சபரிமலையில் சரண கோஷத்துடன் மண்டல பூஜை நிறைவு - மகரஜோதிக்காக 30ல் நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜைக்குப் பிறகு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி முதல் ஐயப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமியை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் 45 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தப்பட்டதோடு, உடனடி முன்பதிவு முறையும் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மண்டல பூஜையையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் உயர்த்தியது. கடந்த வாரம் முதல் தினசரியும் 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. அதன்படி பக்தர்களும் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர்.
கலசாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கிய போது ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பனை தரிசனத்திற்காக இருமுடி கட்டுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம், ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க வழிபட்டனர்.
இந்தநிலையில் 41 நாட்கள் சிறப்பு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 11.50 மணி முதல் 1.15 மணி வரை நடந்த பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடத்தினர். மண்டல பூஜை முடிந்ததும் மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு, 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
கடந்த 41 நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை சன்னிதானத்தில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல்கள் நிரம்பி வழிந்தன.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள். அடுத்த மாதம் 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில் அருகில் உள்ள பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெறும். அப்போது, சபரிமலை ஐயப்பனே ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாக ஐதீகம். ஆகவே தான் மகர ஜோதி தரிசனத்தை காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
மகர விளக்கு பூஜைக்க முன்பாக சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமாக மகர சங்கரம பூஜை நடைபெறும். ஐயப்பனுக்கு நடைபெறும் பூஜைகளில் இது முக்கியமான பூஜை ஆகும். சூரியன் தனுச ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் முகூர்த்த நேரத்தில் நடைபெறம் இந்த மகர சங்கரம பூஜையில் திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு விஷேச அபிஷேகம் நடைபெறும்.