For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய அண்ணாமலையாருக்கு தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் நாளையுடன் நிறைவடைகிறது.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: ஜோதி பிளம்பாக காட்சி அளித்த அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு சுப்ரமணியர் உற்சவம் நடைபெற உள்ளது.

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு கடந்த நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, பவுர்ணமி நாளான ஞாயிறன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் மலையே சிவமாக விளங்கும் அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Teppal festival for Annamalaiyar in Thiruvannamalai

மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். அப்போது, "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மகா தீபம் ஏற்றப்பட்டதும், திருக்கோயில் மற்றும் நகரம் முழுவதும் அலங்கார விளக்குகள் ஜொலித்தன.

வான வெடிகள் வெடிக்கப்பட்டன. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. தீபத்தை தரிசனம் செய்ததும் 10 நாள் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்தனர். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

இதையடுத்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்பல் உற்சவம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது.

வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் பவுர்ணமி நாளன்றும், மறுநாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு. இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் , கிரிவலம் செல்வதற்கும் மலை மேல் ஏறிச்சென்று மகா தீபத்தை காண்பதற்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

வெளியூர் பக்தர்கள் நகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மாவட்டம் மற்றும் நகர எல்லையில் சுமார் 15 இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு கிரிவலப்பாதையிலும் முழுமையாக தடுப்புகள் அமைத்து அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளூர் மக்களைத் தவிர, அத்தியாவசியத் தேவைகளின்றி வரும் வெளியூர் ஆட்களை திருவண்ணாமலை நகருக்குள் வர விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கார்த்திகை மாத பவுர்ணமி திங்கட்கிழமையான நேற்று பிற்பகல் 2:23 மணிக்கு நிறைவடைந்தது. அதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதோடு, கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதியிலும் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ஐந்து வேன்கள் மூலம் நகரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு காட்சிகளும் பதிவு செய்யப்பட்டன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் இல்லாததால் கிரிவலப் பாதை முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் மட்டும் தன்னந்தனியாக கிரிவலம் செல்வதை காண முடிந்தது. தீவிர கண்காணிப்பையும் மீறி, கிரிவலம் சென்ற ஒரு சில பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கிரிவலம் செல்ல அனுமதியில்லை என்று எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இருப்பினும் ஒருசிலர் குறுக்குப் பாதைகளை கண்டுபிடித்து அதன் வழியாக கிரிவலப் பாதையில் நுழைந்து கிரிவலம் வந்தனர்.

தீவிரமாக விசாரித்து அனுப்பினர். இதனால் வழக்கமாக வரும் வெளியூர் பக்தர்களின் வருகை நேற்று குறைவாகவே இருந்தது. நேற்று பகல் வேளையில் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கிரிவலப் பாதையும் தொடர்ந்து 2ஆவது நாளாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. தெப்ப உற்சவத்தின் 2வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு சுப்ரமணியர் உற்சவம் நடைபெற உள்ளது. சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மகா தீபத் திருவிழா டிசம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

English summary
The three-day Teppal festival was held at the Brahma Tirtha pool in the temple last night to appease the Annamalaiyars who displayed the torch as a plum. The Chandrasekhar festival was held on the first day yesterday. This will be followed by the 2nd day of the Parasakthi Amman festival tonight and the Subramanian festival tomorrow night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X