For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகையில் வெள்ளம்... பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவன் - மதுரை புட்டுத்திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெறுகிறது. புட்டுத்தோப்பில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

மதுரை: வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதே போல பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரைகள் உடையும் அபாயத்தில் இருக்கவே மக்களை வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை பலப்படுத்த பாண்டிய மன்னன் கட்டளையிட்டான். வந்தி என்ற மூதாட்டிக்கு உதவ கூலி ஆள் போல இறைவன் சிவபெருமானே வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம். இந்த திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழாவில் புட்டுத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் தனது பக்தர்களை காத்து ரட்சிக்க ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும், ஏழை முதியவளுக்காக பிட்டுக்கு மண் சுமந்தததும் இந்த நாளில்தான்.

Madurai Puttu thiruvizha in Madurai on Today

நரிகளை பரிகளாக்கிய லீலை

அரிமர்த்தனபாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர், மன்னன் கட்டளைப்படி குதிரைகள் வாங்க பெரும்பொருளுடன் செல்கிறார். செல்லும் வழியில் திருப்பெருந்துறை என்னும் தலத்தில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுகிறார். மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் கோவில் கட்டினார். மன்னன் கொடுத்த பொருள் எல்லாம் தீர்ந்ததும்தான் மாணிக்கவாசகருக்குக் குதிரை வாங்கக் கொடுத்த செல்வம் முழுவதும் சிவப்பணியில் செலவாகிவிட்டது நினைவுக்கு வந்தது. சிவனாரைத் துதித்தார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னனுக்குச் சொல்' என்று இறைவன் கட்டளை ஒலித்தது.

மாணிக்கவாசகரும் மதுரைக்குத் திரும்பி மன்னனிடம் விவரம் கூறினார். ஆனால், சிவபெருமான் கூறியபடி குதிரைகள் வரவில்லை. மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். உடனே மாணிக்கவாசகர், இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். உடனே இறைவன், நரிகளை எல்லாம் பரிகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பிவைத்தார். இந்தத் திருவிளையாடலே ஆவணி மூலத் திருவிழாவின் எட்டாவது நாளான நேற்று நடைபெற்றது.

Madurai Puttu thiruvizha in Madurai on Today

வைகையில் வெள்ளம்

சோமசுந்தரப் பெருமான் அனுப்பிய குதிரைகள், அன்று இரவே மறுபடியும் நரிகளாக மாறியதுடன், ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டுச் சென்றன. கோபம் கொண்ட அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரை வைகை நதியின் சுடுமணலில் நிற்கவைத்து சித்ரவதை செய்தான். மணலின் சூட்டிலிருந்து மாணிக்கவாசகரைக் காப்பாற்றவே, சிவபெருமான் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். பெருக்கெடுத்த வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்துவிட்டது.

வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வந்தி என்னும் பிட்டு விற்கும் ஏழை மூதாட்டிக்கு வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை.

Madurai Puttu thiruvizha in Madurai on Today

கூலி ஆளாக வந்த இறைவன்

இறைவனிடம் முறையிட்டு கண்ணீர் விட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் கூலியாக ஏற்று, வந்தியின் வேலையை செய்ய ஒத்துக்கொண்டார். பிட்டு சுவையாக இருக்கவே, அதனை சாப்பிட்டு விட்டு தனது வேலையைச் செய்வதாக கூறினார் சிவன்.

பிட்டினை சாப்பிட்டு விட்டு வந்தியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார். உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். ஆனால் அதற்கு அந்த கூலியாள் ஒத்துக்கொள்ளவில்லை.

Madurai Puttu thiruvizha in Madurai on Today

சிவனை அடித்த மன்னன்

வந்திருப்பது சிவன் என்று பாண்டிய மன்னனுக்கு தெரியாதே.... கோபம் கொண்ட பாண்டிய மன்னன் கூலியாளின் முதுகில் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவனுக்கு கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான்.

அப்போதுதான் தனது தவறையும் உணர்ந்தான் மன்னன். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் தான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவில் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Madurai Puttu thiruvizha in Madurai on Today

பிட்டு பிரசாதம்

இன்றைய தினம் புட்டுத்திருவிழா புட்டுத்தோப்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சூழ புட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். மதுரை பிட்டுத்திருவிழா பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர் எழுந்தருளியிருக்கிறார். திருவிழவை காண திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும்.

English summary
Puttu Thiruvizha is the one among the 64 Thiruvilayadals of Lord Sundareswarar. It is celebrated at Puttu Thoppu in Madurai on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X