• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரட்டாசி 4வது சனி: புத்திரபாக்கியம் தரும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பனை வழிபடுவதால் நோய்கள் நீங்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இது நம்மாழ்வார் அவதார தலம்.108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இங்குள்ள மூலவர் திருவாழ்மார்பர். இங்கு தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். இன்றைய நலம் தரும் ஆலயத்தில் திருவாழ்மார்பர் பற்றி அறிந்து கொள்வோம்.

கருவறையில் மூலவர் திருவாழ்மார்பன் 2.24 மீட்டர் உயரம் வலதுகாலை மடக்கி இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்த கோலம் நான்கு கரங்கள் பின் கைகள் சங்குசக்கரம் ஏந்தியவை, முன் இரண்டும் அபய வரத முத்திரை காட்டுபவை. கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம். மூலவர் கடுசர்க்கரை படிமம். திருமஞ்சனம் இல்லை. மூலவரின் பின் சுவரில் அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாசர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, கௌதமர் ஆகியோர் புடைப்புச் சிற்பங்களாய் உள்ளனர். திருவாழ்மார்பன் இத்தலத்தில் பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவி சகிதம் இருக்கிறார்.

Thirupathisaram Temple in Thirparappu in Nagercoil, Kanyakumari

தலபுராணம்:

திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் நரசிம்ம அவதார கதையுடன் தொடர்புடையது. நரசிம்மர் இரணியனை வதம் செய்தபின் தன் சினம் மாறாமல் நின்றார் அவரது ஆசுவாசம் அடங்கவில்லை, பிரபஞ்சம் நடுங்கியது. இரணியனின் மகனான பிரகலாதன் நரசிம்மனைத் துத்தித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர்மீது அமர்ந்து தவம் செய்தார், பெருமாள் அமைதியானார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக் கொண்டார் அந்த கோலத்தில் குடிகொண்டது இந்த கோயில் லட்சுமியை மார்பிலே இருத்திக்கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய இலக்குமி தன் பதியாகிய விஷ்ணுவை சார்ந்து இவ்வூரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது.

சப்தரிஷிகளுக்கு காட்சி

சுசீந்திரம் கோயில் தலபுராணத்தில் இவ்வூர் பற்றிய கதை வருகிறது. ஒருகாலத்தில் சுசீந்திரம் ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு சிவ வடிவில் காட்சி அளித்தார். முனிவர்கள் திருமால் வடிவில் சிவனைக் காணவிரும்பினர். அதற்காக சோமதீர்த்தம் என்ற இடத்தில் தவம் செய்தனர். அப்போது திருமால் காட்சியளித்த கோலமே திருவெண்பரிசாரம். இதனால் திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்னமூர்த்தியாக அமர்ந்து அருள்புரிகிறார். திருப்பதிசாரம் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஊர்.

Thirupathisaram Temple in Thirparappu in Nagercoil, Kanyakumari

தல வரலாறு

இத்திருத்தலம் பற்றி ஒரு கதை வழங்கப்படுகிறது. ஒருமுறை வேணாட்டு மன்னன் ஒருவனின் வெள்ளை நிற குதிரை தொலைந்து போயிற்று. காவலர்கள் பல இடங்களில் தேடினர் மன்னரும் தேடிச் சென்றார். அது சோமதீர்த்த கரையில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடத்திற்குத் திருவெண்பரிசாரம் எனப் பெயரிட்டார். சோம தீர்த்தத்தில் நீராடி அங்கு கோயில் கொண்ட திருமாலை வணங்கினார். கோயிலையும் பெரிதாகக் கட்டினார்.

குழந்தை வரம்

குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம்.

ஆழ்வார் திருநகரி

பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்) திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,' என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளியமரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இவர் இறைதியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.

கல்வெட்டுக்கள்

இக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன இவற்றில் முதல் கல்வெட்டு கி.பி.1029 ஆண்டினது இது இரண்டு வரி கல்வெட்டு மலையாள ஆண்டு 304 (1129) விழிஞம் என்ற இரஜேந்திரகோடி பட்டணத்தில் (இன்றைய திருவனந்தபுரம்) வாழும் இராமநாதன் செட்டி என்பவர் இக்கோயிலுக்குக் கொடுத்த நிபந்தம் பற்றியது. முதல் உட்பிரகாரத்தில் கிழக்கு சுவரில் 1614ஆம் ஆண்டு கல்வெட்டு உள்லது சம்பு நாராஉஅண நம்பி என்பவர் இக்கோயில் திருவோண நட்சத்திரத்தில் விழா நடத்த 150 பணம் நிபந்தமாக கொடுத்துள்ளார்.

அமைவிடம் :

நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில் சுமார் ஆறு கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ளது திருப்பதிசாரம். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பதிசாரத்துக்கு மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பேருந்துகள் உள்ளன.

English summary
Thiruppathisaram is also known as Thiruvanparisaram. This temple is situated in the north-east of Nagercoil in Kanyakumari district around 3.5 km from Nagercoil city centre. The place derives its name from a 5000 year old temple dedicated to Thiruvazhimarban (Lord in whose heart Thiru-Goddess Padmavati abodes) Lord Vishnu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X