For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னியில் தவமிருந்த அம்மன்... சுக்ரனுக்கு அருள்பாலித்த சிவன்- மாங்காடு காமாட்சி ஆலயம்

ஐந்து அக்னி குண்டங்கள் வளர்ந்து அம்பிகை தவமிருந்த தலம் ஸ்ரீ மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம். இது சுக்ராச்சாரியருக்கு சிவன் அருள் பாலித்த தலமாகவும் போற்றப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் அன்னை பார்வதி கடும் தவம் புரிந்தார்.

இத்தனை உக்கிரமாக ஏன் அம்பிகை தவம் புரியவேண்டும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதை புராண கதை மூலமாக பார்க்கலாம். ஒருமுறை கைலாயத்தில் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றுவிட்டது. இதனால் கோபமடைந்த சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். செய்த தவறை உணர்ந்து பார்வதி, சிவனிடம் மன்னிப்பு கேட்டார்.

பாவத்தை நிவர்த்தி செய்ய மா மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தவமிருந்து வழிபட வேண்டும். அதன்பின் தகுந்த காலத்தில் காட்சி தந்து பார்வதியை திருமணம் செய்து கொள்வதாக சிவன் கூறினார். அதன்படி, கயிலாயத்தில் இருந்து மாங்காடு வந்த பார்வதி ஐந்து அக்னிகள் வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்ற கோலத்தில் கடும் தவமிருந்தாள். அதன்பின் காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு பார்வதிக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு, 'ஆதி காமாட்சி தலம்' என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கும் குன்றத்தூருக்கும் இடையில் மாங்காடு திருத்தலம் உள்ளது.

ஸ்ரீ சக்கரம் நிறுவிய ஆதி சங்கரர்

ஸ்ரீ சக்கரம் நிறுவிய ஆதி சங்கரர்

காஞ்சி சென்ற அன்னை, தான் தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் அதன் சுற்றுப்பகுதிகளும் தீயினால் வறண்டன. ஆதி சங்கரர் தோசந்திரம் செல்லும் போது, மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என்பது இக்கோவிலின் வரலாறு.

அக்னியில் தவம் செய்த அன்னை

அக்னியில் தவம் செய்த அன்னை

இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் அருள்மிகு காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது. ஸ்ரீ சக்ரமே பிரதானமாக கருதப்படுகிறது. பஞ்சலோக காமாட்சிக்கு அபிஷேகமும், ஸ்ரீ சக்ரத்துக்கு அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன்மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம்.

இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், அம்பிகை வடிவில் சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.

சுக்ர தலம்

சுக்ர தலம்

சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில் இது சுக்கிரன் தலமாக போற்றி வணங்கப்படுகிறது. திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றித் தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். அப்பகுதியைத் திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

காஞ்சி சென்ற காமாட்சி

காஞ்சி சென்ற காமாட்சி

அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.

சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்குத் திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் பெருமாளை இங்கேயே தங்கும்படி வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் மோதிரம் வைத்திருக்கும் இவரை, சீர் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள்.

அர்த்தமேரு ஸ்ரீ சக்கரம்

அர்த்தமேரு ஸ்ரீ சக்கரம்

இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம்,"அஷ்டகந்தம்" என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. இந்த அர்த்தமேரு ராஜயந்திரமாகும். இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன்மேல் ஸ்ரீசக்ர இயந்திரம் வரையப்பட்டுள்ளது. இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை. இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். எனவே இதற்கு அபிசேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும்

இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. இது ஒரு மண்டல விரதமாகும்.பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர். புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தவ மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

குழந்தை செல்வம் கிடைக்கும்

குழந்தை செல்வம் கிடைக்கும்

அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வுக்காவும் , உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வந்து வேண்டுதல் வைக்கின்றனர். நீங்களும் உங்கள் வேண்டுதல் நிறைவேற மாங்காடு காமாட்சியை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தரிசனம் செய்யுங்களேன்.

English summary
In this Mangadu the Goddess Sri Kamakshi came and started her penance standing on the PANCHAGNI in the midst of forest of Mango trees.Mangadu is a small town situated 24 Kilometers away from Chennai in between Kundrathur and Poonamallee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X