For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி மாதப் பிறப்பு: அதிகாலை முதல் கள்ளழகரை தரிசிக்கலாம்

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழி மாதப்பிறப்பு முன்னிட்டு, அழகர் கோவில் உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோவில் நடை திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் பாடப்படுவதை முன்னிட்டு நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சைவ ஆலயங்கள் என்று சொல்லப்படும் சிவாலயங்கள், அம்மன் கோவில்கள், விநாயகர் கோவில்கள், முருகன் கோவில்கள் மற்றும் கிராமங்களில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கோவில்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. நகரங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்கள் அனைத்துமே அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டு, அதன் பின்பு மூலவர்களுக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

Madurai kallazhagar Temple Nadai Thirappu Timings changed for Margazhi month

ஆனால், வைணவ ஆலயங்கள் என்று சொல்லப்படும் பெருமாள் கோவில்கள் அனைத்துமே 11 மாதங்கள் வரை, பெரும்பாலும் காலை 6 மணிக்கு மேல் தான் நடை திறக்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இதற்கு காரணம், மஹாவிஷ்ணு அலங்காரப் பிரியர், அதோடு அவர் சதா சர்வகாலமும் கண்மூடி யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பதால், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், சூரிய உதயத்திற்கு பின்பு தான் நடை திறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.

ஆனால், மார்கழி மாதம் மட்டும் அனைத்து வைணவ கோவில்களும் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு விடும். காரணம் மார்கழி மாதம் மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். பகவான் கிருஷ்ணர், பகவத் கீதையில், மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லியிருக்கிறார். அதோடு, பூமியில் உள்ள மக்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவலோக வாசிகளுக்கு ஒரு நாள் என்பது கணக்காகும்.

அதாவது, பூமியில் ஆறு மாதங்கள் என்பது தேவலோக வாசிகளுக்கு அரை நாள் என்பதாகும். அதன் படி தமிழ் மாதமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவுப் பொழுதாகும். அதன்படி, மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு அதிகாலைப் பொழுதாகும். அதை வைத்துதான் பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியிருக்கிறார்.

அதனால் தான், மார்கழி மாதத்தில், இந்துக்கள் அனைவருமே அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். பெண்களும், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாசலில் கோலமிடுகின்றனர். அதோடு, கோவில்களுக்கு சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பா பாடல்களையும் பாடி வருகின்றனர்.

தற்போது மார்கழி மாதம் பிறந்து விட்டதால், அனைத்து கோவில்களுமே அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பா பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் அனைத்து வைணவ ஆலயங்களும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு பெருமாளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

வைணவ கோவில்களில் முக்கியமானதும், 108 திவ்யதேசங்களில் முக்கியமானதுமான, மதுரை கள்ளழகர் கோவிலிலும் மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு நடை திறக்கும் நேரம்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பினை கள்ளழகர் கோவில் உதவி ஆணையர் அனிதா வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின் படி, கள்ளழகர் கோவில் மற்றும் இதன் உப கோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், வண்டியூர் வீரராகப்பெருமாள் கோவில் ஆகியவற்றில், மார்கழி முதல் தேதியில் இருந்து மார்கழி 29ஆம் தேதி வரை (ஜனவரி14ஆம் தேதி) நடை திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அழகர்கோவில் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். அதே போல், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் வண்டியூர் வீரராகப்பெருமாள் கோவிலில், அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அதோடு, கள்ளழகர் கோவில் மற்றும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் வரும் 27ஆம் தேதியன்று தொடங்கி ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை நடைபெருகிறது. இதில் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் அதிகாலை 5.15 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதே போல், ஆண்டாள் நாச்சியார் வாய்மொழியாக சொல்லிய அக்காரவடிசல் திருவிழா ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெறும், என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற டிசம்பர் 26ஆம் தேதியன்று காலை 8.09 மணி முதல் முற்பகல் 11.20 மணிவரை நிகழும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை டிசம்பர் 25ஆம் தேதியன்று வழக்கமான பூஜைகள் நடைபெற்று இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள், அதாவது டிசம்பர் 26ஆம் தேதியன்று நண்பகல்12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில், கூடலழகர் பொருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ ஆலயங்களிலும் நடைதிறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

English summary
The timing of the opening of the temple has been altered in all the Vaishnava temples, including the Kallazhagar temple, on the eve of the month of Margazhi. The change has been made at the opening of the Nadai Thirappu in front of the singing of Andal Thiruppavai songs throughout the month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X