சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23 : மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி - விபரீத ராஜயோகம்
மதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம். என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மிதுனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டு அதிபதி எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோக அமைப்பாக மாறப்போகிறது.
சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மையை கொடுக்கும்.

தொழில் லாபம் வரும்
அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறதே என்று கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும். உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். இது விபரீத ராஜயோக காலமாகும் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பணம் தடையின்றி வந்து சேரும்.

நிதானம் பொறுமை தேவை
வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும்.

பிள்ளைகளிடம் கவனம்
சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள்.

பணம் விசயத்தில் பத்திரம்
பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

பொறுமை தேவை
எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானம் தேவை. பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

நல்லெண்ணெய் தீபம்
சிவ ஆலயம் சென்று நவகிரக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். பெற்றோர்களின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.