மதுரை அஷ்டமி சப்பர வீதி உலா: மக்களுக்கு படியளந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்றைய தினம் மதுரையில் மீனாட்சியம்மனும் பிரியாவிடை சுந்தரரேஸ்வரரும் சப்பரங்களில் எழுந்தருளி மக்களுக்கு படியளந்தனர். மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக இன்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். மார்கழி மாதத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக தேய்பிறையில் அஷ்டமி சப்பர வீதி உலா நடைபெறும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரை நகரின் வெளி வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பார்கள். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.
தென்மாவட்ட சுற்றுப் பயணம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்

உணவு கிடைக்கும்
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும்.

அலங்காரமாக அம்மன்
இந்த ஆண்டுக்கான அஷ்டமி சப்பர வீதி உலா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மற்றும் மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியபடி புறப்பட்டனர்.

சிவ சிவ சங்கர
பின்னர் கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 சப்பரங்களில் சுவாமி- அம்பாள் தனித்தனியாக எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஹர ஹர சங்கர... சிவ சிவ சங்கர... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பர தேரோட்டத்தை தொடங்கினர்.

நகர்வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர். யானைக்கல், விளக்குத் தூண் சந்திப்பு, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, தவிட்டு சந்தை, தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மேலவெளி வீதி, குட்ஷெட் ரோடு, வக்கீல் புதுத்தெரு வழியாக அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெற்றது. நகர்வலம் வந்த மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கைப்பிடி அரிசி தானமாக கொடுங்கள்
தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதாக ஐதீகம். இன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும். பொருளாதார நிலையும் உயரும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் உயர்வாக கூறிய மார்கழி மாதத்தில் வரும் இந்த மகத்தான தினத்தில் முறையாக ஈசனை வழிபட வேண்டும். கைப்பிடி அரிசியேனும் யாருக்காவது தானமாகக் கொடுக்க வேண்டும்.

ஈசன் கொடுத்த உணவு
அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் , அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்ற தாழ்வு இன்றி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் படியளக்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்று அங்கு கொடுக்கும் பிரசாதத்தை கொண்டு வந்து வீட்டில் அரிசி பானையில் போட்டு வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.