For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் காண திரண்ட பக்தர்கள் - நகரம் முழுவதும் கோலாகலம்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளத

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பெரியகோவில் என்றும் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும் ராஜராஜேஸ்வரம் என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரியகோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுவதை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் தஞ்சாவூரில் குவிந்துள்ளனர். ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகை தந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களாக நடந்த யாக சாலை பூஜைகளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்களிலேயே பொற்காலமாக விளங்கியது பிற்காலச் சோழ வம்சத்தில் தோன்றிய ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் தான்.
ராஜராஜ சோழன் மன்னனாக மட்டுமில்லாது, சிறந்த ராஜ தந்திரியாகவும், மிகச்சிறந்த சிவபக்தராகவும் விளங்கினான். இதனாலேயே ராஜராஜ சோழன் மும்முடிச்சோழன், திருமுறை கண்ட சோழன் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டான். ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஏராளமான சிவாலயங்கள் கட்டப்பட்டன.

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1006ஆம் ஆண்டில் கட்டட்பபட்டது தான் தஞ்சை பெருவுடையார் என பயபக்தியுடன் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில். யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை பண்பாட்டு சின்னங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது இக்கோவில். தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. முழுக்க கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவில் சிற்பக்கலைக்கும், கலைநுட்பத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

பெரிய கோவில் கும்பாபிஷேகம்

பெரிய கோவில் கும்பாபிஷேகம்


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டு களுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் தேதி யஜமான அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் 13 அடி உயர பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டதை தொடர்ந்து கோவிலில் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின. பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் 22 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்றுள்ளனர். காவிரி, கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்ட கும்பங்கள் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.

யாக சாலைகள் தொடங்கள்

யாக சாலைகள் தொடங்கள்

முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1ஆம் தேதி மாலையில் தொடங்கியது. 2ஆம் தேதி காலையில் 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜையும், 3ஆம் தேதி காலையில் 4ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. யாகசாலை பூஜையை காண்பதற்கு தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமாக உள்ளனர்.

குவியும் பக்தர்கள்

குவியும் பக்தர்கள்

கோவில் நுழைவு பகுதி வழியாக உள்ளே செல்லும் பக்தர்கள் அனைவரும் கேரளாந்தகன் கோபுரத்தின் அருகே செல்லும் பாதையில் சென்று யாகசாலை பூஜையில் பங்கேற்று வருகின்றனர். யாகசாலை பூஜை தொடங்கிய முதல்நாளில் 50 ஆயிரம் பேரும், 2ஆம் நாளில் 1 லட்சம் பேரும், 3வது நாளான நேற்று மாலை வரையில் 50 ஆயிரம் பேரும் என 3 நாட்களில் 2 லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

குவியும் பக்தர்கள்

குவியும் பக்தர்கள்

இன்று காலை 8 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது.

பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா

பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையாருக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவிலை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்குள் செல்லும் வழியில் மராட்டா நுழைவு வாயிலில் பக்தர்களையும், உடமைகளையும் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தஞ்சை நகரமே விழாக்கோலம்

தஞ்சை நகரமே விழாக்கோலம்

கும்பாபிஷேக விழாவைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. புதிய பேருந்து நிலையம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், தொல்காப்பியர் சதுக்கம், கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது. பெரிய கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

English summary
The 1,000 year old famed Brihadeeswara Temple in Thanjavur is being decked up for its 6th Kumbabishekam on February 5 with more than a million devotees attend the massive ceremony and offer prayers.The consecration of the temple is being held after a gap of 23 years the last event held in 1997.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X