For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகா சிவராத்திரி நாளில் களை கட்டும் சிவாலய ஒட்டம் - கோவிந்தா கோபாலா முழக்கம்

Google Oneindia Tamil News

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று சிவாலய ஓட்டம் என்ற பெயரில் பனிரெண்டு சிவாலயங்களுக்கும் நடந்து சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி சிவாலயங்களுக்கு நடந்து சென்று தரிசிக்கும்போது, கோவிந்தா கோபாலா என்று கூவி வணங்கி வருகின்றனர். இதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

பீமன் தன்னிடம் இருந்த 12ஆவது உத்திராட்ஷத்தை கீழே போடும்போது பீமனின் ஒரு கால் வியாக்ரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், ஒரு கால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் வியாக்ரபாதருடன் வாதம் செய்யத் தொடங்கினான். இந்த வழக்கில் தருமரோ தன்னுடைய தம்பி என்றும் பாராமல், வியாக்ரபாத மகரிஷிக்கு சாதகமாக தீர்ப்பு வழஙகினார். பீமனுடைய உடலில் பாதி வியாக்ரபாத மகரிஷிக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கினார். முடிவில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்கியது. அதோடு பீமனின் கர்வமும் காணாமல் போணது. மேலும் புருஷமிருகத்தின் மீதிருந்த அவதூறும் நீங்கிவிட்டது. வியாக்ரபாதரிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஓடியதை நினைவு கூறும் வகையிலேயே, இன்றைக்கும் சிவ பக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிச்சென்று கோவிந்தா கோபாலா என்று சொல்லிக்கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்து சமயத்தைப் பொருத்தவரையில், ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகளும், நேர்த்திக்கடன் செலுத்துவதும் இருக்கும். அம்மனுக்கு என்றால், விரதமிருந்து பூக்குழி இறங்குவதும், அதுவே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்றால், இருமுடியை கொண்டு சென்றும், சபரிமலை ஐயப்பன் என்றால் இருமுடி கட்டி பதினெட்டு படியேறி தரிசனம் செய்வதும் வழக்கம்.

ஆறுமுகக் கடவுளான, முருகன் என்றால் பாதயாத்திரையாக நடந்து சென்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு. அதுவே, காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாராயணன் என்றால், ஏகாதசி விரதம் இருப்பதும், திருப்பதி வெங்கடாசலபதி என்றால் சிலர் கீழ் திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதும் நடைமுறை.

மகா சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம்

அதேபோலத்தான், எம்பெருமான் ஈசனை வணங்குவதும். சிவபெருமானை வணங்குவதற்கு உரிய நாட்களாக பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, மாதாந்திர சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் என இருந்தாலும், மாசி மாதத்தில் வரும் மஹாசிவராத்திரி நாள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

அஷ்ட சிவாலய யாத்திரை

அஷ்ட சிவாலய யாத்திரை

மகா சிவராத்திரியை ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். சென்னையில் என்றால், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் அனைவரும், மஹாசிவராத்திரி தினத்தன்று, மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அஷ்ட சிவாலயங்களுக்கும் பாதயாத்திரையாக சென்று வணங்கி வருவது வாடிக்கை.

கோவிந்தா கோபாலா

கோவிந்தா கோபாலா

அது போலவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள், மஹாசிவராத்திரி தினத்தன்று சிவாலய ஓட்டம் என்ற பெயரில் பனிரெண்டு சிவாலயங்களுக்கும் நடந்து சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி சிவாலயங்களுக்கு நடந்து சென்று தரிசிக்கும்போது, கோவிந்தா கோபாலா என்று கூவி வணங்கி வருகின்றனர்.

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம்

வழக்கமாக சிவன் கோவிலுக்கு சென்று, எம்பெருமான் இறையனாரை தரிசிக்கும்போது, அந்த ஊரில் இருக்கும் சிவபெருமானின் பெயரையும், மஹாதேவா, என்றும் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும் தான் சிவனை தரிசிப்பது வழக்கம். ஆனால், இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு கொண்டு சிவபெருமானை தரிசிக்கும் போது, கோவிந்தா...கோபாலா என்று காக்கும் கடவுள் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தை சொல்லி வணங்கி வருகின்றனர்.

பனிரெண்டு சிவாலய தரிசனம்

பனிரெண்டு சிவாலய தரிசனம்

மகா சிவராத்திரி தினத்தில் ஓடும் இந்த சிவாலய ஓட்டமானது, புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஆரம்பமாகின்றது. அங்கிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக சுமார் 14 கி.மீ தொலைவிலுள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் காண்வெண்ட் சந்திப்பு வழியாக சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலுக்கு செல்வார்கள்.

தேவி வடிவில சிவபெருமான்

தேவி வடிவில சிவபெருமான்

பின்னர் அங்கிருந்து, பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், தற்போது பத்மநாபபுரம் என்றழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவிலுக்கு செல்வார்கள். பனிரெண்டு சிவாலயங்களில் இக்கோவிலில் மட்டுமே சிவபெருமான் தேவி வடிவில் காட்சியளிக்கிறார்.

நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்

நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்

பத்மநாபபுரம் சிவபெருமானை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், ஆகியவற்றை தரிசித்துவிட்டு, அங்கிருந்து கோழிப்போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலுக்கு சென்று இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

சிவபக்தர்களுக்கு சந்தனம் பிரசாதம்

சிவபக்தர்களுக்கு சந்தனம் பிரசாதம்

இந்த பனிரெண்டு சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் வழக்கம்போல பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்படும். ஆனால் நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. இக்கோவில் சிவபெருமானும் காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாராயணனும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுப்பதால் சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதற்காக சந்தனம் வழஙகப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சிவாலயத்திலும் சிவனை தரிசிக்கும்போது கோவிந்தா கோபாலா என்று பக்தர்கள் என கூறிக்கொண்டு தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவபக்தியில் யார் உசத்தி

சிவபக்தியில் யார் உசத்தி

சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான கராணம் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு ஒரு பீமன் கதை ஒன்றையும் குமரி மாவட்ட மக்கள் சொல்கின்றனர். அதாவது, துவாபர யுகத்தில், பஞ்ச பாண்டபவர்களில் மூத்தவரான தர்மருக்கு ராஜகுரு யாகம் நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்ரபாத மகரிஷி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சஷ மிருகத்திற்கு எம்பெருமான் ஈசன் மீது மிகுந்த அளவற்ற பக்தியும், அதே சமயத்தில் மஹாவிஷ்ணுவின் மீது அளவற்ற வெறுப்பும் உண்டானது. அதே சமயத்தில் பீமனுக்கும் தான் தான் சிவபக்தியில் உயர்ந்தவன் என்ற அகந்தையும் உண்டு.

பனிரெண்டு உத்திராட்ஷங்கள்

பனிரெண்டு உத்திராட்ஷங்கள்

பீமன், வியாக்ரபாதர் என இருவரின் அகந்தையையும் நீக்கி, சிவனும் விஷ்ணுவும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்று தான் என்பதை இருவருக்கும் புரிய வைக்கவும், மஹாவிஷ்ணு பீமனிடம் புருஷமிருகத்தின் பால் கொண்டு வரக் கட்டளையிட்டார். கையோடு 12 உத்திராட்ஷங்களையும் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் மிகுந்த தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

பீமனை பிடித்த புருஷமிருகம்

பீமனை பிடித்த புருஷமிருகம்

பீமன் அடர்ந்த காட்டை அடைந்த போது, அங்கு வியாக்ரபாதர் (புருஷ மிருகம்) கடும் தவத்தில் இருந்தார். அப்போது பீமன், கோவிந்தா.... கோபாலா என்று அபயக்குரல் எழுப்பியபடியே பாலைப் பெறுவதற்கு முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, புருஷ மிருகத்திற்கு சிவலிங்கம் விஷ்ணுவாகத் தெரிய தவம் கலைந்துவிடுகிறது. தன்னுடைய சிவபூஜையைக் கலைத்த பீமனை மிகுந்த ஆக்ரோஷத்துடன் துரத்திச் சென்று பிடித்து வைத்துக்கொண்டது. உடனே பீமன் கையில் வைத்திருந்த உத்ராட்ஷங்களில் ஒன்றை அந்த இடத்தில் போட்டான்.

சிவலிங்கமான உத்திராட்ஷம்

சிவலிங்கமான உத்திராட்ஷம்

பீமன் கையில் வைத்திருந்த ஒரு உத்திராட்ஷத்தை கீழே போட்டவுடனேயே அங்கே ஒரு சிவலிங்கம் உருவானது. புருஷமிருகம் மிகுந்த சிவபக்தி மிகுந்தவர் என்பதால், உடனடியாக சிவபூஜையை தொடங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி, பீமன் மீண்டும் கோவிந்தா.... கோபாலா என்று சொல்லிக்கொண்டு, புருஷமிருகத்திடம் பால் பெற முயற்சி செய்தபோது, மீண்டும் அது பீமனை துரத்திச்சென்று பிடித்து வைத்துக்கொள்ள, திரும்பவும் ஒரு உத்திராட்ஷத்தை கீழே போட்டு விட்டு ஓடிவிட்டார்.

வியாக்ரபாதருக்கு சொந்தம்

வியாக்ரபாதருக்கு சொந்தம்

இப்படியாக 12 உத்திராட்ஷங்களையும் போட்ட இடங்களில் 12 சிவலாயங்கள் உருவாகின. 12ஆவது உத்திராட்ஷத்தை கீழே போடும்போது பீமனின் ஒரு கால் வியாக்ரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், ஒரு கால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் வியாக்ரபாதருடன் வாதம் செய்யத் தொடங்கினான். இந்த வழக்கு நீதி தேவனான தருமரிடம் சென்றது. தருமரோ தன்னுடைய தம்பி என்றும் பாராமல், வியாக்ரபாத மகரிஷிக்கு சாதகமாக தீர்ப்பு வழஙகினார்.

வியாக்ரபாதருக்கு சாதகமான தீர்ப்பு

வியாக்ரபாதருக்கு சாதகமான தீர்ப்பு

பீமனுடைய உடலில் பாதி வியாக்ரபாத மகரிஷிக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கினார். முடிவில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்கியது. அதோடு பீமனின் கர்வமும் காணாமல் போணது. மேலும் புருஷ மிருகத்தின் மீதிருந்த அவதூறும் நீங்கிவிட்டது. இப்படி தன்னைக் காத்துக்கொள்வதற்காக பீமன் ஓடியதை நினைவு கூறும் வகையிலேயே, இன்றைக்கும் சிவ பக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிச்சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

English summary
To commemorate the running of Bhiman to protect himself from the Viyakrapathar, today, Lord Siva devotees are worshiping Govinda…Gopala saying that they had fled to twelve Sivalayas on Maha Sivaratri day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X