For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொட்டதெல்லாம் துலங்கும் தை பூசம்

By Astro Sundara Rajan Arunachalam
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று பழனி மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் தை பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். பௌர்னமி தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க "தைப்பூச திருநாள்" அமைகின்றது. இச் சிறப்பு மிக்க இத்தினம் இவ் வருடம் 31.01.2018 அன்று வித்யா காரகனின் நாளான புதன் கிழமையில் அமைந்து மட்டுமல்லாமல் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தை பூசத்தில் ஏற்படும் முழு சந்திர கிரஹணமும் இன்று மேலும் சிறப்பை ஏற்படுத்துகிறது

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூசையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தொட்டது துலங்கும் தை பூசம்:

தொட்டது துலங்கும் தை பூசம்:

தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், வித்யாரம்பம் எனப்படும் கல்வி தொடக்குதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன. இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம்.

பஞ்ச பூதங்கள் உருவான நாள்:

பஞ்ச பூதங்கள் உருவான நாள்:

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது. சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம்

பூசத்தின் அதிதேவதை குருபகவான்:

பூசத்தின் அதிதேவதை குருபகவான்:

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

பூசம்:

பூசம்:

இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி' என்றால் ‘பலம்' என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று! பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும்.

இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை ஆகும். நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூசநட்சத்திரத்தை பற்றி கூறுகையில் "பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காட வல்லவர்களாகவும் குற்றமற்ற ரத்தினங்களும் ஆபரணங்களும் அணிந்து மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது. இராமாயணத்தில் பரதன் பூசநட்சத்திரத்தில் பிறந்தான் என்பது உலகறிந்ததே. இதைக் கம்பரும் உறுதி செய்கிறார்.

புகழ் உச்சம் தரும் பூசம்:

புகழ் உச்சம் தரும் பூசம்:

என்னுடைய ஆய்வில் நான் கவனித்தவரை பூசநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணவாழ்வு சற்று ஏறக்குறைய இருந்தாலும் (பூச நட்சத்திர புணர்ப்பு தோஷமும் காரணம் தானே) ஏதோ ஒரு விதத்தில் சாதனையாளர்களாகத்தான் இருக்கிறார்கள். சிலர் ஆன்மீகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். சித்தர்களில் கமல முனி சித்தர் தை பூசத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு.

சிலர் அரசியலில் புகழ் பெற்றிருக்கிறார்கள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் பிறந்தது தை பூசம் என்கிறது நூல்கள். சிலர் ஆடல் பாடல் சினிமா கலை துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். சிலரோ தியாகத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். தன் உயிரை கூட துச்சமாக மதித்து பலரை காப்பாற்றி புகழின் உச்சியை அடைந்தவர்களும் இந்த தை பூசத்தில் பிறந்தவர்கள் தான். இராமாயணத்தில் அண்ணன் இராமனுக்காக ஆட்சியை தியாகம் செய்த பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சனிக்கிழமையன்று ஏதாவது ஒரு வேலையை தொடங்குவதென்றால் அந்தவேலை வளரும் என்று பலரும் தொடங்க யோசிப்பார்கள். ஆனால் சனியின் ஆதிக்கத்தில் ஒரு நற்காரியத்தை தொடங்கினால் தர்ம கர்மாதியான சனி அதை பலமடங்கு வளர செய்து புகழ்பெற செய்வார் என்பதுதான் உண்மை. பூசநட்சத்திர அதிபதி சனி. பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. இவர்கள் இருவரும் இனைந்த தை பூச தினத்தில் வள்ளலார் ஆரம்பித்த அன்னதானம் இன்றும் கொடிகட்டி பறக்கிறது என்பது கண்கூடு. உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்.

English summary
Thaipusam or Thai Poosam is a Hindu festival celebrated mostly by the Tamil community. It falls in Tamil Solar month Thai which is Solar month Makara in other Hindu calendars. It is celebrated not only in countries where the Tamil community constitutes a majority but also in countries where Tamil communities are smaller such as Mauritius, Singapore and Malaysia. This festival is also referred as Thaipooyam and Thaippooyam. This festival commemorates the occasion when Parvati gave Murugan a Vel or spear so he could vanquish the evil demon Soorapadam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X