For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்திரை திருவிழா : அதிர்வேட்டு முழங்க அழகர் மலையை விட்டு வந்த கள்ளழகர் - மதுரையில் எதிர்சேவை

காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம். விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் மதுரை நகர் வரை எட்டியது. சித்திரை திருவிழாவைக்கான தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த சப்தம் அழகர் மலைய

Google Oneindia Tamil News

மதுரை: வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் நேற்று மாலை தங்கப்பல்லாக்கில் புறப்பட்டார். அதிகாலையில் மதுரைக்குள் வந்த அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்சேவை செய்தனர். கள்ளழகர் போல வேடமிட்ட பக்தர்கள் நீரை பீய்ச்சியடித்து உற்சாகமடைந்தனர்.

அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷமிட கள்ளழகர் புறப்பாடு நடந்தது. கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படும் முன்பாக காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் உத்தரவு பெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும் மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும். கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

அழகாய் புறப்பட்ட கள்ளழகர்

அழகாய் புறப்பட்ட கள்ளழகர்

தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கும் திருமணம் நடக்கப் போகும் செய்தியைக் கேள்விப்பட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப் பார்க்க 24 கிமீ தூரத்திலுள்ள தன் இருப்பிடத்தை விட்டுச் சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். அதுவும் எப்படி அலங்கரித்துக்கொண்டு வருகிறார் தெரியுமா? கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர்.

பக்தர்கள் வரவேற்பு

பக்தர்கள் வரவேற்பு

அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்படும் போது அதிர்வேட்டு விண்ணைப்பிளக்கும். அழகரை வரவேற்க பக்தர்கள் உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் தங்கி இளைப்பாறி ஆசி வழங்குகிறார்.

 எதிர்சேவை

எதிர்சேவை

தங்கப் பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் வரும் அழகரை பார்பதற்கும் அவரை எதிர் கொண்டு அழைப்பதற்கும் மதுரை மக்கள் திரண்டு வரும் காட்சி கண் கொள்ளாகாட்சியாகும். மூன்றுமாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை வரவேற்றனர். எதிர் சேவையின் போது பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் கூத்துக்கள் கொட்டு மேளங்கள் என களைகட்டியது. கள்ளழகரின் மேல் அன்பு கொண்ட பக்தர்கள் தாங்களும் கள்ளழகர் போல வேடமிட்டும், கருப்பண்ணசாமியாக வேடமிட்டு அழகரை வரவேற்று ஆடி பாடினர்.

 தல்லாக்குளத்தில் தங்கும் அழகர்

தல்லாக்குளத்தில் தங்கும் அழகர்

மதுரை மக்களின் வரவேற்பை மனங்குளிர ஏற்றுக்கொண்டு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் தங்கி ஆசி வழங்குகிறார். சித்திரை தேரோட்டம் காண வரும் பக்தர்ககள் அப்படியே தல்லாக்குளம் வந்து அழகரை பார்த்து விட்டு செல்வார்கள். இன்று நள்ளிரவில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் நடைபெறும்.

வண்ண வண்ண பட்டுப்புடவைகள்

வண்ண வண்ண பட்டுப்புடவைகள்

அழகரின் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டி வந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம்.

 ஆண்டாள் மாலை சூடிய அழகர்

ஆண்டாள் மாலை சூடிய அழகர்

நாளை ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழுநிலவு நாளில் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார் அழகர். புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார். இது காலம் காலமாக நடந்து வரும் விஷேசம்.

வைகையில் எழுந்தருளல்

வைகையில் எழுந்தருளல்

சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக்காண லட்சக்கணக்கான மக்கள் வைகைக் கரையிலும் ஆற்றினுள்ளும் திரண்டிருப்பார்கள். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு பக்தர்களின் களைப்பு போக்கப்படும். விசிறிகள் வீசி உற்சாகமடைவார்கள் மதுரை மக்கள். மதுரையில் அழகர் தங்கியிருக்கும் ஒருவாரமும் வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடல் எட்டுத்திக்கும் ஒலிக்கும். என்ன மக்களே... நீங்களும் வாங்க வந்து கள்ளழகரை கண் குளிர பார்த்துட்டு போங்க.

English summary
Lord Kallazhagar's procession on Alagarkoil Road in Madurai on Thurday as part of the 'Ethir Sevai at Moondru mavadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X