சனி ஜெயந்தி 2022...சங்கடம் தீர்க்கும் சனிபகவான் யாருக்கு அள்ளித்தரப்போகிறார்?
சென்னை: சனி பகவான் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமாகும். நாளைய தினம் சோமவார அமாவாசை சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
நவகிரகங்களில் கர்ம காரகன் என அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யக்கூடிய பாவ, புண்ணியத்திற்கான பலன்கள் ஏழரை சனி காலத்திலும், அடுத்து தலைமுறைக்கு பூர்வ புண்ணியங்களாகச் செல்லும்.
இறந்ததாக புதைத்த பச்சிளம் குழந்தை.. 1 மணி நேரம் கழித்து உயிரோடு வந்த அதிசயம்! நெகிழ்ந்த பெற்றோர்
யார் ஒருவர் தன் வேலையை சரியான நேரத்தில், நீதி, நேர்மையைக் கடைப்பிடித்து முறையான வகையில் செய்கிறாரோ, அவருக்கு ஏழரை சனி அல்லது, மோசமான தசா, புத்தி நடந்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்து கெடுதல் செய்பவர்களுக்கு சனிபகவான் சரியான தண்டனைகளைக் கொடுப்பார்.

சிவபெருமான் கொடுத்த வரம்
ஒருமுறை சிவபெருமானை நோக்கி சனிபகவான் கடுமையான தவம் புரிந்தார். அவரின் தவத்திற்கு பிரதிபலனாக சிவபெருமான் ஒரு வரம் அளித்தார். மனிதர்களின் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகளையும், அவர்களின் நல்ல செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை வழங்கினார். அதே போன்று கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் வழங்க ஆசிர்வதித்தார் என்கிறது புராணம்.

ஈஸ்வர பட்டம்
ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.

வைகாசி அமாவாசை
வைகாசி மாதம் அமாவாசை வரும் நாளினை சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானங்கள் செய்து நன்மைகள் பெறலாம். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் பெற சனி பகவானை இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

சனி ஜெயந்தி
நீதி பகவானாக இருக்கக்கூடிய சனி பகவான் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரக்கூடிய சர்வ அமாவாசை தினத்தில் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் வைகாசி 16 தேதி, நாளை மே 30ஆம் தேதி வரக்கூடிய சர்வ அமாவாஸ்யை தினத்தில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இன்று மாலை 3.49 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது நாளைய தினம் திங்கட்கிழமை மாலை 5.17 மணிக்கு அமாவாசை திதி நிறைவடைகிறது
சனி ஹோரையான காலை 7 மணி முதல் 8 மணிக்குள், நவகிரகங்களில் உள்ள சனி பகவானை வழிபட்டு, அவருக்கு உகந்த எள் தீபம் ஏற்றி, கருப்பு நிற வஸ்திரத்தை சாற்றி வழிபடவும். இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நன்மைகளை அடையப்போகிறார்கள்.

மேஷம்
சனி பகவான் தற்போது லாப ஸ்தானமான 11வது வீட்டில் பயணம் செய்கிறார். இது லாபம் மற்றும் வருமானத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் பெறலாம். பணம் வருவதற்கான பாதை திறக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ரிஷபம்
சனி ஜெயந்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வேலை மற்றும் தொழில் இடமாகும் என்று அழைக்கப்படுகிறது. கர்ம காரகன் சனியால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சனி ஜெயந்தி உங்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை அடைந்திருப்பீர்கள். வெற்றிகள் தேடி வரும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடிவரும்.

நீதி தேவன் சனிபகவான்
நீதி தேவனாக பார்க்கப்படும் சனி பகவான், ஒருவருக்கு ஏழரை சனியாக வரும் போது அவர் செய்த பாவங்களுக்கும், தர்மங்களுக்கும் ஏற்ற வகையில் சரியான வகையில் தண்டனை கொடுத்து நல்வழிப்படுத்துவார். சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம்.

பரிகாரம் என்ன?
சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி பகவானை மனதார நினைத்து ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தாலே அவரின் அருள் நமக்கு கிடைத்துவிடும். யாரையும் ஏளனமாக எண்ணாமல் இருப்பதும், நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக நேர்மையாக செய்து முடிப்பதும். வஞ்சம் இல்லாமல் இருப்பதும், பிறருக்கு உதவுவதுமே சனி பகவானின் கெடு பலனிலிருந்து தப்பிக்கக் கூடிய எளிய வழியாகும்.