• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்

|

மதுரை: பஞ்சபூத தலங்களில் திருவானைக்காவல் நீர் ஸ்தலம், சிதம்பரம் ஆகாய ஸ்தலம், காஞ்சிபுரம் நில ஸ்தலம், திருவண்ணாமலை நெருப்பு ஸ்தலம், காளஹஸ்தி காற்று ஸ்தலம் என்று எல்லோரும் அறிந்ததே. ஆனால் மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பஞ்சபூத தலங்களின் நீர் தலமான செல்லூரில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவில் ஆலய தரிசனத்தை பார்க்கலாம். இந்த ஆலயத்தின் அம்பிகையை வணங்க திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்', சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்.

Thiru appudaiyar temple Madurai

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார். திருவாப்புடையார் கோவில் மதுரை இது மதுரையின் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம். திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் பாடல் பெற்ற தலங்களில்ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது நம்பிக்கை.

மூலவர்: ஆப்பானூர்க்காரணர்,ரிஷபுரேசர், அன்ன விநோதர்

தாயார்: சுகந்த குந்தளாம்பிகை

தீர்த்தம்: இடபதீர்த்தம், வைகை நதி

திருவாப்புடையார்

சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். நடுக்காட்டில் மரத்துண்டு ஒன்றை சுயம்புலிங்கமாக வழிபட்டார். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்’ என்றானது.

புராண கதை

பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார். புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் 'தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான்.

Thiru appudaiyar temple Madurai

உயிர் பெற்ற மன்னன்

அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான்.

குபேரன் பட்டம்

அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் 'குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது.

சுயம்பு லிங்கம்

இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கீர்த்தி பெரியது

இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது.

கருணை மிகுந்த இறைவன்

சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர்

தானம் செய்த பலன்

இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும். இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது. தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.

திருமண தடை நீங்கும்

இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள். இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Aappudayar Temple is dedicated to Lord Shiva located at Sellur in Madurai City This temple is also called Tiruappanur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more