India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 28

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மார்கழி மாதம் 28வது நாளில் திருப்பாவையின் 28வது பாசுரத்தை பாடலாம். குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்றமளிக்கிறது.

திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களில் இன்று எட்டாவது பாசுரத்தை பாடலாம்.

Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 28

திருப்பாவை பாடல் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

இடையர் குலத்தில் பிறந்த நாங்கள், பசுக்கூட்டங்களின் பசு, ஆடு, மாடு ஆகியவற்றை மேய்த்தபடியே காடு சென்றோம். வலக்கை இடக்கை அறியாத ஆயர்குலத்தில், பிறந்தவர்கள் நாங்கள். கண்ணா, நீயும் பசுக்கூட்டங்களோடு உன் இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு, கானகம் வந்துள்ளாய் (கண்ணன் ஒருமுறை யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்ப்பதை, யமுனையின் மறுகரையில் இருந்த பெண்ணொருத்தி, தன்னிடம் சொர்க்கம் எங்கு உள்ளது என்று கேட்டதாக, தனது குழந்தையிடம் மறுகரையில் உள்ள கண்ணன் மற்ற கோபியருடன் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை, உண்ணும் காட்சியை விளக்கி சொர்க்கம் இங்கேதான் உள்ளது என்று கூறினாளாம். ஆனால் ஏதுமறியாத கோபியர் சிறுவர்கள் கண்ணனை நண்பனாக பாவித்து விளையாடி மகிழ்ந்தனராம்! இதையே நினைவு கூரும் வகையில், ஆண்டாள் கூறுகிறாள்.

அங்கு ஆயர்குலத்தவருடன் சேர்ந்து உணவு உண்கிறாய். இதுவே நாங்கள் பெற்ற பெரும்பேறு! நீ ஆயர்குலத்தில் பிறந்ததே நாங்கள் இப்பிறப்பில் செய்த பெரும் புண்ணியம். குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே! உமக்கும் எமக்கும் உள்ள இந்த உறவு பந்தம், யாராலும் எப்போதும் பிரிக்க இயலாதது. இந்தப் பிறப்பில் மட்டுமல்ல... முற்பிறப்பிலிருந்தே ஏற்பட்ட பந்தம். நாங்களோ சிறுபிள்ளைகள். படிப்பறிவில்லாத ஆயர்குலத்தில் தோன்றியவர்கள். உம்மை மரியாதையாக, உயர்வாக, உமது லட்சணத்துக்கு ஏற்றவாறு உனது ஆறு குணங்களையும் விளக்கக்கூடிய சொற்களால் உன்னை துதிக்க எமக்குத் தெரியாது. எனவே, உனது பெயரை முழுமையாகக் கூட்ட சொல்லத் தெரியாமல் சிறிய பெயரால், கண்ணா என்று அழைக்கிறோம். அதைக் கண்டு கோபம் கொள்ளாமல், எங்களது இறைவனே! நீயே எமக்கு அருள்புரிய வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்றமளிக்கிறது.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8:

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

விளக்கம்:

என்னை ஆட்கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக! என்று இறைவனை போற்றிப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

English summary
Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 28
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X