For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்

நாடு முழுவதும் மகா சிவ ராத்திரி விழா விடிய விடிய கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் பக்தர்கள் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டனர்.

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களிலும் குல தெய்வ கோவில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்று சிவனை வழிபட்டனர். காலை முதலே விரதம் இருந்த பக்தர்கள், இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து இறைவனை வணங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும், சிவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்!

சிவபெருமானின் தனது அடியவர்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களை சிவபெருமான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் ஆட்கொண்டார். பச்சிளம் பாலகனாய் சம்பந்தர் பசியால் அழுதார். ஈசன் அம்பாளுடன் வந்து பாலைக் கொடுத்து ஆட்கொண்டார். திருநாவுக்கரசர், ஒரு காலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். அவருக்கு சூலைநோயைக் கொடுத்து ஆட்கொண்டருளினார். சுந்தரர் திருமணம் செய்ய இருந்தபோது முதியவர் வடிவில் வந்தார் சிவபெருமான். "நீ என் அடிமை" என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டி அடிமைப்படுத்திக் கொண்டார். திருவாதவூரார் குதிரை வாங்க பணத்துடன் சென்றார். குருந்த மரத்தடியில் குரு தட்சிணாமூர்த்தியாக இருந்த சிவபெருமான், தன் காலால் தீட்சை தந்து ஆட்கொண்டார். இவ்வாறு அடியவர்களை ஆட்கொண்ட இறைவனை நாடு முழுவதும் மகாசிவராத்திரி நாளில் சிவனை தரிசிக்க திரண்டனர்.

காசியில் மகாசிவராத்திரி

காசியில் மகாசிவராத்திரி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர். பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டனர். கங்கை கரையில் இருந்து கோயில் நோக்கி வந்த பக்தர்கள் குழு, உடுக்கை அடித்தபடியும், பாரம்பரிய இசை கருவிகளை இசைத்தபடியும் ஊர்வலமாக சென்றனர். கோரக்பூரில், உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், இளநீர், வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத், சிவ வழிபாடு செய்தார்.

உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர்

உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர்

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவலிங்கத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வில்வ இலை அபிஷேகம்

வில்வ இலை அபிஷேகம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோயிலில், சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சர்பம் மற்றும் நந்திக்கு பால், வில்வ இலை அபிஷேகம் செய்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள கவுரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.

காளஹஸ்தி சிவன் கோவில்

காளஹஸ்தி சிவன் கோவில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தா்கள் குவியத் தொடங்கினா். காளஹஸ்தி முழுவதும் பக்தா்கள் கூட்டத்தின் சங்கநாதமும், சிவநாம கோஷமும் எதிரொலித்தது. சிவனடியாா்கள் பலரும் ருத்திராட்ச மாலைகள், திருநீறு அணிந்தபடி காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு மனநிறைவுடன் திரும்பினா். பலா் கோயில் அருகில் உள்ள சொா்ணமுகி ஆற்றில் புனித நீராடி தங்களின் மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். நான்கு கால அபிஷேகங்களில் பக்தா்கள் கலந்து கொண்டு சிவனை தரிசித்தனா்.

சிவபெருமானுக்கு அபிஷேகம்

சிவபெருமானுக்கு அபிஷேகம்

தமிழ்நாட்டில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களிலும் பஞ்சசபைகளிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர், திருவிடைமருதூர்,பாபநாசம், நாகையில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சிவ தரிசனம் செய்தனர்.

ஈஷாவில் மகா சிவராத்திரி

ஈஷாவில் மகா சிவராத்திரி

கோவையில் ஈஷா யோகா மையத்தில் 26ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. நேற்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய அவர்கள், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களாது கைகளால், கடல் மண்ணில் லிங்கம் அமைத்து, பூஜை செய்தனர். அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி - அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற்றது. இன்று காலை சுவாமி அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. நாளை மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.

English summary
Maha Shivaratri celebrated on February 21 across India. Shiva the god of destruction is worshiped on this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X