
வானத்தில் வரிசை கட்டி நிற்கும் கிரகங்கள்.. கிரகமாலிகா யோகமும் உதயநிதி ஸ்டாலின் ஜாதகமும்
சென்னை: வானத்தில் கோள்கள் வரிசை கட்டி நிற்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறோம். இந்த அற்புதம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது. அதிகாலையில் எழுந்து கிழக்கு திசையில் பார்ப்பவர்களுக்கு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, சந்திரன் என கிரகங்கள் வரிசையாக நிற்பதை பார்த்திருப்போம். கிரகங்கள் இப்படி வரிசையாக நிற்கும் அமைப்பு மிகப்பெரிய யோகமாகும். வரும் ஜூலை 2,3ஆம் தேதிகளில் கிரக மாலிகா யோகம் நிகழப்போகிறது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அற்புதமான அமைப்பாகும்.
நவ கிரகங்களில் ராகு, கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாக நிற்குமானால், அதற்கு ஜோதிடத்தில் கிரகமாலிகா யோகம் என்று பெயர். இந்த யோகத்தைப் பெற்றவர்கள், தங்களின் வாழ்வில் பேரும், புகழும், வசதிகள் நிரம்பியவராகவும், உயர்ந்த பதவி, அந்தஸ்துடன் வாழ்வார்கள்.
உதயநிதி அமைச்சரா? துணை முதல்வரா... குரு, சனி, ராகு கேது கிரக பெயர்ச்சிகள் சொல்வதென்ன
சூரியக்குடும்பத்தில் இருக்கும் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நவகிரகங்கள்
ஜோதிடவியலில் நவகிரகங்கள் 12 ராசிகளை ஆட்சி செய்கின்றன. அதில் மேஷம், விருச்சிகம் ராசிகளை செவ்வாயும், ரிஷபம், துலாம் ராசிகளை சுக்கிரனும் ஆட்சி செய்கின்றன. மிதுனம், கன்னி ராசிகளை புதனும், கடக ராசியை சந்திரனும் ஆட்சி செய்கின்றன. சிம்ம ராசியை சூரியனும், தனுசு, மீனம் ராசிகளை குருவும், மகரம், கும்பம் ராசிகளை சனியும் ஆட்சி செய்கின்றன.

ஆட்சி பெற்று பயணிக்கும் கிரகங்கள்
இந்த மாதம் கிரகங்களின் பயணம் அற்புதமாக அமைந்துள்ளது. கும்ப ராசியில் சனி, மீனம் ராசியில் குரு, மேஷ ராசியில் செவ்வாய், ரிஷப ராசியில் சுக்கிரன், மிதுன ராசியில் புதன், கடக ராசியில் சந்திரன் என வரிசையாக கிரகங்கள் ஆட்சி பெற்று பயணிக்கின்றன. ஜூலை 2,3ஆம் தேதிகளில் இந்த கிரக மாலிகா யோக அமைப்பு ஏற்பட உள்ளது. இது கோடிகளில் ஒருவருக்கு ஏற்படும் யோக அமைப்பாகும்.

ராஜயோக அமைப்பு
ஆனிமாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.45 மணி முதல் ஆனி 19ஆம் தேதி ஜூலை 03ஆம் தேதி ஞாயிறு காலை 06.29 மணி வரை கும்ப ராசி முதல் கடக ராசி வரை கிரகங்கள் வரிசை கட்டி நிற்பதோடு ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்வது சிறப்பு. இது ராஜயோக அமைப்பாகும். இந்த நாளில் பிறக்கும் குழந்தை செல்வம் செல்வாக்குடன் நாடாளும் யோக அமைப்பை பெறும் என்கின்றனர் ஜோதிடர்கள். இன்று முதல் வரும் ஜூலை 06ஆம் தேதி வரைக்குமே கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளதால் நற்காரியங்களுக்காக நாம் நினைத்து வேண்டிக்கொள்வது நிச்சயம் பலிக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

உதயநிதி ஸ்டாலின் ஜாதகம்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகமாலிகா என்ற யோக அமைப்பு உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். மேஷம் லக்னம் ரிஷபம் ராசி முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன. இதன் காரணமாகவே படிப்படியாக பதவிகள் உதயநிதி ஸ்டாலினை தேடி வந்துள்ளது. இந்த யோக அமைப்பினால் அவருக்கு அமைச்சர் பதவி விரைவில் தேடி வரும் என்றும் கூறுகின்றனர் ஜோதிடர்கள்.