• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி மஹாபிரதோஷம் - சிவன் நந்தியை தரிசித்தால் சனிதோஷம் நீங்கும்

Google Oneindia Tamil News

மதுரை: சனிப்பிரதோஷ நாளில் சிவபெருமானின் காவல் தெய்வமான நந்தியம் பெருமானை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. எனவே நாளை நவம்பர் 9ஆம் தேதியான சனிக்கிழமையன்று நந்தி தேவரை அனைவரும் போற்றி வணங்குவதோடு, அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி தரலாம். மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். காரணம் அன்று தான் எம்பெருமான் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தருளினார் என்று சிவபுராணம் கூறுகின்றது.

பிரதோஷங்கள் 5 வகைப்படும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், பிரளய பிரதோஷம், மகா பிரதோஷம் என்பதாகும். இதில் சனிக்கிழமைகளில் வந்தால், அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது.

Sani Pradosam Pooja Viratham and Benefits on Aippasi Month

தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில், சிவபெருமான் பிரணவத்தின் முழு வடிவமான நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தார்கள். இப்படி எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது.

எம்பெருமான் உருவாக்கிய நான்மறைகளையும் முதன்முதலில் நந்தியம் பெருமானுக்கு தான் உபதேசித்தார் என்றும் புராணங்கள் கூறகின்றன. இதனால் தான் பிரதோஷ காலத்தில் முதல் மரியாதையும் பூஜையும் நந்தியம் பெருமானுக்கு செய்யப்படுகிறது. அதோடு சிவபெருமானின் வாகனமாக இருப்பதும், நந்தியப்பதிதான். இதன் நிறமும் தூய வெண்மை நிறமாகும்.

நந்தியின் பெருமைகளை சொல்லும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்று பாடலான, 'ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு அன்ப' என்ற பாடல் கடவுள் வாழ்த்தாகவும் அமைந்துள்ளது. அதாவது எம்பெருமானின் வாகனமான ரிஷபம் தூய்மையான வெள்ளை நிறமும், பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும். இதன் காரணமாகவே, பிரதோஷ பூஜையில் நந்தி தேவருக்கு முதலில் அபிஷேகமும் பூஜையும் செய்யப்படுகிறது.

மற்ற நாட்களில் நாம் சிவபெருமான் ஆலயத்தை சுற்றி வலம் வருவதற்கும், பிரதோஷ நாளில் வலம் வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மற்ற நாட்களில் பொதுவாக வலம் இருந்து இடமாக சுற்றி வருவது வழக்கம். ஆனால் பிரதோஷ காலங்களில் இடமிருந்து வலமாக சுற்றி வரவேண்டும். இதை 'சோமசூக்த பிரதட்சிணம்' என்று சொல்வதுண்டு. சோமசூக்த பிரதட்சிணம் செய்யும் முறையானது,

முதலில் நந்தி தேவரையும், பிரணவ வடிவான அதன் கொம்புகளுக்கு நடுவில் நடனமாடும் எம்பெருமானையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, இடப்புறமாக சென்று அபிஷேக தீர்த்தம் வந்து சேரும் இடமான கோமுகி தீர்த்த தொட்டியை தாண்டாமல் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு வந்த வழியே திரும்பி வந்து மீண்டும் நந்தியம்பதியை தரிசித்து விட்டு, பின்பு வழக்கம் போல கோவிலை வலம் வரவேண்டும். இப்படி மூன்று முறை வலம் வரவேண்டும். இதற்கு பெயர் தான் சோமசூக்த பிரதட்சிணம் என்று பெயர்.

மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும்.

மேலும், சனிப்பிரதோஷ நாளில் எம்பெருமான் ஈசனை வழிபட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவபெருமான வழிபாடு செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இந்த நாளில் வசதி படைத்தவர்களும், சிவனடியார்களும் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

சனிப்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்றைக்கு செய்யும் எந்தவித தானமும் எண்ணிலடங்கா பலனைக் கொடுக்கும் என்பதோடு, இனிமேல் பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது.

சனிப்பிரதோஷ காலத்தில் தேவர்களும் முனிவர்களும் எம்பெருமானின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பதால், பிரதோஷ காலத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்பதும் ஒரு ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயத்திலுள்ள மற்ற சந்நிதிகள் அனைத்தும் திரையிடப்பட்டிருக்கும்.

ஏகாதசி தினத்தன்று ஆலகாலம் உண்ட எம்பெருமான் ஈசன், மறுநாளான துவாதசி தினம் முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் மூன்றாம் நாளான திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்தெழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நவம்பர் 9ஆம் தேதியான சனிக்கிழமை சனி மகாபிரதோஷம் வருகிறது. வளர்பிறை பிரதோஷ தினமான சனிக்கிழமை சிவ ஆலயம் சென்று ஈசனையும் நந்தியையும் தரிசித்தால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

English summary
It is believed that all the dosham will abstain from worshiping Lord Nandiyam Peruman in Siva Temple, the guardian deity of Lord Siva on the day of Sani Pradosam. Therefore, on Saturday, November 9, we will worship Nandi Deva and worship Him Almighty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X