குமார சஷ்டி நாளில் குக்கே சுப்ரமணியரை வணங்கலாம்... சர்ப்ப சம்ஹார பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்
பெங்களூரு: கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரமண்யா கோவிலில் நடைபெறும் சர்ப்ப சம்ஸ்கார பூஜையில் பங்கேற்று வழிபட தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும் புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி விரதம் குமார சஷ்டி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. நாளை குமார சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் நாளில் பிரசித்தி பெற்ற குக்கே ஸ்ரீ சுப்ரமணியரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

குக்கே சுப்ரமணிய சாமி ஆலயமானது, குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக, பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது.
அசுரர்களுடனான போரில் தாரகாசூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். பின்னர் தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். அவரை இந்திரன் மற்றும் பிற தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்துகொள்ளும்படி, முருகப்பெருமானிடம் வேண்டுகோள் வைத்தார் இந்திரன். அந்த வேண்டுதலை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார்.
கோவை, நீலகிரியில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... அரபிக்கடலில் பலத்த காற்று வீசும்
அதன்படி முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.
அசுர வதம் முடிந்த பின்னர் முருகப்பெருமான் தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இக்கோவில் அருகே ஓடும் குமாரதாரா நதிக்கு வந்தார் என தல புராணம் கூறுகிறது. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்கு நீராடியதாகவும் வரலாற்றில் உள்ளது.
நாகர்களின் கதை
கஷ்யப முனிவரின் மனைவியான கத்ரு, வினதை ஆகிய இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்தின் காரணமாக சர்ச்சை நிலவியது. இருவரும் தங்கள் கருத்தே சரியானது என வாதம் செய்தனர். நிறைவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் கத்ரு தோல்வியுற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதைக்கு அடிமையாகின.
வினதையின் மகனான கருடன், நாகங்களுக்கு துன்பங்களை விளைவித்தான். பாதிக்கப்பட்ட நாகங்கள், வாசுகி என்னும் ஐந்துதலை நாகத்தின் தலைமையில் குமாரதாரா நதி அருகிலிருந்த குகையில் வந்து மறைந்து கொண்டன.
நாகர்களின் ராஜாவான வாசுகி பாம்பு, சிவபெருமானின் தீவிர பக்தர். அந்த வாசுகி நாகம், தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியாவில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத்தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை, இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையாக்கியது. இதன் அடிப்படையிலேயே குமாரதாரா நதிக்கரையில் ஆதி சுப்பிரமணியருக்கு கோவில் எழுப்பப்பட்டது.
இந்த ஆலயத்தில் வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குமாரதாரா நதியில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் 'உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி பிரதானமாக உள்ளது.
பாம்புகளை காத்து அருள்புரிந்தவர் இத்தல முருகன். இதனாலேயே ராகு, கேது தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கால சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கே சிறப்பு பூஜையும், நடத்தப்படுகிறது. இங்கு பாம்புக்கு திதி கொடுத்தால் பித்ரு கடனைச் செலுத்திய பலனைப் பெறலாம்
முன்னோர் சாபமும், சர்ப்ப தோஷம் என்னும் நாக தோஷமும் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது.
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில், இந்த சுப்பிரமணியா கோவில் உள்ளது. மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமைந்துள்ளது.