For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2019 : நாகர்கள் வழிபட்ட பரிகார தலங்கள் - வழிபட்டால் நன்மைகள் ஏராளம்

ஒருவரின் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும். திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி

Google Oneindia Tamil News

மதுரை: ராகு, கேது கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். ராசி மண்டலத்தில் நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்தக் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். பிப்ரவரி 13ஆம் கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியடைகின்றனர். 31.8.20 வரை இந்த ராசிகளில் தங்கியிருப்பார்கள். நல்லது கெட்டது நடப்பதற்கு நேரம் காலம்தான் காரணம் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு உள்ளது. ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய ராகு கேது பரிகார தலங்களை அறிந்து கொள்வோம்.

கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாம்புரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என பல ஆலயங்கள் ராகு கேது பரிகாரத்தலங்களாக உள்ளன.

ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான். நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் மனிதர்களை நிழல் போல பின் தொடர்ந்து அவர்களின் ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக இருக்கின்றன. உலகிலுள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தருபவர் ராகு. அதே நேரத்தில் பக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் சென்று இறைநிலையை ஏற்படுத்தி மோட்சத்திற்கு வழி காட்டுபவர் கேது.

ஸ்ரீ காளஹஸ்தி

ஸ்ரீ காளஹஸ்தி

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும் என்பது ஐதீகம். காளத்தி வேடனான கண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற இடமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் காளத்திநாதர் நாகலிங்க வடிவில் அருள்பாலிப்பது தல சிறப்பாக உள்ளது. இறைவன் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்

சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனையும், கோல விழி அம்மனையும் மனம் உருக வணங்கி வழிபட்டு வர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும். குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இக்கோயிலின் 2வது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இங்கு மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு உகந்த நிறம் நீலம். பாலாபிஷேகத்தின்போது ராகு பகவானின் தலை மீது ஊற்றும் பால் வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தை இங்கு காணலாம். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

திருப்பாம்புரம்

திருப்பாம்புரம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த திருப்பாம்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இது ராகு, கேது ஸ்தலமாகும். ஏக சரீரமாகி, ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருள்கிறார். ஆதிசேஷன்(உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையுள் எழுந்தருளியுள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஈசனையும், அம்மையையும், ராகு, கேதுவையும் வணங்குவோருக்குப் பாவங்கள் நீங்கப் பெறுகின்றன. நினைத்த காரியம் கைகூடுகிறது. இத்தனை சிறப்புக்கும் காரணமான ராகுவும் கேதுவும் கோயில் ஈசானிய மூலையில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். ராகு காலங்களில் இச்சன்னதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர்.

சங்கரநாராயணர் கோவில்

சங்கரநாராயணர் கோவில்

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்தினால் நாகதோஷம் நீங்கும்.

காட்டு மன்னார் கோவில்

காட்டு மன்னார் கோவில்

சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம். சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம். மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

நாகூர் நாகராஜா கோவில்

நாகூர் நாகராஜா கோவில்

நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன் சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி பெரிய பதவிகள் கிடைக்கும்.

 நாச்சியார் கோவில் கல்கருடன்

நாச்சியார் கோவில் கல்கருடன்

கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் இங்கும் வழிபடலாம். ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. ஜாதகத்தில் தசாபுத்தியின்படிதான் நன்மை தீமைகள் நடைபெறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

 திருமுருகன் பூண்டி

திருமுருகன் பூண்டி

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.

கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறுதோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

English summary
The Temples worshipped by The Great Divine Serpent Adiseshan Neutralizes Rahu Ketu ill effects.The king of the nagas, Rahu prayed to Lord Siva and hence this place got the name Thirunageswaram. Here Rahu Bhagavan has manifested with both his consorts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X