• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவராத்திரியில் நவகிரஹ தரிசனம் செய்யனுமா? மயிலாப்பூர் வாங்க!

|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்க்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன.

இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவகிரஹத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களை போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தல்ங்கல் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

1. ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில் (சூரியன் ஸ்தலம்):

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.

there are seven siva temples in mylapore worshipped by the saptha rishis

2. ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்த்லம்):

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வர தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

there are seven siva temples in mylapore worshipped by the saptha rishis

3. ஶ்ரீவாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்):

'மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு சென்றதாக கருத்து நிலவுகிறது.

4. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்):

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி ஸமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்ஸமாக திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரஹ தோஷங்கள் விலகும்.

5. ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்):

there are seven siva temples in mylapore worshipped by the saptha rishis

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

12 – ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவகிரஹங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாக திகழ்கிறார், இவரை வியாழ கிழமைகளில் வணங்கிவர திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வ செழிப்பு ஏற்படும்.

6. ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)

there are seven siva temples in mylapore worshipped by the saptha rishis

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்’ என்றே கொண்டாடுகிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளி கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமண தடை நீங்கும்.

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்):

மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை ஸ்மேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவகிரஹங்களில் ஆயுள் காரகனான சனைச்சரனின் அம்ஸமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார்.

எலும்பின் காரகர் சனைச்சர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்க்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியில் இருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். திருமயிலையின் சிவஸ்தல்ங்களில் முதன்மையாக திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரஹ தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

என்ன வாசகர்களே! நவகிரஹ ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே என கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரஹங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?

8. அருள்மிகு முண்டக கண்ணியம்மன் (ராகு ஸ்தலம்):

திருமயிலையின் மருத்துவச்சி என போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுனீர் வினாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையை கடந்து சென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவை காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருகோயிலின் பின் புறம் அமைந்திக்கிறது.

இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது. ஜோதிடத்தில் மருத்துவத்திற்க்கு ராகுவின் அருள் இருக்கவேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்):

ஜோதிடத்தில் துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாம திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ என்ற சிறப்பைப் பெற்றது போலும். இந்த சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்களை தரிசித்து நவகிரஹங்களையும் தரிசித்த பலனை பெறுவோம்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
There are seven Sapthasthana (Saptha meaning seven) temples for Shiva in Mylapore worshipped by the Saptha rishis – Adri, Brigu, Kutsa, Vashishta, Gautama, Kasyapa and Angirasa. Originally they were all part of a single temple but in due course they have become separate temples. It is highly powerful to worship all the seven deities in a single trip.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more