For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 3 #Margazhi,#Thiruppaavai

Google Oneindia Tamil News

திருப்பாவை பாடல் - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன வாமன அவதாரத்தை பாடுகிறாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

Margazhi Tirupavai, Tiruvempavai 3

வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடி
இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும் என்று விரத மகிமையை கூறுகிறாள் ஆண்டாள்.

திருவெம்பாவை பாடல் - 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்:

முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.

தூங்கிக் கொண்டிருந்த தோழியோ, "ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.

வந்த தோழியர் அவளிடம், "அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்கிறது இந்த பாடல்.

English summary
Margazhi month on December 19,2019 Thirupavai and Thiruvembavai has begun in the Vishnu and Siva temples all over Tamil Nadu. here is the song of Tirupavai and Tiruvempavai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X