காவிரி நதிக்கரையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள்... பஞ்சரங்க தலங்களின் சிறப்புகள்
சென்னை: காவிரி பாயும் நதிக்கரையில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கிறார் பள்ளி கொண்ட பெருமாள். அவை பஞ்சரங்க தலங்களாக பக்தர்களால் போற்றப்படுகின்றன. பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்வது தனி சிறப்பு. தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் போல மேலும் நான்கு கோவில்கள் இணைந்து பஞ்சரங்க தலங்களாக போற்றப்படுகின்றன. ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என்ற ஐந்து தலங்கலாகும். இந்த தலங்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகம் என காவிரி ஆறு பாயும் ஆற்றங்கரையில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் கோயில்கள் அமைந்துள்ள நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரிந்து செல்லும் இடத்திலுள்ள மேடான பகுதி என்று பொருளாகும். அதே போல், ரங்கம் என்றால் மண்டபம், அரங்கம், சபை எனவும் பொருள்படும்.
வீரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி..சூப்பர்! ஆனால், நத்தம் கணவாய் யுத்தம் பாட புத்தகங்களில் ஏறுமா?
இந்து சமயத்தின் இரண்டு கண்களாக போற்றப்படுவது சைவமும், வைணவமும். இதில் சைவ சமயத்தில் உப பிரிவுகளாக சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என இருந்தாலும் கூட, அனைவருக்கும் உரிய பொதுவான மந்திரம் ஐந்து என்ற எண்ணை ஞாபகப்படுத்தும் "ஓம் நமச்சிவாய" பஞ்சாட்சர மந்திரம் ஆகும். அதே போலத்தான், ஸ்ரீமகாவிஷ்ணுவை முழுமுதற் கடவுளாக போற்றி வணங்கும் வடகலை மற்றும் தென்கலைப் பிரிவை பின்பற்றும் அனைத்து வைணவ பக்தர்களுக்கு உரியது எட்டெழுத்து மந்திரமான, "ஓம்நமோநாராயணய". ஆனால், இந்த எட்டெழுத்து மந்திரத்தையும் தாண்டி, ஐந்து என்ற எழுத்தை உணர்த்தும் பஞ்சசம்ஸ்காரம், பஞ்ச தத்துவங்கள், பஞ்சரங்க தலங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

பஞ்சசம்ஸ்காரம்
ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்கும் வைணவர்களில் பாஞ்சராத்திர ஆகம பிரிவைச் சேர்ந்தவர்கள் பின்பற்றும் சடங்காகும். 'பஞ்சசம்ஸ்காரம்' என்பதற்கு வைணவம் என்ற தகுதியைப் பெறுவதற்கு நடத்தப்படும் ஐந்து சடங்குகள் என்று பொருள். இந்த சடங்கானது, ஸ்ரீஇராமானுஜர் நிறுவிய ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், பாஞ்சராத்திர ஆகமத்தின் படி, முழு தகுதியுடைய ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியரால் மட்டுமே நடத்தப்படும். இந்தச் சடங்கானது, இராமானுஜர் மூலம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆண், பெண், ஜாதி வேறுபாடு இன்றி ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவடியை அடைய விருப்பம் உடையவர்களுக்கு செய்விக்கப்படுகின்றது.
பஞ்சசம்ஸ்காரம் என்ற சடங்கு முறையில், தாபம், பண்ட்ரம், நாமம், மந்த்ரம், அர்சனம் ஆகிய ஐந்து உபாயங்கள் செய்விக்கப்படுகின்றன. இதில் தாபம் என்பதற்கு ஆச்சாரியர் மூலம் சங்கு சக்கர முத்திரைகளை கைகளில் பொறித்தல் எனவும், பண்ட்ரம் என்பதற்கு திருமண் என்னும் நாமம் இட்டுக்கொள்ளதல் எனவும், நாமம் என்பதற்கு ஆச்சாரியரிடமிருந்து ஒரு தாச மந்திரத்தை அதாவது அடியேன் ஸ்ரீஇராமானுஜரின் தாசன் அல்லது தாசி என்னும் பொருள் படி பெயர் சூட்டப்படும், மந்த்ரம் என்பதற்கு ஆச்சாரியரிடமிருந்து மூன்று மந்திரங்களை உபதேசமாகப் பெற்றுக்கொள்ளல் எனவும், அர்சனம் என்பதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு சம்பந்தமான பொருட்களை ஆச்சாரியரிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் என்று அர்த்தமாகும்.

ஐந்து தத்துவங்கள்
வைணவ சமயத்தில் மற்றொரு பிரிவினர் வடகலை எனப்படும் வைகானச முறையைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் பஞ்சசம்ஸ்கார நெறிகளைப் பின்பற்றுவதில்லை. அதோடு தென்கலைப் பிரிவினர் பின்பற்றும் நாலாயிர திவ்யப்பிரபந்தங்களையும் பாடுவதில்லை. அதற்கு பதிலாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஐந்து நிலைகளில் உள்ள திருவுருவங்களை மட்டுமே வணங்குகின்றனர். அதற்கு ஐந்து தத்துவங்கள் என்று பெயர்.
அதாவது, பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து உருவ நிலைகளில் ஸ்ரீமகாவிஷ்ணு காட்சியளிப்பதாகும். இதில் பரத்துவம் என்பது, வைகுண்டத்தில் உள்ள நிலை எனவும், வியூகம் என்பது பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நிலை எனவும், விபவம் என்பது பத்து அவதார நிலை எனவும், அந்தர்யாமி என்பது பக்தர்களின் உயிரோடு கலந்து நிற்கும் பரவச நிலை எனவும், அர்ச்சை என்பது திருவுரும் கொண்டு கோயில்களில் குடிகொண்டுள்ள நிலை எனவும் பிரித்து வைத்துள்ளனர்.
இப்பிரிவினர், கோயில்களில் கருவறையில் உள்ள இறைவனின் திருவுருவங்களை தொடவும், பூஜை செய்யவும் முழு உரிமையுடையவர்கள் ஆவர். இவர்களுக்கு உதவும் பட்டர்களுக்குக் கூட இறைவனின் திருவுருவை தொட உரிமை இல்லை. இவர்கள் பின்பற்றும் நெறியானது வேத நெறியாகும். இராமானுஜரையும், பிற ஆழ்வார்களையும் தம் குருவாக ஏற்றுக்கொள்வதில்லை. அதன் காரணமாகவே நாலாயிரதிவ்யப் பிரபந்தங்களையும் கோயில்களில் பாடுவதில்லை. 108 திவ்யதேசங்களில் திருப்பதி மற்றும் திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்கோயில் என இரண்டு கோயில்களில் வைகானச ஆகம முறைப்படியே பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அர்த்த பஞ்சகம்
அர்த்த பஞ்சகம் என்பது வைணவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டிய ஐந்து கருத்துக்கள் எனப்படும். அவை, அடைபவன்(ஸ்வரூபம்), அடையப்படுவது(புருஷார்த்த ஸ்வரூபம்), பயன்(பரஸ்வரூபம்), உபாயம்(உபாயஸ்வரூபம்), இடையூறு(விரோதி ஸ்வரூபம்) என ஐந்து கருத்துக்களாகும். இதில் அடைபவன் என்பது உலக உயிர்கள் எனவும், அடையப்படுவது இறைவன் எனப்படும் மகாவிஷ்ணு எனவும், பயன் என்பது முடிவில்லாத பேரின்பம் எனவும், உபாயம் என்பது அந்த மகாவிஷ்ணுவை அடையப் பயன்படும் பக்தி எனவும், இடையூறு என்பது சாத்திரத்திற்கு விரோதமான செயல்பாடுகள் என்றும் அர்த்தமாகும்.

பஞ்சரங்க தலங்கள் ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர்
பஞ்சரங்க தலங்கள் என்பது ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என்ற ஐந்து தலங்கலாகும். இதில் ஆதிரங்கம் எனப்படுவது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதருக்கு மாலையிட்டது போல் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்து செல்கிறது. இங்கு பெருமாள் புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
மத்தியரங்கம் என்பது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலாகும். தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில், திருச்சி மாநகருக்கு அருகில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். சிலர் இக்கோயிலை அனந்தரங்கம் என்றும் அழைக்கின்றனர். இதன் மற்றொரு சிறப்பம்சம், 108 திவ்யதேசங்களில் முதலாவது திவ்யதேசம் எனவும் பூலோக வைகுந்தம் எனவும் போற்றப்படுவதுண்டு. மேலும் பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர்த்த மற்ற 11 ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற ஒரே திவ்யதேசமும் ஆகும்.

அப்பால ரங்கநாதர் கோயில்
அப்பாலரங்கம் என்பது, திருப்பேர் நகர் கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் ஆகும். 108 திவ்ய தேச கோவில்களில் 8வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் மூன்றாவது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரங்கநாதர். இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் 10 நாட்களும் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.
இக்கோயில் திருச்சிக்கு அருகில் லால்குடியில் இருந்து சுமார் 10.கி.மீ தொலைவில், காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றின் தெற்குக் கரையில், இந்திரகிரி என்றழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

கும்பகோணம் சாரங்கபாணி
சதுர்த்தரங்கம் என்பது, கும்பகோணம் நகரிலுள்ள ஸ்ரீசாரங்கபாணி கோயில் ஆகும். இக்கோயிலானது, காவிரி ஆறு, அரசலாறு, காவிரி என இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தல் பெருமாள் சந்நிதியானது ஒரு தேரின் வடிவமைப்பில் காணப்படுகிறது. தேரின் இரு பக்கங்களிலும் பெருமாள் வைதீக விமானத்தின் கீழ் சங்கு சக்ரதாரியாக சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர்
பஞ்சரங்கம் என்பது, காவிரி ஆற்றின் வட கரையில், திருஇந்தளூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகும். மேலும் இக்கோயில் அந்தரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. வேதசக்கர விமானத்தின் கீழ் ஸ்ரீபரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிஷேசன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.