For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழநி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் பாலாலய பூஜையுடன் தொடங்கியது

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆவது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இதன் முதற் கட்டமாக பழநி தண்டாயுதபாணி கோவிலில் பாலாலய பூஜை நடத்துவதற்காக மலைக்கோவிலின் கார்த்திகை மண்டபத்தில் யாக பூஜை நடத்துவதற்கான யாகசாலை அமைக்கப்பட்டு, மண்டபம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டது. பின்னர், அதில் பாலாலய பூஜை கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப நவகிரகங்களையும் முழுமையாக கட்டுப்படுத்தும் கடவுளாக முருகப்பெருமான கருதப்படுகிறார். கந்த சஷ்டி கவச பாடலிலும், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Pazhani Mugugan Temple Kumbabishekam work started with Palalaya Pooja

அதற்கேற்ப, செவ்வாயின் முழுமையான ஆதிக்கம் பெற்ற கோவிலாகவும், செவ்வாய் தோஷம் போக்கும் கோவிலாகவும், முருகனின் அறுபடை வீடுகளில் மூனறாவது படை வீடாகவும் திரு ஆவினன்குடி என்றழைக்கப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமியின் விக்ரகமானது நவகிரகங்களின் சக்தியையும் உள்ளடக்கிய நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த முருகனை வணங்கினால் நவகோள்களின் தோஷத்தால் அவதிப்படுபவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.

சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த தண்டாயுதபாணி சுவாமி விக்ரகம் அகத்தியரின் நேரடி சித்தராக கருதப்பட்ட போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை.

பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது ஆகம விதியாகும். அதன்படி, 2006ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்நிலையில், பழநி தண்டாயுதபாணி கோவிலின் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்த கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, கும்பாபிஷேகப் பணிகளை தொடங்குவதற்காக நடத்தப்படும் பாலாலய பூஜை கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்றது.

பாலாலய பூஜை என்பது கோவில் வளாகத்தில், கும்பத்தில் புனித நீரை ஊற்றி வைத்து அதன் மேல் தேங்காய் மற்றம் மாவிலையை சுற்றிலும் வைத்து, வேதியர்கள் மூலம் வேதமந்திரங்கள் ஓதப்படும். இதன் மூலம் அந்த கோவில் மூலவரின் தெய்வ சக்திகள் அனைத்தும் அந்த கும்பத்திற்கு மாறிவிடும் என்பது ஐதீகம்.

அதனைத் தொடர்ந்து, அந்த தெய்வீக சக்தியானது கோவில் வளாகத்தில் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்டுள்ள விக்ரகத்திற்கு மாற்றப்படும். கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடியும் வரையிலும் அனைத்து பூஜைகளும் இந்த மரத்தால் செய்யப்பட்ட விக்ரகத்திற்கே நடத்தப்படும்.

அதன்படியே பழநி தண்டாயுதபாணி கோவிலில் பாலாலய பூஜை நடத்துவதற்காக மலைக்கோவிலின் கார்த்திகை மண்டபத்தில் யாக பூஜை நடத்துவதற்கான யாகசாலை அமைக்கப்பட்டு, மண்டபம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டது. பின்னர், அதில் பாலாலய பூஜை கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

பாலாலய பூஜையின் இரண்டாவது நாளான ஞாயிறன்று காலை 9 மணிக்கு 2ஆம் கால யாகபூஜை நடைபெற்றது. அதையடுத்து காலை 10.30 மணியளவில் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. பின்பு மாலை 6 மணிக்கு 3ஆம் கால பூஜையும், இரவு 8 மணியளவில் பூர்ணாகுதி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மூன்றாம் நாளான திங்கள் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 4ஆம் கால யாகபூஜையும், காலை 7.25 மணியளவில் பூர்ணாகுதி, தீபாராதனை, கோ பூஜையும் நடைபெற்றன. இரவு 9 மணியளவில் கலச புறப்பாடு, பாலாலய பிரவேசம், கலாகர்ஷண பூஜைக்கு பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டு ஆகமவிதிப்படி கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

English summary
Kumbabhisheka work started at the Palani Hill Murugan Temple, the 3rd battalion of Murugan's arupadai veedugal, As a first step, the Yagya Salai was organized at the Pazhani Dhandayuthapani Temple to perform the Palalaya Pooja at the Karthigai Mandabam of the Temple. Later, it was held at the Palalaya Pooja last Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X