For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் - அஸ்திரஹோமத்துடன் ஆரம்பம் பிப்.1ல் யாகசாலை பூஜை

Google Oneindia Tamil News

மதுரை: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, அதன் ஆரம்ப நிகழ்ச்சியாக யாகசாலை பூஜை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குகிறது. அதை முன்னிட்டு, யாகசாலையிலுள்ள யாக குண்டங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை பெருவுடையார் என பெருமையுடன் அழைக்கப்பட்டு வரும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கடந்த கி.பி. 1006ஆம் ஆண்டு வாக்கில் மும்முடிச்சோழன், சிவபாதசேகரன் என போற்றப்படும் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றைக்கும் தமிழனின் கட்டடக்கலை, அறிவியில், என அனைத்துக்கும் முன்னுதாரணமாக கம்பீரமாக நிற்கின்றது.

Thanjavur Big Temple Kumbabishekam Yagasalai Pooja begins on February 1

உலக பாரம்பரிய சின்னமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய கலைச்சின்னங்களின் பாதுகாப்பு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது தஞ்சை பெரிய கோவில். இக்கோவில் கடந்த 1996ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு 2008ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிகேஷம் நடைபெறவில்லை. ஆனால், அதற்கு பதிலாக கடந்த 2003ஆம் ஆண்டில், கோவிலின் கொடி மரம் மட்டும் புதிதாக நடப்பட்டு அதற்கு மட்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று கும்பாபிஷேகத்தை நடத்துவதென்று பெருவுடையார் கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும், தொல்லியல் துறையும் சேர்ந்து முடிவெடுத்தன. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று யாகசாலை பூஜை மற்றும் கணபதி ஹோமமும், டிசம்பர் 2ஆம் தேதியன்று பாலாலய பூஜையும் நடைபெற்றன.

Thanjavur Big Temple Kumbabishekam Yagasalai Pooja begins on February 1

பின்னர் கும்பாபிஷேக பணிகள் முடுக்கி விடப்பட்டு, அனைத்து வேலைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவிலின் பழைய கொடி மரமும் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ.9 லட்சம் செலவில், புதிய கொடிமரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று ஸ்தபதி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தை அமாவாசை 2020: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்கதை அமாவாசை 2020: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்க

பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தற்போது, கோவில் கோபுரங்கள் புனரமைப்பு மற்றும் புல்தரை சீரமைப்பு உள்ளிட்ட முக்கிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கோவில் பணியாளர்களும், தன்னார்வலர்களம் இணைந்து செய்து வருகின்றனர். கும்பாபிஷேகம் நடைபெறும் பெரியகோவிலின் ராஜகோபுர விமானம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளின் கோபுரங்களின் கலசங்களும் கழற்றப்பட்டு, சுத்தப்படுத்தி தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது.

Thanjavur Big Temple Kumbabishekam Yagasalai Pooja begins on February 1

மேலும், கும்பாபிஷேக பணிகளுக்காக கோவிலின் அருகிலுள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலுக்காக கான்க்ரீட் போடப்பட்டு அதில் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டு தகரத்தால் கொட்டகையும் போடப்பட்டுள்ளன. அதோடு, பந்தல் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றிலும் செங்கற்கலால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு உள்ளே மண் கொட்டப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பந்தலின் உள்ளே, யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் வர்ணம் தீட்டி, சுவாமி படங்களை வரையும் பணிகளில் ஓவியர்கள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் 15க்கும் மேற்பட்ட ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் எட்டு திசைகளிலும் உள்ள காளியம்மன்கோவிலிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கீழவாசல் வேளாளர்தெருவில் உள்ள உக்கிரகாளியம்மன்கோவில், மேலஅலங்கம் வடபத்திரகாளியம்மன்கோவில், வல்லம் ஏகவுரி அம்மன்கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், தெற்குவீதி காளிகாபரமேஸ்வரி கோவில், வடக்குவாசல் மகிஷாசுரமர்த்தினி கோவில், ராஜகோபாலசாமி கோவில் தெருவில் உள்ள காளியம்மன்கோவில், பூமால்ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியம்மன்கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய 9 கோவில்களில் சாந்திஹோமம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள நடராஜர் சன்னதி முன்பு அஸ்திரஹோமம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலையில் முதல்கால பூஜையும், மாலை 4 மணிக்கு 2ஆம் கால பூஜையும், நாளை காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3ஆம் காலபூஜையும் நடக்கிறது. பூஜையில் சிவபெருமாளின் 5 ஆயுதங்களான சிவாஸ்திரம், அகோரஅஸ்திரம், பாசுபதஅஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவற்றை ஹோமத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் 50 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கால யாகபூஜை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதியன்று 2ஆவது மற்றும் 3ஆவது கால யாகசாலை பூஜையும், 3ஆம் தேதியன்று 4ஆவது மற்றும் 5ஆவது யாகசாலை பூஜையும், 4ஆம் தேதியன்று 6 மற்றும் 7ஆவது யாகசாலை பூஜையும் நடைபெறும். பின்னர், பிப்ரவரி 5ஆம் தேதியன்று காலையில் 8ஆம் கால யாகசாலை பூஜையும், அதைத் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறும்.

English summary
The Yagasalai pooja begins on the 1st of February with the commencement of the Kumbabishekam on the 5th of February at the Thanjavur Brihadeeswara Temple. Prior to that, the work of painting the Yaga Kundam at the Yagasala is actively underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X