திருமலை பிரம்மோற்சவம்: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசுவாமி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது. கொரோனா பரவலை முன்னிட்டு மலையப்பசுவாமி ஏகாந்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
முதல்நாள் ஷேச வாகனங்களிலும் மறுநாள் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளினார். பெருமாளிடம் நம் மனதைத் தூய்மையாக்கி ஆத்மநிவேதனம் செய்து ஒப்படைப்பவனையே பகவான் ஏற்கிறார் என்பதை விளக்கவே இந்த அன்னப்பறவை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தீயோர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதை அறிவுறுத்தும் வாகனம் சிம்ம வாகனம். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியைத் தரிசித்தால், நமக்கு எதிரிகளின் தொல்லை இருக்காது என்பது ஐதிகம். அன்றைய தினம் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலத்தார். நன்முத்துக்கள் குளிர்ச்சிக்கு அடையாளம். சந்திரன் உச்சம் பெறும் தலமான திருவேங்கடத்தில் முத்துப்பந்தல் மிகவும் சிறப்பானது.
பிரம்மோற்சவ விழாவின் 4வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளை இந்த வாகனத்தில் தரிசனம் செய்தால் மலையப்பசுவாமி கேட்கும் வரங்களை தருவார். கேட்டதை தரும் மரம், கற்பக விருட்சம். அதே போன்று கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்ய கேட்கும் வரங்களோடு கேட்காத வரங்களையும் வாரி வழங்குவார் பெருமாள்.
நேற்றிரவு சர்வ பூபால சேவையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிர்வாக அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐந்தாம் நாளான இன்று காலையில் மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். மகாவிஷ்ணு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார். எனவே, மோகினி அவதாரத்தில் வலம் வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை என்னும் அமிர்தம் பொங்கும் என்பது ஐதிகம்.
பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலையும், கிளி மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது காலம் காலமாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு இன்றைய தினம் கருட வாகன சேவை நடைபெறுவதை முன்னிடு மலையப்பசுவாமி அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்தமாலை, வஸ்திரம், கிளி ஆகிய மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. சுமார் 7 அடி நீளம் உள்ள பல வண்ண மலர்களால் கட்டப்பட்ட மாலை, பட்டுப் பரிவட்டம், கிளி ஆகியவை ஆண்டாளுக்கு சூட்டப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள், கிளி, வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மாடவீதி வழியே ஊர்வலமாகக் கொண்டு வந்து பின்னர் கார் மூலம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் மடத்தில் மங்கலப் பொருட்கள் திருமலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் இன்று இரவு எழுந்தருளுவார். பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள் கருதப்படுகிறது. அதனால் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 முதல் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை, கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஏகாந்தமாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.