For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருக்கார்த்திகை திருவிழா முருகன் ஆலயங்களில் கோலாகலத் தொடக்கம் - பக்தர்கள் தரிசனம்

திருக்கார்த்திகை தீப திருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலிலும் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

மதுரை: சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான ஆறு தீப்பொறிகளின் மூலம் அவதரித்தவர் முருகன். அந்த தீப்பொறிகள் பிள்ளைகளாக உருவாக அவர்களை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக முருகனுக்கு கார்த்திக்கேயன் என்ற பெயரும் உண்டு. கார்த்திகை மாதம் கார்த்திக்கேயனுக்கும் உகந்த மாதம். கார்த்திகை நட்சத்திர நாளில் வரும் பவுர்ணமி நாளை திருக்கார்த்திகை நாளாக தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதத்தில் முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபடுகின்றனர். திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெறுவதைப்போல முருகப்பெருமான் ஆலயங்களிலும் தீபத்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று காலை 9.45 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமானின் அருள் பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்திற்கு பால், பன்னீர் இளநீர் மற்றும் புனித நீர் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தர்ப்பைப்புல், மா இலை மற்றும் பூமாலை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடியேற்றப்பட்டது.

இதனை அடுத்து கொடி கம்பத்திற்கும் சாமிக்கும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் தினமும் ஒரு வாகனத்திலுமாக தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9ஆம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் தேதி காலையில் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

கார்த்திகை மகா தீபம்

கார்த்திகை மகா தீபம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பானை தீப காட்சி நடக்கிறது. மறுநாள் தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

சுவாமிமலையில் கொடியேற்றம்

சுவாமிமலையில் கொடியேற்றம்

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 4வது படை வீடாக கருதப்படுகிறது. முருகன் தனது தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. இங்கு முருகன் சிவகுருநாதனாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் திருக்கார்த்திகை நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

தோரோட்டம்

தோரோட்டம்

இதனையொட்டி ஞாயிறு கிழமை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. இன்று படி சட்டத்தில் சாமி வீதி உலா, நடக்கிறது. அதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கு, பூத கணம், ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், யானை, காமதேனு, வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. 10ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று தேரோட்டம் நடக்கிறது. 11ஆம் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 12ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை

கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் வருகிற 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும். கார்த்திகை தீபத்தையொட்டி 300 மீட்டர் பருத்தி துணியில் திரி தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணி முடிவடைந்து, பிரமாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட திரியை கோவில் ஊழியர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் அளவு கொண்ட இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொப்பரையில் ஊற்றும் பணி தொடங்கியுள்ளது. 10ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்.

English summary
Thirukarthigai Deepam festival Murugan Temples Arupadadai Veedugal, the 10 days of the main event of the year, the commenced in the early hours of yesterday morning, December 2, with the flag hoisting. A large number of devotees attended the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X