For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனி பிரதோஷம் 2019- இந்திரன் போல செல்வமும் செல்வாக்கும் தரும் சிவ தரிசனம்

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். பல ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் ப

Google Oneindia Tamil News

சென்னை: திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். நாளை சனிப்பிரதோஷ நாளில் தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். சனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவன் நந்தியை தரிசிக்கும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். .

சுக்கிராச்சாரியார்

சுக்கிராச்சாரியார்

பிருகு முனிவரின் குமாராரான பார்க்கவ முனிவர் காசியில் ஒரு லிங்கத்தை பூஜை செய்தும், தவம் இருந்தும் சிவபெருமானிடம் இறந்தவர்களை உயிர் பெற்று எழச் செய்யும் "மிருதசஞ்சீவினி" எனும் மந்திரத்தை பெற்றார். அந்த நேரத்தில் மேலுலகில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தீராத போர் துவங்கி நடந்து கொண்டிருந்தது. சுக்கிராச்சாரியாரை குருவாக கொண்ட அசுரர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தனர். ஆனாலும் தேவர்களது பலத்தால் அசுரர்கள் பலர் இறந்தனர். இறந்த அசுரர்களை எல்லாம் உயிர்பித்தார் அசுரகுரு சுக்கிராச்சார்யார். இதனால் தேவர்கள் பக்கம் படை குறையவே இந்த மந்திரம் நமக்கு தெரியாமல் போனதை எண்ணி வேதனையுற்றனர்.

காதலால் பஸ்பமான ககன்

காதலால் பஸ்பமான ககன்

தேவர்களது குரு பிரகஸ்பதிக்கு கசன் என்ற ஒரு மகன் இருந்தான். அவனைச் சுக்கிராச்சாரியாரிடம் அனுப்பி அந்த மிருதசஞ்சீவினி மந்திரத்தை எப்படியாவது கற்று வரச் செய்வதற்காக அனுப்பினார். சுக்கிராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்த கசனுக்கும் சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானிக்கும் காதல் பிறந்தது. இதையறிந்த அசுரர்கள் கசனைக் கொன்று தீயிலிட்டு பஸ்பமாக்கி அதனை சுக்கிராச்சாரியாரது உண்ணும் உணவில் அவருக்கே தெரியாமல் கலந்து அவரையே உண்ணும்படிச் செய்தனர். குருவின் வயிற்றில் உள்ள கசனை வெளியே கொண்டு வருமாறு தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டாள். இதன் காரணாமாக வயிற்றில் இருக்கும் கசனுக்கு மந்திரத்தை போதித்தார். கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றை பிளந்து கொண்டு வெளியே வந்த பின் அதே மந்திரத்தால் சுக்கிராச்சாரியாரையும் உயிர்ப்பித்தான். இதன் பின்னரும் தேவ அசுரப் போர் தொடர்ந்தது.

பாற்கடலில் கிடைத்த அமிர்தம்

பாற்கடலில் கிடைத்த அமிர்தம்

இதன் காரணமாக தேவர்கள் மிருத சஞ்சீவினி மந்திரத்திற்கு இணையாக அமிர்தத்தை பெற வேண்டும் என்று எண்ணினர். மந்தாரமலை என்னும் மலையை மத்தாகவும் அட்ட நாகங்களில் ஒன்றான வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அப்பொழுது வாசுகி எனும் பாம்பு விஷத்தை கக்கியது. இவ்விஷத்தின் தன்மையினால் உலகம் இருண்டது. தேவர்களோ பயந்து சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர்.

திருநீலகண்டனம்

திருநீலகண்டனம்

சிவபெருமான் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி விஷத்தை கொண்டு வரச் செய்து அதை உண்டார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த உமையம்மை சிவபெருமான் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளே செல்லாமல் கழுத்திலேயே நிற்குமாறு செய்தார். இதனால் சிவபெருமான் கழுத்து கருப்பாக மாறியது. திருநீலகண்டன் பெயர் அவருக்கு இதனால் ஏற்பட்டது. இவ்வாறு தேவர்களையும் உலகத்தையும் காப்பதற்காக ஈசன் ஆலகால விஷத்தை உண்ட நேரமே பிரதோஷமாக கருதப்படுகிறது.

சிவன் ஆடிய நடனம்

சிவன் ஆடிய நடனம்

ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

சிவ தரிசனம் புண்ணியம்

சிவ தரிசனம் புண்ணியம்

சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

எப்படி வழிபடுவது

எப்படி வழிபடுவது

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும்.

அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.

நமச்சிவாய மந்திரம்

நமச்சிவாய மந்திரம்

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

நன்மைகள் நடைபெறும்

நன்மைகள் நடைபெறும்

எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவ அருள் கிட்டும். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வளர்பிறையில் வருகிறது. இந்த சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சிவாலயம் சென்று இறைவன் அருள் பெறலாம்.

பிரதோஷ நாளில் பாலபிஷேகம்

பிரதோஷ நாளில் பாலபிஷேகம்

சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

சிவன் நந்திக்கு அபிஷேகம்

சிவன் நந்திக்கு அபிஷேகம்

நாளை சனிக்கிழமை தன்வந்திரி பீடத்தில் ‘சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கும் அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்று பின் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை பின் தீபாராதனை நடைபெற உள்ளது.


English summary
A 13th Moon that falls on a Saturday is called Sani Pradosham and it is special, because the original Pradosham occurred on a Saturday. So, the upcoming Sani Pradosham will be extra powerful Pradosham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X