For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைப்பூச தேரோட்டம் காண பழனியில் குவியும் பக்தர்கள் - நகரமெங்கும் அரோகரா முழக்கம்

தைப்பூச திருவிழாவின் முத்தாய்ப்பாக, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:15 மணியளவில் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முத்துக்குமார சுவாமி தம்பத

Google Oneindia Tamil News

பழனி : பழனியில் இன்று மாலையில் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:15 மணியளவில் அடிவாரத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரவு வெள்ளித் தேரோட்டத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வலம் வந்து அருள்பாலித்தார்.

அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல்கின்றன என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போலவே, இன்றைக்கு பழனியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் பக்தர்களின் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. அந்த அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியை நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா புகழ் பெற்றதாகும். அன்றை தினத்தில் பழனி தண்டாயுதபாணியை தரிசிப்பதற்கும், நேர்த்திக்கடனை செலுத்தவும், தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக பாதயாத்திரையாக வருவதுண்டு.

பாதையாத்திரை

பாதையாத்திரை

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 2ஆம் தேதியன்று பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாவைக் காண கடந்த மார்கழி மாதம் முதல் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கொடியேற்றம் நடைபெற்ற தினம் முதலே பாதயாத்திரையாக பழனியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

தைப்பூச திருக்கல்யாணம்

தைப்பூச திருக்கல்யாணம்

தைப்பூச திருவிழாவின் முத்தாய்ப்பாக, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:15 மணியளவில் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முத்துக்குமார சுவாமி தம்பதி சமேதராக இரவு 8:30 மணியளவில் வெள்ளித் தேரில் ரத வீதிகளில் உலா வரும் வைபமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

நேற்று அதிகாலை 2 மணி முதல் ஒட்டன்சத்திரம்-பழனி தேசிய நெடுஞ்சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் கடும் பனியையும் பொருட்படுத்தாமல், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளம், சண்முகா நதியில் நீராடிவிட்டு, காவடிகளுடன் சென்று பழனியாண்டவரை தரிசித்த வண்ணம் உள்ளனர்.

முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை

முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை

இன்று அதிகாலை 4 மணிக்கு பழனி மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 5:30 மணி முதல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாளில் சண்முகா நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் வைபவம் நடைபெற்றது. காலை 10:45 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேர் ஏற்ற வைபவமும் நடைபெற உள்ளது. தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

தேரோட்டம் காண குவியும் பக்தர்கள்

தேரோட்டம் காண குவியும் பக்தர்கள்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் இன்று மாலை 4:30 மணியளவில் தொடங்குகிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளின் வழியாக வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். தேர் நிலைக்கு வந்தவுடன், தந்தப்பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

குவியும் பக்தர்கள்

குவியும் பக்தர்கள்

தேரோட்டத்தைக் காண்பதற்காகவே, மாலையணிந்து விரதமிருக்கும் முருக பக்தர்கள், பழனியை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனிக்கு வரும் அனைத்து சாலைகளும், பாதயாத்திரை பக்தர்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாகனங்களும் மெதுவாகவே ஊர்ந்து செல்கின்றன.

அன்னதானம்

அன்னதானம்

தேரோட்ட வைபத்தைக் காண பக்தர்கள் வந்துகொண்டே இருப்பதால், பழனியைச் சுற்றி எங்கு திரும்பினாலும், பச்சை ஆடையை பழனி நகரத்தின் மேல் போர்த்தியது போல், பச்சை பசேலென முருக பக்தர்கள் தான் கண்ணுக்கு தெரிகின்றனர். அவர்களின் பசியாற அங்காங்கே தன்னார்வத் தொண்டர்களும், சமூக அமைப்புகளும் அன்ன தானமும், இலவசமாக டீ, காஃபி, தண்ணீர், பிஸ்கட் என தங்களால் முடிந்த சேவைகளை வழங்கி வருகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக போலீசாரும் இரவு பகல் பாராமல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Lakhs of pilgrims from all over Tamil Nadu are invading Palani on the occasion of Thai Pusa Therottam. The main event of the function, Muthukumara Swamy, Valli-Deivanai thirukkalyanam was held at the Periyanayagi Amman temple in the foothills at 7:15 pm last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X