For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷே பணிகள் தொடங்கியது - 22ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாகசாலை

தஞ்சை பெரிய கோவிலில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முறையான பூர்வாங்க பூஜைகள் இன்று காலை 9.30 மணிக்கு யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விப்ரானுக்ஞை ஆச்சார்ய வரணம், ஆகிய பூஜைகளும், மாலை 5 மணிக்கு மேல் கிராம சாந்தி, வடுகயந்திர பூஜை பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 28ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ ஷோடச மஹா கணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, தன பூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் பிரவேச பலி ஆகியவை நடைபெற உள்ளது.

தமிழகத்தை ஆண்ட மன்னர்களிலேயே பொற்காலமாக விளங்கியது பிற்காலச் சோழ வம்சத்தில் தோன்றிய ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் தான். இவருடைய ஆட்சிக்காலம் கி.பி.985 முதல் கி.பி.1014 வரை தான். இருந்தாலும் இந்த குறுகிய ஆட்சிக்காலத்திலேயே அண்டை நாடுகளான இலங்கை, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கைப்பற்றி நல்லாட்சி புரிந்தான்.

Thanjavur Big Temple Kumbahishekam Poorvanga Pooja begins today

ராஜராஜ சோழன் மன்னனாக மட்டுமில்லாது, சிறந்த ராஜ தந்திரியாகவும், மிகச்சிறந்த சிவபக்தராகவும் விளங்கினான். இதனாலேயே ராஜராஜ சோழன் மும்முடிச்சோழன், திருமுறை கண்ட சோழன் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டான். ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஏராளமான சிவாலயங்கள் கட்டப்பட்டன. இதனாலேயே இவரை சிவபாதசேகரன் என்றும் மக்கள் அழைத்தனர்.

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1006ஆம் ஆண்டில் கட்டட்பபட்டது தான் தஞ்சை பெருவுடையார் என பயபக்தியுடன் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில். யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை பண்பாட்டு சின்னங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது இக்கோவில். தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. முழுக்க கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவில் சிற்பக்கலைக்கும், கலைநுட்பத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

Thanjavur Big Temple Kumbahishekam Poorvanga Pooja begins today

இதை நன்கு உணர்ந்தே, ராஜராஜ சோழனுக்கு பிறகு அரியணை ஏறிய ராஜேந்திர சோழனும், பின்னர் வந்த சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர்களும், தஞ்சை பெரிய கோவிலை நன்கு பராமரித்து அவ்வப்போது செப்பனிட்டு பாதுகாத்து கும்பாபிஷேகமும் செய்து வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 1980ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்ததாக 1997ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

அதன் பின்பு தவிர்க்க முடியாத சில காரணங்களால், கும்பாபிஷேகம் நடத்துவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இடையில் கடந்த 2003ஆம் ஆண்டில் கொடி மரம் மட்டும் மாற்றப்பட்டு அதற்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்களும் சமூக ஆர்வலர்களும், தஞ்சை பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறையும் கோவில் நிர்வாகமும் இணைந்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்தனர். இதையடுத்து கும்பாபிஷேகப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கும்பாபிஷேக திருப்பணியை கோவில் நிர்வாகமும், பணியாளர்களும், தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்து சமய மரபுநெறி தவறாமல் பின்பற்றி செய்து திருப்பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தன.

Thanjavur Big Temple Kumbahishekam Poorvanga Pooja begins today

தற்போது புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு தொடக்கமாக இருக்கும் பூர்வாங்க பூஜைகள் இன்று காலை தொடங்கியது. விழாவுக்கான யாக சாலை பூஜைகள் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பின்னர் 8 கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகும்.

பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் யாகசாலை பூஜைகளுக்கான 178 அடி நீளத்துக்கும், 108 அடி அகலத்துக்கும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனியாக குண்டங்கள் வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுவாமிக்கு 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உத்தமபக்த யாகசாலையில் 33 குண்டங்களும், ஒரு பிரதான வேதிகையும் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாளுக்கு 2,116 சதுரஅடி பரப்பளவில் உத்தம மத்திமபட்சம் என்ற யாகசாலையும், அதில் 25 குண்டங்களும், ஸ்ரீ சக்கர வேதிகையும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் பரிவார மூர்த்திகளுக்கு 8 பஞ்சாகினி யாகசாலையும், 40 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும், 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை நடத்த உள்ளனர்.

வேதிகை பீடத்தில் பழைய முறையில் பழமையான ஓவியங்களை பஞ்சவர்ணம் கொண்டு தீட்டப்படுகிறது. யாகசாலை பந்தலில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், தேவ கனங்கள் என ஏராளமான சுதை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 8 கால யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 5ஆம் தேதி காலையில் நிறைவடைந்த உடன், முக்கிய நிகழ்ச்சியான பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் அன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. காலை 9.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

காலை 10 மணியளவில், பெரியநாயகி அம்பாள், பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் பெரியநாயகி, பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணியளவில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும்.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எந்தவித அசம்பாவித சம்பவுங்களும் இன்றி, கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு வசதியாக, தற்காலிக பேருந்து நிலையங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், கோவிலின் முன்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஐயாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
The Thanjavur Brihadeeswarar Temple Kumbabishekam is to be held on the 5th of February. The formal preparations for the basic Pooja begin today at 9 am and will continue until February 1 at 12 noon. Thereafter, the 8 Kala Yagasala Poojas will be held till February 5, followed by the Kumbabishekam ceremony in the morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X