ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.
திருப்பள்ளியெழுச்சி
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
விளக்கம்:
திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். நட்சத்திரத்தின் ஒளி மறைந்து போய் விட்டது. சூரியனின் ஒளி எழுந்து விட்டது. எங்களுக்கு கருணை காட்டி, வீரக்கழல் செறிந்த உனது திருவடிகளை எங்களுக்குக் காட்டி அருள் புரிவாயாக என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்
ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 22