For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை.

நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

Nagercoil Nagaraja Temple

நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. இன்றையதினம் ஆலய தரிசனம் பகுதியில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

நாகர்கோவில் நாகராஜா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.

Nagercoil Nagaraja Temple

தலபுராணம்

நாகராஜா திருக்கோயில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை சமணக் கோயிலாக இருந்தது. ஆரம்பகாலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குணவீரபண்டிதன், கமலவாகபண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்ட சமணர்கள் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சாரியார்களாவர். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோயிலில் இருந்திருக்கிறது. நாகர் வழிபாடு அப்போதே பரவியிருக்கலாம்.

Nagercoil Nagaraja Temple

புராண கதை

சமணத்தின் 23ஆம் தீர்தங்கரர் பார்சுவநாதர் இவருக்கு பிறவிகள் தோறும் துன்பமளித்தவர் சமடன். இவர் கடைசி பிறவியில் மகிபாலன் என்னும் பெயரில் பிறக்கிறார் அப்போது பசுவதநாதருக்கு தாத்தா முறையாகிறது. மகிபாலன் ஒரு மரக்கட்டையை தெருப்பிலிட்டார், பார்சுவநாதனாக இருந்த சிறுவன் அந்த கட்டையில் இரு பாம்புகள் உள்ளன அவற்றை நெருப்பில் போடாதே என்கிறான் ஆனால் மகிபாலன் கேட்கவில்லை அதனால் பாம்புகள் இறக்கின்றன பார்சுவன் ஓதிய மந்திர மகிமையால் ஆண் பாம்பு நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) பெண் பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறக்கின்றனர்.

ஆதிஷேசன்

அனந்தன் ஆதிசேஷனின் பெயர் ஆயிரம் தலைகளை கொண்டவர் பார்சுவநாதர் புராணத்தில் இடம்பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன். இதனால் இக்கோயில் வைணவக் கோயில் ஆனது. திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Nagercoil Nagaraja Temple

அதிசய நிகழ்வு

இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

Nagercoil Nagaraja Temple

சரித்திர வரலாறு

இத்திருக்கோயில் கட்டுமானம் தொடர்பாக ஒருகதை வழங்கி வருகிறது. கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன். இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும் நாஞ்சில் நாட்டு நாகராஜா கோயிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர். அப்போது நாகர்கோவில் நாகராஜா கோவிலின் சிறப்பு பற்றி அறிந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவிலுக்கு நேர்ச்சை செய்து வழிபட்டதால் அந்த மன்னரின் சருமநோய் தீர்ந்தது. இதற்கு பிரதியுபகாரமாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.

ஆவணி ஞாயிறு வழிபாடு

இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம். இறைவன் - அனந்தகிருஷ்ணன், நகராஜா, தீர்த்தம் - நாகதீர்த்தம், தலவிருட்சம் - ஓடவள்ளி, ஆகமம் - தாந்திரீகம்

சைவம், வைணவம், பௌத்தம்

நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.
அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

கொடிமரமும் தல விருட்சமும்

ஓடவள்ளி என்று கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும்.

ஆமைக் கொடி

பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

நாக வழிபாட்டின் நன்மை

நல்லவை அனைத்தையும் தந்தருளும் மகாசக்தி கொண்டது நாக வழிபாடு. இத வழிபடும் முறையை அறிந்துகொண்டு, அதன்படியே வழிபட்டு வணங்கினால், எல்லா வளமும் நலமும் பெறலாம்!. புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாகதோஷம் நீங்கும்

குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர்.
கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.
நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.
குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

சருமவியதிகள் தீரும்

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. ஆவணி மாத ஞாயிறு நாக வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பானது. ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

English summary
Nagaraja Temple is a Hindu temple worshipping Nagaraja situated at the heart of Nagercoil town. The name for the town Nagercoil originated from this temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X