For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பித்ரு தோஷம் தீர மஹாளய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் கொடுங்க - கை மேல் பலன் கிடைக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி. பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்ச காலத்தில் செய்யும் தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பது நம்பிக்கை.

முன்னோர்களின் ஆசி

முன்னோர்களின் ஆசி

மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

தட்சணை கொடுங்க

தட்சணை கொடுங்க

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். முறைப்படி தர்ப்பபணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும் .

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்க்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

பித்ரு தர்ப்பணம்

பித்ரு தர்ப்பணம்

ஆவணி மாதம் பௌர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவசை வரை வரக்கூடிய 15 நாட்கள், மஹாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். இந்த ஆண்டு மஹாளயம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை உள்ளது. இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

புண்ணியம் கிடைக்கும்

புண்ணியம் கிடைக்கும்

நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.
பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

தீராத கஷ்டங்கள்

தீராத கஷ்டங்கள்

பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன், நோய், கஷ்டநஷ்டங்கள் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் துன்பப்படுபவர்கள் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம்.
நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது என்பது நம்பிக்கை. பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பசுவிற்கு பழம்

பசுவிற்கு பழம்

வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான புனித ஸ்தலங்களில் செய்யலாம். சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம். இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோக்ஷனம் செய்யலாம். கோ-சம்ரோக்ஷனம் பரம ஔஷதம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

பித்ரு தர்ப்பணம் கடமை

பித்ரு தர்ப்பணம் கடமை

இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாவ புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

என்ன நாளில் என்ன பலன்

என்ன நாளில் என்ன பலன்

பிரதமை : செல்வம் பெருகும் (தனலாபம்) துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி) திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்
சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்) பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி) சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்) சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி அஷ்டமி : நல்லறிவு வளரும். நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும். ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம். துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும். திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும். சதுர்த்தசி : முழுமையான இல்லறம் (கணவன் - மனைவி ஒற்றுமை). அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மஹாளய புண்ணிய காலம். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

English summary
Mahalaya Amavasya is the New Moon day, which is the last day of the 15-day period called Mahalaya Paksha.on day to offer Tarpanam.Dissolve your ancestral karma and gain your ancestors blessings on Mahalaya Amavasya. Appease your ancestors on Mahalaya Paksha 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X