ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வம் சேர்ப்பதற்க்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கார்த்திகை 8 முதல் 10 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.

தனுசு

தனுசு

சூரியன், புதன், குரு ஆகிய கிரங்கங்கள் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விரைய செலவுகள் அதிகரிக்கும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிதாக நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், மக்களிடம் மரியாதை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும். கார்த்திகை 10 முதல் 13 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

மகரம்

மகரம்

சூரியன், புதன், குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால் சகோதரர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். சுக்கிரன் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் செய்யும் செயல்கள் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், தொழிலில் கடும் உழைப்பு தேவைப்படும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

கும்பம்

கும்பம்

சூரியன், புதன், குரு உடன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கின்றனர். தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். பதவி உயர்வு கிடைக்கும் அவ்வப்போது கோபம் எட்டிப்பார்க்கும். சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கார்த்திகை 15 முதல் 17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மவுனவிரதம் இருப்பது நல்லது.

மீனம்

மீனம்

சூரியன்,புதன், குரு ஆகியோர் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் அப்பாவினால் நன்மை உண்டாகும், பிதுராஜ்ஜித சொத்துகள் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகோதரர்களுக்காக செலவு செய்யும் நிலை ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் பெண்களால் மனம் சங்கடப்படும் நிலை ஏற்படும் கவனமாக இருக்கவும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 17 முதல் 19 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

English summary
Rasi palan for the Tamil month of Karthigai 2018, from November 17,2018 to December 15,2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X