மகரவிளக்கு : 18ஆம் படி பூஜை கண்டு தரிசித்த பக்தர்கள் - 2040ஆம் ஆண்டு வரை ரிசர்வேசன் ஃபுல்
பத்தனம் திட்டா: சபரிமலை 18ஆம் படி பூஜைக்கான முன்பதிவானது வரும் 2040ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. மகரவிளக்கு பூஜைக் காலத்தின் முதல் படி பூஜை சபரிமலையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் படிபூஜையை கண்டு தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரியும். அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது.
புரிஞ்சிக்கோங்க.. அண்ணாமலை அண்ணாமலைதான்.. 3 தடவை அடித்து கூறிய செல்லூர் ராஜூ!
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். முதல் கட்டமாக கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற பூஜையோடு மண்டல கால பூஜை நிறைவடைந்தது. இதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் டிசம்பர் 30ஆம் தேதியன்று மகரஜோதி, மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை சன்னிதான நடைதிறக்கப்பட்டு நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பதினெட்டாம் படிபூஜை
மகரவிளக்கு பூஜைக் காலத்தின் முதல் படி பூஜை சபரிமலையில் நடைபெற்றது. படி பூஜையின் போது, 18 தேவதைகளையும் 18 படிகளில் ஆத்மார்த்தமாக அமர்த்தி பூஜை செய்வது மரபு. அப்படி செய்வதால், பூஜை செய்பவருக்கு சகல நன்மைகளும் கிட்டும் என்பது ஐதீகம்.

மகரவிளக்கு பூஜை
படி பூஜைக்காக சபரிமலையின் புனிதமான தங்கத் தகடுகளால் மூடப்பட்ட 18 படிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து 18 படிகளிலும் விளக்கேற்றி பூஜைகள் நடத்தப்பட்டன. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமை மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி படி பூஜையை நடத்தினார்.

படி பூஜை கட்டணம்
மகர விளக்கு பூஜைக் காலத்தில், மாலை சுமார் 7 மணிக்கு தொடங்கும் படி பூஜையானது சுமார் 1 மணி நேரம் வரை நடத்தப்படுகிறது. இந்தப் படி பூஜை செய்வதற்கு ஒருவருக்கு சுமார் 75ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி படிபூஜைக்காக முன்பதிவு செய்திருந்த ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

2040 வரை முன்பதிவு
ஐயப்பனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சபரிமலையில் ஐயப்பன் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் பதினெட்டாம்படி பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படி பூஜை செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பதினெட்டாம் படி பூஜையை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு வரும் 2040ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.