For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையா? திருவிடந்தைக்கு வந்தால் தை மாதத்தில் டும்.. டும்.. டும்

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

மார்கழி முடிந்து தை பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடைபெறவில்லை என்பதே ஆகும். திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகும்.

திருமண தடை ஏற்படுத்தும் தோஷங்கள்

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்

ராகு - கேது தோஷம்


லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம்

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்

சூரிய தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதார யோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.

களத்திர தோஷம்

களத்திர தோஷம்

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும்.

புணர்ப்பு தோஷம்

புணர்ப்பு தோஷம்

ஓருவருடைய ஜாதகத்தில் மனோ காரகன் சந்திரனும் கர்ம காரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படுத்தும் தோஷமாகும்.

இன்றைய சூழ்நிலையில் பெண்களை விட ஆண்களே திருமண தடையால் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலை நிலவுகிறது. முக்கியமாக திருமணத்திற்கு பெண்கள் குறைந்து வருவதால் ஆண்களின் நிலை பரிதாபமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பல குடும்பங்களில் வம்ச விருத்தி என்பதே இல்லாத நிலை ஏற்படும்.

 கெட்டிமேளம் கொட்ட வைக்கும் திருவிடந்தை

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் திருவிடந்தை

எத்தகைய கிரஹ தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கவலை பட வேண்டாம். திருவிடந்தை சென்றால் திருமணம் கூடும். சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.

திருவிடந்தை ஸ்தல வரலாறு

திருவிடந்தை ஸ்தல வரலாறு

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

கண்ணிகை தவம்

கண்ணிகை தவம்


சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.

காலமுனிவரின் பெண் குழந்தைகள்

காலமுனிவரின் பெண் குழந்தைகள்


360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள்.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

திவ்ய தேசங்களில் முக்கியமான் ஒன்று திருவிடந்தை

திவ்ய தேசங்களில் முக்கியமான் ஒன்று திருவிடந்தை

வரலாற்று புகழ்பெற்ற திருவிடந்தை கோயில் திவ்ய தேசங்கள் 108ல் 62வது திவ்யதேசமாகவும், தொண்டை நாட்டில் உள்ள திருப்பதிகள் 22ல் சீரும் சிரப்புமாக விளங்குகிறது திருவிடந்தை கோவில். திருமங்கை ஆழ்வாரால் இத்திருக்கோயில் 'மங்களாசாசனம்' செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் என்று வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ஆதிவராகர்

ஸ்ரீ ஆதிவராகர்


ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம். கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.

திருஷ்டி தோஷம் போக்கும் உற்ச்சவர்

திருஷ்டி தோஷம் போக்கும் உற்ச்சவர்

உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் இங்கே ஜோடிகளாக வலம் வருவது. தனியாக வருபவர்கள், திருமணம் உடனே நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள்.

திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும். இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள். இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.

அமைவிடம் : சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

English summary
Sri Nithya Kalyana Perumal Temple is located at ‘Thiru Ida Venthai’ (Thiruvidanthai), South Chennai, state of Tamilnadu and also revered as one of the 108 Divya Desam temples, dedicated to Lord Vishnu. Sri Nithya Kalyana Perumal temple is believed to be built by the Pallavas. The presiding deity of this Sri Nithya Kalyana Perumal Temple is Lord Sri Nithya Kalyana Perumal also called as Lord Sri Lakshmi Varaha Swamy (Lord Vishnu), who stands on an Adisesha. Goddess Komalavalli Nachiyaar, consort of Lord Sri Nithya Kalyana Perumal, is found on the left thigh of Lord Nithya Kalyana Perumal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X