சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை - நாளை முதல் 340 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சபரிமலை: ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கேரளா மாநில அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. கூட்டுறவு சங்கங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் முன்பதிவு
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக 15ஆம் தேதி மாலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 16ஆம் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்து இருந்தது. இப்போது வரை கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

போக்குவரத்து வசதி
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

340 சிறப்பு பேருந்து இயக்கம்
சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

தயார் நிலையில் நிர்வாகம்
ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பஸ்களில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா சான்றிதழ்
பம்பை மற்றும் எருமேலியில் மருத்துவ வசதிகள், ஆர்டி-பிசிஆர் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டாயமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அளித்துள்ளது.