For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடும் ஒய்யார திருவோணம்!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது 'கேரளா' என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கேரள மக்கள் இன்றளவும் மதித்து போற்றும் அளவுக்கு உன்னத அரசனாக இருந்தவன், அந்த தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி.

முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், அவனது நல்லாட்சி, தேவர்களுக்கு மேலானவனாக அவனை சீர்தூக்கி விட்டிருந்தது.

onam festival is celebrated in the beginning of the first month of malayalam calendar

இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த வேள்வியின் நடுவில் தானம் கேட்டு வரும் அனைவருக்கும் கேட்டதை தரும், சிறப்பான தருமத்தை செய்யவும் அவன் முடிவு செய்திருந்தான். இந்த வேள்வியை அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் செய்வது என்றும் முடிவானது.

அச்சமடைந்த தேவர்கள்

இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள். ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்ததன் காரணமாக தேவர் களைப் போன்ற உயர்ந்த நிலைக்கு மகாபலி சக்கரவர்த்தி வந்து விட்டான். தற்போது அவன் நடத்தப் போகும் வேள்வியும், அதில் கொடுக்கப் போகும் தான தர்மங்களும் மூவுலகையும் ஆட்சி செய்யும் தகுதியை அவனுக்கு பெற்றுத் தந்துவிடும். மூன்று உலகங்களிலும் அவனை வெல்ல எவராலும் முடியாது என்ற நிலை உருவாகி விடும். இதனால் தங்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படுவதுடன், அசுரர்களின் அரசாட்சி மூவுலகங்களிலும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று தேவர்கள் அனைவரும் அஞ்சினர். இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் தங்களை காத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் போய் நின்றனர்.

வாமன அவதாரம்

தேவர் களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதேநேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச் செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.

'இந்திரனே! நான் காஷ்யபர் என்பவரின் மகனாக பிறந்து, தக்க நேரத்தில் உங்களை காத்தருள்வேன். கவலை வேண்டாம்' என்று கூறினார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் தங்கள் உலகுக்கு திரும்பிச் சென்றனர்.

தேவர்களுக்கு அருளியபடியே வாமன (குள்ளமான) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. 3 அடி உயரமே கொண்ட வாமனர் ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலமுமாக மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தும் இடத்திற்குச் சென்றார். வேள்வி தொடங்கி, தான தருமங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் அங்கு தாமதமாக வந்து சேர்ந்தார் வாமனர்.

தானத்தை தடுக்க முயற்சி

அப்போது வேள்வி நிறைவடையும் தறுவாயில் இருந்தது. வாமனரைப் பார்த்ததும் வேள்வியில் இருந்து எழுந்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, 'அந்தணரே! தான தருமங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வந்துள்ளீர்களே!' என்று கேட்டான்.

அதற்கு வாமனர், 'நான் வர சற்று தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை. என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண் கொடுத்தால் போதும்' என்றார்.

onam festival is celebrated in the beginning of the first month of malayalam calendar

அவரது வேண்டுதலை தட்டமுடியாமல் தானம் கொடுக்க ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் சுக்கிராச்சாரியாருக்கு தெரிந்து விட்டது, வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது. அவர், 'மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்' என்று அறிவுறுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. 'குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!' என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான். இனி அவனை தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்கிராச்சாரியார், வண்டின் உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார்.

உலகளந்த பெருமாள்

இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்கிராச்சாரியாரின் கண் பார்வை பறிபோனது. மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான்.

இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர் மகாபலியிடம், 'சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது' என்று கேட்டார்.

'இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்' என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.

திருவோணத்திருவிழா:

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. 'நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்' என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு.

தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் தெருக்கள்தோறும் மக்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

முன் கர்ம நல்வினை:

சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது.

அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.

ஜோதிடத்தில் திருவோணம்:

கற்பனை கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்; சீரிய வழியில் பொருள் தேடுபவர்; நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி; செல்வந்தர் என்று கூறுகிறது.

பழம்பெரும் ஜோதிட நூல்களில் திருவோண நக்ஷத்திரம் பற்றிய குறிப்புகள்:

இருபத்தேழு நக்ஷத்திரங்களில் செல்வத்தை குறிக்கும் \"திரு\" எனும் அடைமொழியை கொண்ட நக்ஷத்திரங்கள் சிவனுக்குறிய திருவாதிரையும் பெருமாள் எனும் விஷ்ணுவிற்குறிய திருவோணமும் ஆகும்.

புகழ்பெற்ற ஜோதிட நூலான நக்ஷத்திர சிந்தாமணி திருவோணத்தை மிகவும் சிறப்பாக கூறுகிறது. வடமொழியில் சிரவணம் என்ற சொல்லுக்கு செவியால் கேட்கும் திறன் என்று பொருள்.

எனவே திருவோணத்தில் பிறந்தவர்கள் நன்கு கற்று புகழோடு திகழ்வார்கள். மிகவும் அழகானவர்கள். எதிர்பாலினத்தை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். தன் அழகால் அனைவரையும் கவர்ந்திடுவார்கள். எளிதில் உணர்ச்சிவச படக்கூடியவர்கள். காம சிந்தனை உடையவர்கள் என கூறுகிறது.

ஜாதக அலங்காரத்தில் திருவோண நக்ஷத்திரம் பற்றி கூறும்போது திருவோணத்தில் பிறந்தவர்

கல்வி கேள்விகளில் சிறந்தவர், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர், ஆனால், தன்னை அண்டியவர்களுக்கு வாரி வழங்குபவர் என்று கூறுகிறது.

யவன ஜாதகம், இவர்களை பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதன்; தைரியசாலி; தனவந்தன்; ஆயகலை அறுபத்துநான்கையும் கற்றவர் என்று கூறுகிறது..

பிருகத் ஜாதகம், இவர்கள், நற்குணமுள்ள மனைவி உடையவர்; செல்வந்தன்; கீர்த்தி உடையவர் என்று கூறுகிறது.

சனி-சந்திர சேர்க்கை:

திருவோண நக்ஷத்திரம் கால புருஷனின் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாம் வீடு மற்றும் கர்ம காரகன் சனியின் வீட்டில் அமைந்திருக்கிறது. எனவே திருவோணத்தில் பிறந்தவர்கள்

"ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே

காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே"

என்ற பாடலுக்கு ஏற்ப காசு சம்பாதிப்பதையே குறியாக கொண்டிருப்பார்கள்.

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில்

ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா?

புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும்

எது எப்படியோ! புணர்ப்பு யோகம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்:

1. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாலக்ஷமியின் நாயகர்

மகாவிஷ்ணுவின் திருப்பெயரே ஸ்ரீ சத்தியநாராயணர் ஆகும். சத்தியநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம். மேலும் திங்கள் கிழமையில் திருவோண நக்ஷத்திர நாளில் சந்திர பலம் நிறைந்த நாளில் செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்

2. சந்திர ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதி தரிசனம் சனிக்கிழமையில் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

3. திருக்கோயிலூர் மற்றும் காஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் கோயில்களில் ஒங்கி உலகளந்த திருவிக்கிரம பெருமாளை திருப்பாவை பாடி வணங்குவதும் சிறந்த பலனளிக்கும்.

English summary
Onam is the state festival of Kerala and witnesses one of the most popular celebrations in the country. It falls during the month of Chingam according to Malayalam Calendar that corresponds to August or September of the Gregorian Calendar. Onam also marks the Malayalam New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X