For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமிர்தம் பெற கூர்ம அவதாரம் எடுத்த மகா விஷ்ணு... புராண கதையிலும் இத்தனை சுவாரஸ்யமா?

Google Oneindia Tamil News

சென்னை: பகவான் மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் முதலாவதாக அவர் எடுத்த அவதாரம். மச்ச அவதாரம். நீரில் வாழும் மீனாக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்டாவதாக நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக அதாவது கூர்மமாக அவதாரம் எடுத்து பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்காக தேவ அசுரர்களுக்கு உதவி செய்தார். அதே மகாவிஷ்ணுதான் அமிர்தம் கிடைத்த உடன் அதை பகிர்ந்து கொடுப்பதற்காக மோகினியாக அவதரித்தார். ஆமை அற்புதமான உயிரினம் என்பதை அவர் ஆமையாக அவதரித்தார் என்கின்றன புராணங்கள்.

ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவுகொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார்.

திருமாலின் கூர்ம அவதாரத்தின் போது தான். இந்த கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது.

கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி, சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவதாரத்தின் மகிமை

அவதாரத்தின் மகிமை

தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பாற்கடலில் இருந்த பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.

 இந்திரன் செய்த அலட்சியம்

இந்திரன் செய்த அலட்சியம்

தேவலோகத்துப் பெண் ஒருத்தி, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார். எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.

தேவ அசுரர்கள் போர்

தேவ அசுரர்கள் போர்

துர்வாசருக்கு கடும் ஆத்திரம் வரவே, லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார். இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டுகொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போரிட்டனர்.

அசுரகுருவின் மகிமை

அசுரகுருவின் மகிமை

போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார். அதற்கு விஷ்ணுவோ அமிர்தம் பருகினால் மட்டுமே சாகா வரம் பெற முடியும் என்றார். அதற்கு பாற்கடலை கடைய வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.

பாற்கடல்

பாற்கடல்

அசுரர்களை உதவிக்கு அழைத்த தேவர்கள் அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக கூறினர். வாசுகி பாம்பை கயிறாக்கி மேரு மலையை மத்தாக்கி கடைந்தனர். அசுரர்கள் தலை பகுதியிலும் தேவர்கள் வால் பகுதியிலும் பிடித்துக்கொண்டனர் மலை அசையவில்லை. உடனே மகாவிஷ்ணு ஆமையாக உருமாறி கடலுக்கு அடியில் சென்று மலையை தன் முதுகில் சுமந்தார்.

அமிர்தம் தாங்கிய தன்வந்திரி

அமிர்தம் தாங்கிய தன்வந்திரி

பாற்கடலில் இருந்து வரியாக பல பொக்கிஷங்கள் வந்தன. அதில் இருந்து பல நல்லவைகளை தேவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தார். காமதேனு, ஐராவதம், கற்பகம் ஆகிய பல பொருட்கள் தேவர்களிடம் சென்றன. வருணி, சுராதேவி, அழகு மங்கையர்களை அசுரர்கள் கைப்பற்றினர். கடைசியாக அமிர்த கலசம் தாங்கி தன்வந்திரி பகவான் தோன்றினார். நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தலைவர் ஆனார். இவரது கையிலிருந்த அமிர்த கலயத்தில் இருந்து துளசி தோன்றியது.

 அமிர்தம் கொடுத்த மோகினி

அமிர்தம் கொடுத்த மோகினி

தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்தத்தை பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்கள் பருகினால் நீண்ட ஆயுள் பெற்று தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.மோகினியின் அழகில் அசுரர்கள் மயங்கி நிற்க அதுதான் சமயம் என்று அமிர்தம் முழுவதும் தேவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள் மோகினி. அதிலும் ஒரு அசுரன் மாய வேடமிட்டு சூரிய சந்திரன் இடையில் அமர்ந்து அமிர்தம் பருகினான். சூரியன் காட்டிக்கொடுக்க, மோகினியோ, அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனது தலையை வெட்டினாள். தலைவேறு, உடல் வேறாக பிரிந்த அந்த அசுரனே இரண்டு உருவாக மாறி ராகு, கேது என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோவில்களில் ஆமைகள்

கோவில்களில் ஆமைகள்

பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது.

ஆமைகளின் கடல்வழித்தடம்

ஆமைகளின் கடல்வழித்தடம்

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை கற்றுக்கொண்ட தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று ஆமைகளின் கடல் வழியில் கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியுள்ளார்.

English summary
In Koorma Avatar Lord Vishnu incarnates himself as a turtle. It is an interesting story involving both the gods and asuras. In the ongoing saga of battle between the gods and asuras, on one occasion the gods suddenly lost all their strength due to a curse by the short-tempered sage Durvasa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X