For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி 2019: கடன், எதிரி, நோய்கள் தீர்க்கும் நரசிம்மர் ஆலயங்கள்

பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Google Oneindia Tamil News

தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். ஸ்ரீநரசிம்ம ஜயந்தி நன்னாளில், நரசிம்மர் அருள் புரியும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளு ம் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் நரசிம்ம ஜெயந்தி. நாளை சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய நரசிம்மர் ஆலயங்களைப் பார்க்கலாம்.

திருமாலின் அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். நரசிம்மரை, பலரும் பல வடிவங்களில் வழிபாடு செய்து வருகின்றனர். அவற்றில் 9 முக்கிய வடிவங்களை, நவ நரசிம்மர் என்று அழைக்கின்றனர். உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், கோப நரசிம்மர், குரோத நரசிம்மர், விலம்ப நரசிம்மர் என காட்சி தருகிறார் நவ நரசிம்மர்.

Sri Narasimha Jayanti 2019 : Narasimhar Temple dharsanam

பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல், அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில் முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர் தலங்களில் நடுநாயகமாகமானதுமாக உள்ளது பூவரசங்குப்பம். இதன் கிழக்கில் சிங்கிரிக்குடியும், மேற்கில் பரிக்கல் மற்றும் அந்திலியும், வடக்கில் சோளிங்கர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவிலும், தெற்கில் நாமக்கல் மற்றும் சிந்தலவாடியும் உள்ளன.

பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலையில் பரிக்கல், நண்பகலில் பூவரசங்குப்பம், மாலையில் சிங்கிரிக்குடி என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.

பரிக்கல் :

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில். பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், 'உக்கிர நரசிம்மராக' தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

பூவரசங்குப்பம் :

பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது. தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

Sri Narasimha Jayanti 2019 : Narasimhar Temple dharsanam

சிங்கிரிக்குடி - 3 நரசிம்மர்கள்

கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.

பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

சோளிங்கர் : யோக நரசிம்மர்

வேலூர் மாவட்டம் அரக்கோணம்- சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது. சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி. கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே.

சிங்கப்பெருமாள் கோவில் - பாடலாத்ரி நரசிம்மர்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் 'பாடலாத்ரி நரசிம்மர்' என்று அழைக்கப்படுகிறார். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

நங்க நல்லூர் - லட்சுமி நரசிம்மர்

சென்னை நங்கநல்லூரில் நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த லட்சுமி நரசிம்மர் கோவில் காலப்போக்கில் புதையுண்டு போனது. பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு, வழிபாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆலயம் முற்காலத்தில் 'தட்சிண திபாலயா' என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமனின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நரசிம்மர் இங்கு கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.இத்தல லட்சுமி நரசிம்மர் 5 அடி உயர சிலை வடிவில் அருள்கிறார். இங்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

நாமக்கல்

திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. அனுமன் கொண்டு வந்த சாளக்கிரம கல் பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சிந்தலவாடி

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது சிந்தலவாடி ஆலயம். ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்ற பக்தருக்கும் சலவையாளருக்கும் காட்சித் தந்தவர் நரசிம்மர்.

அந்திலி

திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலி திருத்தலம்.

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. கருடன் தவமிருந்து தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

கீழப்பாவூர் நரசிம்மர்

தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர். உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.

English summary
Here is the list of Narasimhar temple in TamilNadu. Sri Narasimha Jayanti is the appearance day of Lord Narasimha, the half-lion half-man incarnation of Supreme Lord Krishna, who appeared to protect Prahlada from his demoniac father Hiranyakashipu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X