• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகை சோமவாரத்தில் சிவன் கோவிலில் சங்கபிஷேகம் பார்த்தால் இத்தனை நன்மைகளா?

|

சென்னை: கார்த்திகை மாதத்தில் அனைத்து சோமவாரத்திலும், சந்திரனின் அம்சமாக விளங்கும் சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதில் புனித கங்கை தீர்த்தத்தை நிரப்பி, வேள்விகள் செய்து, பின்பு அந்த தீர்த்தத்தை கொண்டு எம்பெருமான் ஈசனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த சங்காபிஷேகத்தை தரிசனம் செய்தால் சந்திரன் பலம் பெற்று வளர்வதைப் போல், நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவிதமான நலமும் வளமும் பெற்று வாழலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Karthigai Somavara viratham and benefits Sangabisegam in Siva temple

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றான்.

கார்த்திகை மாதம் அண்ணாமலையார் தீபத்திருவிழாவுக்கு எந்த அளவு சிறப்பு பெற்றதோ, அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளும், அதாவது சோமவார தினம் சிவாலயங்களிலும் விஷேசம் தான். காரணம் சோமவார தினங்களில் தான், சிவாலயங்களிலும் 108 அல்லது 1008 அல்லது 100008 சங்குகளில் புனித நீரை நிரப்பி, யாக சாலைகளை அமைத்து, வேள்வி செய்து, பின்னர் அந்த தீர்த்தத்தை கங்கை நீராக பாவித்து சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்துவது நடைமுறை.

Karthigai Somavara viratham and benefits Sangabisegam in Siva temple

ஜோதிட சாஸ்திரத்தில் கடலுக்கும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் உரியவராக சந்திரன் விளங்குகிறார். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் சந்திரனின் ஈர்ப்பு விசை சற்று அதிகரித்து காணப்படும் என்பதால் தான் கடல் அமைதியற்று கொந்தளிப்புடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கு என்பது மஹாவிஷ்ணு வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. சங்கானது, சந்திரனின் சகோதரியான மஹாலட்சுமியின் அம்சமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட தெய்வீக பொருட்களில் மஹாலட்சுமியோடு வெளிப்பட்டதே வலம்புரி சங்காகும். இது தான் மஹாவிஷ்ணுவின் இடக்கையில் உள்ளது. இந்து கடவுள்கள் ஒவ்வொருவருக்கும் சங்குகளை வைத்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

வலம்புரி சங்கிற்கு மட்டுமே விஷேச சக்தி இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. எந்த வீட்டின் பூஜையறையில் வலம்புரி சங்கு இருக்கிறதோ, அங்கு மஹாலட்சுமியே வாசம் செய்வதாக அர்த்தம். அந்த வீடே லட்சுமி கடாட்சத்தால் நிறைந்திருக்கும். வலம்புரி சங்கானது செல்வத்தை அள்ளித் தரும். தூய்மையின் அடையாளமாக கருதப்படும் சங்கில் பசும்பாலை நிரப்பி, அதை ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் யாகங்கள் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். கங்கை நீரை நிரப்பு அபிஷேகம் செய்தால் பிறப்பே இல்லாத நிலையை அடையலாம் என்று பத்மபுராணம் விளக்கியுள்ளது.

சோமவாரக் விரத கதை

ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும் பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள் அக்கோயிலில் பூதம், பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால் எவரும் அக்கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து இருந்தது. அதனால் சிவனும் பார்வதியும் அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான் முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம் செய்து கொண்டும் அமைதியாக இருப்பார்கள்.

ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி தேவி ஜெயித்தார். சிவன், அதை ஒத்துக்கொள்ளாமல் நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும் இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார். ஆனாலும் சிவன், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி, தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்று கூறி கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

சிவன் சங்கல்பத்தில் அப்பொழுது ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம் யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். சிவனும் அதற்கு சம்மதித்தார். அப்பிராமணர் அருகில் வந்ததும், எங்கள் இருவரில் யார் வென்றார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால் கேட்பதைக் காட்டிலும் கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை விளையாடினார்கள். மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால் பிராமணர் சிவனே, ஜெயித்தார் என்று கூறினார்.

இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம் ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் சிவனிடம் விமோசனம் கேட்டார். அதற்கு சிவனோ, அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்; அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் சிவன், தன் சங்கல்பத்தினால் சோமவார சமத்காரம் நடத்த நினைத்தார்.

தன்னை காக்க வேண்டிய சிவனே இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து கிணற்று அருகில் சென்றார். அப்பொழுது சிவன், சங்கல்பத்தில் அங்கு ஒரு தேவலோகப் பெண், இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.

கிணற்றில் விழச்சென்ற பிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால் மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழு ஜென்மத்திற்கும் பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்? என்று அந்த தேவலோகப் பெண் கேட்டாள். அதற்குப் பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு அந்தப் பெண், 16 சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள்.

விதர்பநகர் சென்ற அந்த பிராமணர், கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள்.

சோமவார விரத பலன்

சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோவிலு்க்குக் கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.

இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார். விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை சிவபெருமான் நிச்சயம் தருவார் என்பது உறுதி.

 
 
 
English summary
Karthigai Somavara viratham and benefits Sangabisegam in Siva temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X