திருப்பதி பிரம்மோற்சவம் : ஏழுமலையான் கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் - 5 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்றைய தினம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவதால் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். பிரம்மாவும் சிவனும் இணைந்து திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தினர் என்பது புராண கதை.
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது.மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
பிரம்மோற்சவ விழா வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. 12ஆம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14ஆம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15ஆம் தேதி காலை சக்கர ஸ்நானமும் அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. காலை 7 மணியில் இருந்து தூய்மைப்பணிகள் தொடங்கியுள்ளன. பகல் 12 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படுகிறது. அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நைவேத்தியம் செய்யப்படும்.
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால் விஐபி பிரேக் தரிசனம் சிபாரிசு கடிதங்கள் இன்று தரப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் கோவில் முழுவதும் அலங்கரிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருக்குடைகள் ஊர்வலம்
தமிழக பக்தர்கள் சார்பில் பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரும் 10ஆம் தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரமோற்சவத்தின் 5 ஆம் நாளில் கருட சேவையின் போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.
இன்று பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 9ஆம் தேதி திருச்சானூர் தாயார் கோவிலில் 2 திருக்குடைகளும், 10ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
அரசின் கட்டுப்பாடு காரணமாக, மேற்கண்ட திருக்குடை ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருக்குடை கமிட்டியினருக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் வீட்டில் இருந்தே தரிசிக்க வசதியாக, 3-ந்தேதி (இன்று), 5-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகள், TirupatiKudai என்ற முகநூல் பக்கத்திலும் RR. GOPALJEE என்ற யூ-டியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடை பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளை தரிசிக்கலாம்.
சேலம் அருகே மகனுக்கு விஷ ஊசிப்போட்டு கருணைக்கொலை செய்த தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது
வரும் 9ஆம் தேதி திருப்பதி திருக்குடை கமிட்டியினர், தமிழக பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். இந்து தர்மார்த்த சமிதியால் நடத்தப்படும் திருப்பதி திருக்குடை ஆன்மிக நிகழ்வுக்கு, நன்கொடைகள், உண்டியல் வசூல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 73730 99562, 73730 99545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.