For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை யாத்திரை: பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயப்பனை தரிசிக்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை பிறக்கப் போகிறது. இனி மாலையணிந்த பக்தர்களின் சரணகோஷத்தை கேட்கலாம். நாளை முதலே ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கிளம்பிவிடுவார்கள். இன்று மாலையே சபரிமலை சன்னிதானம் நடை திறக்கப்பட்டு விடும். சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி ஏந்தி செல்கின்றனர். அவர்கள் அந்த இருமுடி பையில் தனியாக நெய்யோ, தேங்காயோ தனியாக எடுத்துச் செல்வதில்லை. தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி அதை இருமுடியாக கட்டி எடுத்துக்கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பாடிக்கொண்டு சரணகோஷம் முழங்க சபரிமலை சாஸ்தாவை தரிசிக்க செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்கின்றனர். இருமுடியை முதன்முதலில் தலையில் சுமந்து சென்றது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. நெய்யபிஷேக பிரியன் ஐயப்பன், நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் என்று பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். தங்களின் சக்திக்கு ஏற்ப ஒருவாரம் முதல் ஒரு மண்டலம் வரை விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக கிளம்புவார்கள். இருமுடிதான் சபரிமலை யாத்திரையின் முக்கிய அம்சம். நம்முடைய ஆத்மாதான் நெய். அந்த நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி எடுத்துச் சென்று அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அந்த நெய் பிரசாதமாக திரும்ப வருகிறது. நெய் அபிஷேகம் இறைவனுக்கு சேர்வதால் ஐயப்பனின் மகிமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் தனியாக நெய் கொண்டு செல்வதோ அல்லது தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயை தான் அபிஷேகத்திற்கு வழங்குவார்கள்.

சிவ விஷ்ணு அம்சம்

சிவ விஷ்ணு அம்சம்

ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. முக்கண் கொண்ட தேங்காய் சிவனை குறிப்பதாகும். பசு நெய் கோபாலனாகிய மகாவிஷ்ணுவை நினைவுப்படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அம்சமாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர். இதற்கு ஒரு புராண கதையும் உண்டு.

மணிகண்டன் அவதாரம்

மணிகண்டன் அவதாரம்

சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. விதி அரசி ரூபத்தில் விளையாடியது.

புலிப்பால் தேடி போன ஐயப்பன்

புலிப்பால் தேடி போன ஐயப்பன்

பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு வயிறு வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டுவரக் வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன்.

இருமுடி ஏந்திய மணிகண்டன்

இருமுடி ஏந்திய மணிகண்டன்

தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். அதேசமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இருமுடியைத் தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.

பந்தள அரசன் ஐயப்பன்

பந்தள அரசன் ஐயப்பன்

புலி அடித்து மாண்டு போவான் என்று அரசி நினைத்துக்கொண்டிருக்க, புலிக்கூட்டத்தையே மயங்கச் செய்து புலிவாகனம் ஏறி புலிப்பால் கொண்டு வந்தான். புலிவாகனன் என்ற சிறப்புப் பெயரையும் கொண்டான். மனம் திருந்திய அரசியும் மற்றவர்களும் ஐயப்பனை பந்தள அரசராக பொறுப்பேற்க சொன்னார்கள். தான் மண்ணுலகத் துக்கு வந்த காரியத்தை எண்ணி புறப்பட்டார்.

ஐயப்பன் தரிசனம்

ஐயப்பன் தரிசனம்

தன்னுடைய அவதார நோக்கம் பூர்த்தியடைந்து விட்டதாகவும், தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் கூறினார் ஐயப்பன், தன்னைத் தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் மணிகண்டன் கூறினார். பந்தள மன்னன் பதறிப்போனார். மணிகண்டா, நாங்கள் உன்னைக் காண வேண்டும் என்றால் மலைகளைக் கடந்து வரவேண்டும். வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்று கேட்டார். அதற்கு மணிகண்டன் சொன்னது இன்றைக்கும் நடக்கிறது. என்னை காண வரும் போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.

மாளிகைப்புரத்து அம்மன்

மாளிகைப்புரத்து அம்மன்

ஐயப்பன் அவதார நோக்கமே மகிஷியை வதம் செய்வதுதான். யார் அந்த மகிஷி என்பதைப் பற்றி இன்னொரு கதையில் பார்க்கலாம். சபரிமலைக்கு பயணப்பட்ட ஐயப்பன் அழுதா நதிக்கரையில் மகிஷியை வதம் செய்தார். மரணிக்கும் தருவாயில் மகிஷி வரம் கேட்க, அவரது விருப்பத்தின் படியே மாளிகைப்புரத்து அம்மன் என்ற பெயரோடு எழுந்தருள்வாய் என அருள்பாலித்தார்.

பந்தள அரசன் கட்டிய கோவில்

பந்தள அரசன் கட்டிய கோவில்

மகிஷியை வதம் செய்து மக்களைக் காத்த மணிகண்டனுக்கு என்று ஒரு கோயில் எழுப்ப தேவர்கள் எண்ணினர். அதன்படி ஐயப்பன் எய்த அம்பு விழுந்த இடத்தில் மணிகண்டனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவர்களின் விருப்பப்படியே அந்த சிலையிலேயே அமர்ந்து தேவர்களுக்கு காட்சி அளித்தார். ஐயப்பன் அமர்ந்த இடத்தில் பரசுராமரால் ஆலயம் எழுப்பப்பட்டது. அந்தச் சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகரன்.

நெய் தேங்காய்

நெய் தேங்காய்

ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார். நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக்கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது.

English summary
Irumudi kettu is the most important component of pilgrimage to Sabarimala. The concept of Nei Thenga has a very higher spiritual meaning. The coconut carried to the shrine is considered as the representation of Human body, which has to be kept clean internally and externally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X